சமூக சேவையை ஆன்மீக பயிற்சியாக கருதலாமா?

1. சமூக சேவை மற்றும் ஆன்மீக பயிற்சியை பற்றிய பொதுவான கருத்துக்கள்

ஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளை (எஸ்.எஸ்.ஆர்.எஃப்., SSRF) மற்றும் மஹரிஷி ஆன்மீக பல்கலை கழகம் நடத்தும் ஆன்மீக செயல்பாட்டு முகாம்களுக்கு வரும் புதிய ஸாதகர்களில் சிலர்  தங்கள் ஆன்மீக பயிற்சியை அதிகரிக்கவோ, மக்களுக்கு உதவவோ அல்லது தங்களின் வாழ்க்கையின் குறிக்கோளாகவோ ஏதாவது ஒரு சமூக சேவையில் பங்கு கொள்ள வேண்டும் என விரும்புகின்றனர். ஏழைகளுக்கு உதவுதல், மருத்துவ உதவிகள் அளித்தல், வசதியில்லாத குழந்தைகளுக்கு கல்வியறிவு அளித்தல், தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்குதல், பேரழிவு காலங்களில் மக்களுக்கு உதவி செய்தல், வயதானவர்களைக் கவனித்துக் கொள்ளுதல் போன்ற சமூக சேவைகளில் ஈடுபட்டிருக்கும்போது பலர், அதை கடவுளுக்கு செய்யும் சேவையாக உணர்கிறார்கள். இது போன்ற நடவடிக்கைகளாலும் மற்றவர்களுக்காக செய்யப்படும் தனிப்பட்ட தியாகத்தாலும் அவர்களின் ஆன்மீக முன்னேற்றம் உறுதி என்று நம்புகிறார்கள். இதைப் போன்ற ஆர்வம் கொண்ட ஆயிரக்கணக்கான தொண்டர்களை, பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்  தங்கள் சேவைக்காக பயன்படுத்திக் கொள்கின்றன. இந்த உலகை வாழ்வதற்கு சிறந்த இடமாக மாற்றுவதற்கான உன்னத நோக்கத்தை அவர்கள் கொண்டுள்ளார்கள். சில நேரங்களில், ஒருவர் தான் ஒரு  ஸாதகர் என்று அறியாமலேயே ஸாதகருக்குரிய குணங்களுடன் விளங்கலாம். அவர்கள் பிறவியிலேயே தங்களிடமுள்ள ஸாதகருக்குரிய குணங்களான தியாகம், மற்றவரைப் பற்றி சிந்திப்பது ஆகியவற்றை உபயோகித்து சமூக சேவையில் ஈடுபடுகின்றனர். ஏனெனில், ஆன்மீக முன்னேற்றமடைய மக்களுக்கு உதவுவதைத்  தவிர வேறு வழி உள்ளதா என்பது பற்றி அவர்களுக்குத் தெரிவதில்லை.

ஏழை மற்றும் தாழ்ந்தவர்களுக்கு உதவி செய்வது, தெய்வத்திற்கு செய்யப்படும் தொண்டு என்பது உலகின் பொதுவான கருத்தாகும். சமூகத்தில் அதற்கென்று தனி மரியாதை உள்ளது. எனவே, சமூக சேவை என்பது ஆன்மீக பயிற்சிக்கு சமமானது இல்லை  என நாம் அவர்களுக்கு அறிவிக்கும்போது சில ஸாதகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுவது புரிந்து கொள்ளக் கூடியதே. ஆனால், உலகில் உள்ள ஆன்மீகத் தலைவர்கள் என தங்களைக் கூறிக் கொள்ளும் பலர், மனிதாபிமான நடவடிக்கைகளை தீவிரமாகப் பரப்புவதில் ஈடுபடுவதால், ஸாதகர்கள் குழப்பமடையக்கூடும்.

எனவே, ஏன் சமூக சேவையில் செய்யப்படும் உண்மையான முயற்சிகள், ஆன்மீக பயிற்சிக்கு சமமானதாக கருதப்படுவதில்லை, அதோடு அது ஸாதகர்களுக்கு தேவையான ஆன்மீக முன்னேற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை? இன்றைய உலகில் இதை புரிந்து கொள்வது சுலபமானது இல்லை என்றாலும், இந்த கட்டுரையில், இந்தக் கருத்தின் பின்னால் உள்ள நியாயத்தை நாம் விளக்கி உள்ளோம்; அதன் மூலம் ஆன்மீக முன்னேற்றத்திற்காக உண்மையாக முயற்சிக்கும் ஸாதகர்கள் தங்கள் நேரத்தையும் முயற்சியையும் சரியான விஷயத்திற்கே செலவிட வேண்டும் என்பதே நம் நோக்கம்.

2. அடிப்படை ஆன்மீக கருத்துக்களை புரிந்து கொள்ளுதல்

நாம் மேலும் தொடர்வதற்கு முன், நமது வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படை ஆன்மீக கருத்துக்களை இங்கு சுருக்கமாக தந்துள்ளோம். அப்பொழுதுதான் இவ்விஷயத்தைப் பற்றிய ஆன்மீக கண்ணோட்டத்தை நாம் முன்வைக்கையில், நாம் அனைவரும் ஒரே நிலையில் புரிந்து கொள்ள முடியும்.

நாம் எதனால் ஆக்கப்பட்டுள்ளோம்  என்பதிலிருந்து ஆரம்பிக்கலாம். ஒவ்வொரு மனிதனும் உடல், பிராணசக்தி ( ஆன்மீக சக்தி அல்லது உயிர் சக்தி), மனம் (இது முந்தைய பிறப்புகளின் எண்ணப்பதிவுகளை அடிப்படையாகக் கொண்ட உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளின் மையம்), புத்தி (இது நம் முடிவெடுக்கும் திறன் மற்றும் பகுத்தாராயும் திறன்), சூட்சும அகம்பாவம் மற்றும் ஆத்மா (நம் ஒவ்வொருவரின் உள்ளிருக்கும் இறை  தத்துவம் ) ஆகியவற்றைக் கொண்டுள்ளான். நாம் இறக்கும் போது, ​​இந்த பூமியிலேயே உடலை விட்டுவிட்டு நமது சூட்சும உடல், இறப்பிற்கு பின்னுள்ள அடுத்த நிலைக்கு செல்கிறது. சூட்சும உடல் என்பது மனம், புத்தி, சூட்சும அகம்பாவம் மற்றும் ஆத்மா ஆகியவற்றை உள்ளடக்கியது.  அனைத்து மனிதர்களும் மகிழ்ச்சியை தேடுகின்றனர், அதற்கு தங்களது ஐம்புலன்கள், மனம் மற்றும் புத்தி ஆகியவற்றை உபயோகிக்கின்றனர். இருப்பினும், மகிழ்ச்சி என்பது  நிலையற்றது. ஏனென்றால், ​நம்முடைய மகிழ்ச்சி அடிப்படையாகக் கொண்டிருக்கும் விஷயங்கள், மாற்றத்திற்கு உட்பட்டவை.

ஆனால் ஆத்மா என்பது தெய்வாம்சம் பொருந்தியது. அதுவே எப்பொழுதும் நிலைத்திருக்கும் நம் இயல்பான தன்மை. ஆத்மாவின் தன்மையை சத்தியம், சித்தம் மற்றும் ஆனந்தம் நிறைந்தது என்று விவரிக்கலாம். ஆனந்தம் என்பது மகிழ்ச்சியின் உச்சக்கட்ட நிலை, அது என்றும் மாறாத இறை தத்துவத்தின் பண்பு ஆகும். நம் அனைவருக்குள்ளும், ஆத்மாவின் ஆனந்தம் உணரப்பட வேண்டி காத்திருக்கிறது. இருப்பினும், நாம் அதை அணுக முடியாத நிலையில் உள்ளோம். ஏனென்றால், ஐம்புலன்கள், மனம் மற்றும் புத்தி ஆகியவற்றினால் கிடைக்கும் சிற்றின்பத்தை , மனநிறைவை அனுபவிப்பதில் குறியாய் உள்ளோம்.

ஆன்மீக பயிற்சி, நமது உண்மையான இயல்பு தெய்வீகமானது என்பதை புரிந்து கொள்ள நமக்கு உதவுகிறது. அதோடு, “நாம்” என்பது உண்மையில், ஐம்புலன்கள், மனம், மற்றும் புத்தியைக் குறிக்காமல், நம் ஆத்மாவைக் குறிக்கின்றது என்பதை புரிந்து கொள்ளவும் உணரவும் வைக்கிறது. நம் ஐம்புலன்கள்,மனம், புத்தி மற்றும் நம்மைச் சுற்றியுள்ள உலகம் ஆகியவற்றுடன் கூட சூட்சும உலகமும் (ஆன்மீக பரிமாணம்) சேர்ந்ததே மாயை என்று அழைக்கப்படுகின்றது.  இது நம்மை நம்முடைய உண்மை நிலையான ஆத்மா அல்லது இறை தத்துவத்தை உணர முடியாமல் பிரித்து வைக்கிறது.

மேலும், நம்மில் பெரும்பாலானவருக்கு இது முதல் பிறப்பும் அல்ல இறுதியான இறப்பும் அல்ல. கர்மவிதியின்படி, பலருடன் நமக்குள்ள கொடுக்கல்-வாங்கல் கணக்கைத் தீர்த்துக் கொள்ள நாம் பிறப்பு மற்றும் இறப்பு என்ற சக்கர சுழற்சியில் பலமுறை சிக்க வேண்டி உள்ளது.

நாம் மற்றவர்களை காயப்படுத்தி, அவர்களுக்கு வலியை கொடுக்கும் போது, ​​ அவர்களுடன் எதிர்மறையான கொடுக்கல்-வாங்கல் கணக்கை உருவாக்குகிறோம். கர்மவிதியின்படி, அவர்களிடமிருந்து அதே அளவு வேதனையை நாம் திரும்பப் பெற வேண்டும். இதையே பொதுவாக, செய்த பாவத்திற்கு கிடைக்கும் பலன் என்று கூறுகிறோம். மாறாக, ஒருவர் மற்றவர்களுக்கு நன்மை செய்து அதனால் அவர்கள் மகிழ்ச்சியை அனுபவிக்கும்போது, ​​அவருக்கு புண்ய பலன் கிடைக்கிறது. அந்த நன்மைகளின் பலன்களை அனுபவிப்பதற்காக மறுபடியும் அவர் திரும்ப பிறக்க வேண்டும். ‘தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்பதன் பொருள் இதுதான். இந்த கொடுக்கல்-வாங்கல் கணக்கு நம் ஆழ்மனதில் பதிவாகிறது. இன்றைய காலகட்டத்தில், நம் வாழ்க்கையின் சுமார் 65% நிகழ்வுகள் முந்தைய பிறப்புகளிலிருந்து வரும் கர்மாவை அடிப்படையாகக் கொண்டவை. மீதமுள்ள 35 சதவிகிதத்தை நமது விருப்பத்திற்கு ஏற்ப இந்த பிறப்பில் வாழ்ந்து கொள்ளலாம். இந்த 35% -ஐ மற்றவர்களுக்கு உதவ பயன்படுத்தும்போது அதனால் மற்றவர்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சியால் புண்ய பலனான கொடுக்கல்-வாங்கல் கணக்கு ஏற்படுகிறது. இந்த கட்டுரையின் நோக்கத்திற்காக இதை புரிந்து கொள்வது அவசியமாகிறது.

புண்ய பலன், பாவ பலன் ஆகிய இரண்டுமே நம்மை பிறப்பு-இறப்பு சக்கர சுழற்சியில் உழல வைக்கின்றன; ஒட்டுமொத்த கொடுக்கல்-வாங்கல் கணக்கின் ஒரு சிறு பகுதியைத் தீர்த்துக் கொள்ள நாம் திரும்பத் திரும்ப பிறக்க வேண்டி உள்ளது. இதை நாம் புரிந்து கொள்வது மிகவும் அவசியம். ஐம்புலன்கள், மனம் மற்றும் புத்தி ஆகியவை மாயையோடு சம்பந்தப்பட்டவையே அன்றி நம் உண்மை நிலையான ஆத்மாவோடு சம்பந்தப்பட்டவை அன்று என்ற ஞானத்தை, புண்ய பலன்கள் அல்லது பாவ பலன்களை உருவாக்கும் நடவடிக்கைகளின் மூலம் நம்மால் புரிந்து கொள்ளவோ அனுபவிக்கவோ முடியாது. அதனால் இவ்விரு நடவடிக்கைகளுமே ஆன்மீக பயிற்சி ஆகாது.

நம் ஆன்மீக வாழ்வின் நோக்கம் இரண்டு; ஒன்று, நம்முடைய கொடுக்கல்-வாங்கல் கணக்கை தீர்த்துக் கொள்வது (நேர்மறை அல்லது எதிர்மறை); மற்றொன்று, ஆன்மீக பயிற்சியின் மூலம் ஆன்மீக முன்னேற்றம் அடைவது ஆகும்.

இந்த அடிப்படையான ஆன்மீக மற்றும் வாழ்க்கைக் கருத்துகளைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள பின்வரும் கட்டுரைகளைப் படிக்க பரிந்துரைக்கிறோம்.  ஒவ்வொரு தலைப்பின் விரிவான விளக்கங்கள் அவற்றில் உள்ளன.

3. சமூக சேவையின் மூலம் மக்களுக்கு உதவுவது ஏன் ஆன்மீக பயிற்சிக்கு சமமானது ஆகாது 

நாம் (ஆன்மீக முன்னேற்றத்தை நாடும் ஸாதகர்கள்) சமூக சேவையில் ஈடுபட வேண்டுமா என்பதை தீர்மானிக்கும் போது கீழ்க்கூறிய விஷயங்களை மனதில் கொள்ளவேண்டும்.

 1. துன்பத்திற்கான மூல காரணம்: மக்கள் துன்பப்படுவதற்கான மூல காரணம், அவர்கள் கடந்த பிறவிகளில் பாவங்களைச் செய்ததால், எதிர்மறையான கொடுக்கல்-வாங்கல் கணக்கை அல்லது எதிர்மறை கர்மாக்களை அனுபவிக்க வேண்டி உள்ளது. இதன் விளைவாக அவர்கள் இந்தப் பிறவியில் துயரத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மற்றொருவர் கஷ்டப்படுவதைக் காண்பது எளிதானது அல்ல, அவர்களுடைய துன்பத்தை போக்க நாம் நினைப்பது இயற்கையானதே. ஆனாலும், மக்கள் கஷ்டப்படும்போது ஆன்மீக நிலையில் நம்மை நாமே கேட்க வேண்டிய கேள்வி, கடவுள் இதை கவனிக்கவில்லையா? பின் ஏன் அவர் தலையிடவில்லை? கடவுள் சர்வ வல்லமை படைத்தவர்; ஒரு நொடியில் ஒரு நபரின் துன்பத்தை ஒழிக்க அவரால் முடியும். இருந்தாலும் அவர் ஏன் தலையிடுவதில்லை என்றால் மாயையில் முழுவதும் முழுகியிருப்பவர் மாயையின் விதிகளுக்கு கட்டுப்பட்டவர் ஆகின்றனர். இத்தகைய மக்கள் (உலகின் பெரும்பான்மையான மக்கள்தொகை) மற்றவருக்கு துன்பம் அளிக்கும் தங்களின் செயல்கள் அல்லது செயலின்மையின் பலனை அனுபவித்தே ஆக வேண்டும். இறைவனின் ஸாம்ராஜ்யத்தில் எல்லாமே நியாயமானவை. ஒருவர் மற்றவருக்கு துன்பம் அளித்தால் அந்த தீய கர்மாவின் பலனை அவர் அனுபவித்தே ஆக வேண்டும். இறைவன் இந்த விதிகளை புறக்கணித்து அவர்களின் துன்பத்தை நீக்குவதில்லை.
  கலவரம் நிறைந்த இந்த கலியுகத்தில் உள்ள சராசரி நபருக்கு, பொருள் சார்ந்த, உணர்வு சார்ந்த மற்றும் அறிவு சார்ந்த தேவைகளே அவர்களின் செயல்பாடுகளின் முக்கிய உந்து சக்தியாக உள்ளன.  அவர்கள் மாயையில் மூழ்கியிருப்பதால், கர்மவிதியும் விறைப்பாக உள்ளது. அவர்கள் விதைத்ததை அவர்களே  அறுவடை செய்தாக வேண்டும் – தற்போதைய பிறப்பில் இல்லாவிட்டாலும் அடுத்த  பிறப்பில் அனுபவித்தாக வேண்டும்,  இதில் கடவுள் தலையிட மாட்டார்.
 2. எனவே கடவுள் யாருக்கு உதவி செய்கிறார்: கடவுள், உண்மையிலேயே தன்னை அடைய விரும்பும் மக்களுக்கு உதவி செய்ய மட்டுமே தலையிடுகிறார். தங்கள் ஆன்மீக பயிற்சி காரணமாக இத்தகைய மக்கள் மாயையின் மீதுள்ள பற்றை அறுத்து (பெரும்பாலான மக்கள் இந்த மாயையை உண்மை என்று கருதுகின்றனர்), மாயைக்கு அப்பால் உள்ள தெய்வத்தை மட்டுமே அடைய நினைக்கிறார்கள். அத்தகைய ஸாதகர்களின் தேவைகேற்ப கடவுள் தலையிட்டு அவர்களது ஆன்மீக பயிற்சியில் ஏற்படும் தடைகளை நீக்கி, அவர்களுடைய ஆன்மீக முன்னேற்றத்துக்கு உதவுகிறார். எனவே, கடவுள் மனோரீதியாக உதவாமல், ஆன்மீக ரீதியில் மட்டுமே உதவுகிறார்.
  (ஆன்மீக பயிற்சியானது 6 ஏற்ப இருந்தால் மட்டுமே அது பயனுள்ளதாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.)
 3. நன்கொடை அளிக்கும் போது என்ன நடக்கிறது: தொண்டு நிறுவனங்கள், என்.ஜி.ஓ. -க்கள் அல்லது ஏழை மக்களுக்கு நன்கொடை அளிக்கையில், அது மனோ ரீதியாக செய்யப்படுவதால், அது நம்மை மேலும் மாயையில் சிக்க வைக்கிறது. ஏனென்றால், இது போன்ற மாயையில் செய்யும் நல்ல செயல்களால் ஒருவருக்கு புண்ய பலன் ஏற்படுகிறது. நன்மைகளைத் தீர்ப்பதற்கும் மறுபிறவி எடுத்து நல்ல விதியை அனுபவிக்க வேண்டி இருக்கும். ஆன்மீக பயிற்சி ஒன்றே ஒருவரின் கர்மாவை பஸ்மமாக்கி, பிறப்பு-இறப்பு சுழற்சியிலிருந்து விடுவிக்கிறது. ஒருவர் சேர்த்து வைத்துள்ள சஞ்சித கர்மாவின் (ஒட்டுமொத்த கணக்கு) புண்ய பாவங்களையும் அழிக்கிறது. அதனால் ஆன்மீக கண்ணோட்டத்திலிருந்து மட்டும் பார்த்தால், சமூக சேவையின் மூலம் மக்களுக்கு உதவி செய்து நேரத்தை வீணடிப்பதற்கு பதிலாக, தன்னுடைய ஆன்மீக பயிற்சியையும் மேம்படுத்திக் கொண்டு, மற்றவர்களும் ஆன்மீக முன்னேற்றமடைய உதவுவது சிறந்தது. மற்றவர்கள் ஆன்மீகத்தில் முன்னேற உதவுவதே உண்மையான உதவியாக ஆன்மீக கண்ணோட்டத்தில் கருதப்படுகிறது. தர்ம பிரசாரம் செய்வதும் மற்றவர்களின் ஆன்மீக முன்னேற்றத்திற்கு உதவுவதுமே மனித குலத்திற்கும் இறைவனுக்கும் செய்யப்படும் உண்மையான சேவை ஆகும்.

  உண்மையான மகான்கள் மற்றும் குருமார்கள், கடவுளுடைய விருப்பத்துடன் ஒத்துப் போகின்ற வகையில், யாருடைய விதியிலும் தலையிட மாட்டார்கள். அதாவது, கொடிய நோய், நிதி பிரச்சினைகள், குடும்ப உறுப்பினர்களுக்கிடையில் சண்டைகள் போன்ற உலக பிரச்சினைகளை குணமாக்க உதவுவதன் மூலம் தங்களின்  நேரத்தை வீணாக்க மாட்டார்கள். கடவுளை அடைய உண்மையான ஆர்வம் கொண்டவருக்கே அவர்கள் உதவுவார்கள். கடவுளை அடைய ஒருவர் உண்மையிலேயே ஆர்வம் கொண்டிருந்தால், அவரின ஆன்மீக முன்னேற்றம் ஏற்பட எல்லா விதங்களிலும் உதவுவார்கள். இறைவனை அடைவதில் தீவிர ஆர்வமும், ஆன்மீக முன்னேற்றம் ஏற்பட அயராத முயற்சியும் ஒரு ஸாதகரிடம் இருக்குமானால், குருவானவர் அவர் மீது அருளைப் பொழிந்து அவரது விதியைக் கூட மாற்றி அமைப்பார்.

 4. சமூக சேவையின் குறுகிய வீச்சு: ஏழைகளுக்கு தர்மம் அளிக்கும் சேவையை ஒருவர் செய்யும்போது, ​​எத்தனை பேருக்கு, எத்தனை காலம் அவரால் உதவி செய்ய முடியும்? நம் ஒவ்வொருவரின் சக்தியும் ஒரு வரையறைக்கு உட்பட்டதே. உதாரணமாக, சில ஏழைகளுக்கு 1000 ரூபாய் கொடுத்தால், அது சில தற்காலிக நிவாரணங்களைக் கொடுத்து, அவர்களுக்கு உணவு கிடைக்க செய்கிறது. ஆனால் இது அவர்களின் நிலைமையை நிரந்தரமாக சரி செய்யாது. ஒரு சில நாட்களுக்கு பிறகு அவர்கள் உணவு வாங்க பணம் இல்லாத நிலை மறுபடியும் ஏற்படுகிறது. இது போல, எத்தனை பேருக்கு ஒருவர் உண்மையிலேயே உதவ முடியும்? ஒருவரிடமுள்ள சக்தியும் வளங்களும் வரையறைக்குட்பட்டவை; ஆனால் இந்த உலகில் பிரச்சினைகள் உள்ள மனிதர்கள் எண்ணற்றவர்கள்.

  ‘ஒருவன், ஒரு மனிதனுக்கு மீனை உணவாக கொடுத்தால் அது அந்த நாளின் பசியை போக்கும், ஆனால் அவனுக்கு மீன் பிடிப்பதற்கு கற்று கொடுத்தால், அது  வாழ்வாதாரத்திற்கு உதவும்’ என்று ஒரு வழக்கு உள்ளது. கிட்டத்தட்ட எல்லா சந்தர்ப்பங்களிலும், விதியே ஒருவரை வறுமையில் தள்ளுகிறது.  ஒரு நபரின் விதியில் அவர் ஏழையாக இருக்க வேண்டும் அல்லது சில பிரச்சினைகளை  சந்திக்க வேண்டும் என்று இருந்தால், ஆன்மீக பயிற்சியால் மட்டுமே எதிர்மறையான கர்மாவைத் பஸ்மமாக்கவும், அவரது பிரச்சினைகளின் தீவிரத்தை குறைக்கவும் முடியும். அதனால், ஒருவருக்கு ஆன்மீக பயிற்சியை கற்றுக் கொடுப்பது என்பது, அவருக்கு சில மீன்களை மட்டுமே தராமல், மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பது போலாகும். இது ஒரு நிரந்தரமான தீர்வை கொடுத்து, பிறப்பு-இறப்பு சுழற்சியை விட்டு வெளியேற உதவும். அதற்கு முதல் படியாக ஒருவர், ஆன்மீக பயிற்சியாக கடவுளின் பெயரை எப்படிப் ஜபிப்பது என்பதை மற்றவர்களுக்கு கற்பிக்கலாம்.

 5. மக்களுக்கு உதவி செய்யும் திறனை அதிகரித்தல்: மற்றவர்களை ஆன்மீக பயிற்சியை ஆரம்பிக்க செய்து, அதை தொடர்ந்து செய்வதற்கு உதவுவதே மிகப் பெரிய உதவி என்பது தெளிவானதால், இப்போது அதை எவ்வாறு இன்னும் திறம்பட செய்யலாம் என்பதை பார்க்கலாம். நாம் ஆன்மீக பயிற்சியை செய்யாமல், மற்றவர்களிடம் ஆன்மீக பயிற்சியை ஆரம்பிக்குமாறு சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை.

  ஒருவர் ஆன்மீக பயிற்சியை செய்ய ஆரம்பித்து, ​​ஆன்மீக நிலையில் முன்னேறும்போது, அவரது வாக்கிலும் செயலிலும் தெய்வீக உணர்வு (சைதன்யம்) நிரம்புவதால், கடவுள் அவரைத் தன் தெய்வீக காரியமான மனித குல மேம்பாட்டிற்கு உதவும் ஒரு கைக்கருவியாக்கிக் கொள்கிறார். ஒரு சராசரி மனிதர் உலக சமாதானத்தை விரும்புவது அல்லது உலகத்தை ஒரு சிறந்த இடமாக மாற்ற  நினைப்பது உண்மையில் சாத்தியமில்லாத பகல் கனவு போன்றது. ஆனால் உன்னத ஆன்மீக நிலையில் உள்ள ஒருவர் ஏதாவது ஒன்றை விரும்பினால், ஒரு குருவின் மனதில் ‘இது நிகழட்டும்’ என்ற ஒரு எண்ணம் தோன்றினால் அந்த நிகழ்வு நடப்பதற்கு அதுவே போதுமானதாக உள்ளது. வேறு ஒன்றும் தேவையில்லை. 80% ஆன்மீக நிலைக்கு மேலே உள்ள ஒரு மகானாலேயே இது சாத்தியமாகும். இது ஏனென்றால், மகான்கள் கடவுளின் வெளிப்பட்ட வடிவமாவர். இறைவனை அடைய ஸாதகர்களை வழிநடத்தும் பிரபஞ்சத்திலுள்ள ஒரு தத்துவமே குரு தத்துவம் ஆகும். ஆன்மீக நிலையில் சிகரத்தில் உள்ள ஒருவருக்கு விருப்பம் கூட தேவையில்லை, அவரின் இருப்பே போதுமானது. இதற்கான ஒரு நல்ல உதாரணம் சூரியன் ஆகும். சூரியன் அதிகாலையில் எல்லோரையும் துயிலெழ வைக்கிறது; மலர்களை மலர வைக்கிறது. இவையெல்லாம் சூரியனின் வெறும் இருப்பாலேயே நடக்கின்றன. சூரியன் யாரையும் எழவோ, மலர்களை மலருமாறோ கூறுவதில்லை. 90% ஆன்மீக நிலைக்கு மேலே உள்ள குருவின் காரியமும் இதைப் போன்றதே.

 6. நம்முடைய நேரத்தை மிகவும் பயனுள்ள முறையில் பயன்படுத்துவது: பூமியில் நம் நேரம் ஒரு வரையறைக்கு உட்பட்டது. ஆன்மீக பயிற்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்த பின், அதுவே நாம் பிறவி எடுத்ததன் ஒரு முக்கிய காரணம் என்பதை உணர்ந்த பின், நமது எல்லா முயற்சிகளும் அதை செயல்படுத்துவதிலேயே குறியாய் இருக்க வேண்டும். எந்த ஆன்மீக பயிற்சி மிக சிறந்தது என்பதை பகுத்தறிந்து தேர்வு செய்ய வேண்டும்.

  இதை மேலும் தெளிவுபடுத்துவதற்கு ஒரு உதாரணத்தை பார்க்கலாம். மூன்று பாதுகாப்பான வங்கிகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு நமக்கு கிட்டுகிறது; அவை முறையே 5%, 10% மற்றும் 11.5% வட்டியை கொடுக்கின்றன என வைத்துக் கொள்வோம். இதில் எந்த வங்கியில் நாம் முதலீடு செய்வோம்? ஒருவர் நிச்சயமாக 11.5% வட்டி தரும் வங்கியையே தேர்ந்தெடுப்பார் அல்லவா.

  வங்கியின் உதாரணத்தை போல், ஸாதகர்கள் எந்த ஆன்மீக பயிற்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது என்பதை தீர்மானிப்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஒரே அளவிலான ஆன்மீக பயிற்சியை  வாழ்நாள் முழுவதும் செய்வதன் மூலம், நம் ஆன்மீக முன்னேற்றத்தில் தேக்க நிலை ஏற்படுகின்றது. மிகச் சிறந்த ஆன்மீக பயிற்சியை தேர்ந்தெடுக்கும் கடமை நமக்கு உள்ளது. நமக்குத் தெரியாது என்பது ஒரு சாக்கு ஆகாது. நம் ஆன்மீக பயிற்சியை எப்படி மேம்படுத்தலாம் என்று தொடர்ச்சியாக கற்கும் நிலையில் நாம் இருக்க வேண்டும்.

  சமூக சேவையில் உள்ள ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், அது நம்மைப் பற்றியே சிந்திப்பதை குறைக்க உதவுகிறது. இது சேவை மனப்பான்மையை நமக்குள் வளர்த்து, தியாகம் செய்ய நமக்கு கற்றுக் கொடுக்கிறது. ஆன்மீக முன்னேற்றத்திற்கு, இந்த குணங்கள் எல்லாமே அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை. எனவே, சமூக சேவை என்பது உண்மையான ஆன்மீக பயிற்சிக்கு கூட்டி செல்லும் ஒரு படிக்கல் போன்றது.

  இருப்பினும், குறைகள் என்ன என்று பார்த்தால்:

  • நமது சஞ்சித கர்மாவில் (ஒட்டுமொத்த கணக்கு) அதிக புண்ய பலன்களை சேர்ப்பதால், அதைத் தீர்ப்பதற்கு மறுபிறவி எடுக்க வேண்டி உள்ளது,
  • மாயை என்பதே உண்மை என்று நம்மை நம்ப வைக்கிறது,
  • நம் மனதில் மனக்கிளர்ச்சி என்ற ஸன்ஸ்காரத்தை பதிய வைக்கும் அபாயம் உள்ளது,
  • மற்றும் நாம் என்னென்ன சாதித்துள்ளோம் என்ற எண்ணம் எழும்போது, நம் கர்வமும், அகம்பாவமும் நிச்சயமாக அதிகரிக்கின்றன.

  இந்த காரணிகள் அனைத்தும் நம் ஆன்மீக முன்னேற்றத்திற்கு தீங்கு விளைவிப்பவை. ஆன்மீகத் தலைவர் என கூறிக் கொள்பவரின் வழிகாட்டுதலின்படி சமூக சேவை செய்தாலும் கூட, ஆன்மீகத்தில் முன்னேறுவது என்பது அரிது. சுயநலமாகவும், தன்னலத்தின் மீது மட்டும் கவனம் செலுத்தும் ஒரு சராசரியான நபருக்கு, முதல் படியாக அவர் குறைந்தபட்சம் மக்களுக்கு உதவுகிறார் என்ற விஷயத்தில் இது சரிதான். இது ‘நானும் என் குடும்பத்தினரும்’ என்ற குறுகிய வட்டத்திலிருந்து இருந்து தங்களை சிறிது உயர்த்திக் கொள்ள உதவுகிறது; மேலும் மற்றவர்களைப் பற்றி சிந்திக்கவும் உதவுகிறது.

  சமூக சேவையை மேற்கொள்பவர்கள், பொதுவாக தங்கள் சொந்த விருப்பத்தின்படியும் / ஒரு நல்ல உணர்வுக்காகவும் செய்கின்றனர்; மேலும் அதை ஒரு ஆன்மீக குருவின் வழிகாட்டுதலின் கீழ் செய்வது இல்லை என்பது இதிலுள்ள இன்னொரு குறைபாடு. எனவே, சமூக சேவை நல்லது என்று மனதில் உள்ள எண்ணத்தை பதிவுசெய்து கொள்கின்றனர்; ஒவ்வொரு பிறப்பிலும் அதிலேயே விருப்பம் காட்டுகின்றனர். இவ்வாறு ஒரு ஸாதகர், எந்த ஆன்மீக முன்னேற்றமும் இல்லாமல் பல பிறப்புகளை வீணடிக்கக்கூடும்.

  கடவுளை அடைய விரும்பும் உண்மையான ஸாதகர்கள்,  நேரத்தை வீணடிக்காமல், தங்களின் ஆற்றலை ஆன்மீக பயிற்சி செய்வதற்காகவும், கடவுளை அடைவதற்காகவும் செலவிட வேண்டும்.

 7. கர்மயோகத்தின்படி: சிலர் கர்மயோக பாதையை தாங்கள் பின்பற்றுவதால் சமூக சேவையில் ஈடுபடுவதாகக் கூறுகிறார்கள். உண்மையில், கர்மயோகத்தைக் கடைபிடிக்க இரண்டு நிபந்தனைகள் நிறைவேற வேண்டும்.

அ. கர்மயோகம் என்பது எந்த ஒரு செயலையும் எதிர்பார்ப்பு இல்லாமல், நாம் செய்கிறோம் என்ற எண்ணமும் இல்லாமல் செய்வதாகும். இதை செய்வது மிகவும் கடினம். ஒரு வேலையைச் செய்யும்போது, ஒரு சில எதிர்பார்ப்புகள் மற்றும் நாம் செய்கிறோம் என்ற எண்ணம் பொதுவாக இருக்கத்தான் செய்யும். நாம் செய்கிறோம் என்ற உணர்வு என்பது அந்த செயல் நம் ஐம்புலன்கள், மனம் மற்றும் புத்தியால் நடக்கிறது என நினைப்பது ஆகும்.

ஆ. ஒருவர் மற்றொரு நபருக்கு உதவி செய்தால், அந்த நபர் அதற்கு தகுதியானவராக இருக்க வேண்டும்.  ஆன்மீக கண்ணோட்டத்தில், யார் அந்த உதவியை ஆன்மீக வளர்ச்சிக்கு பயன்படுத்துவாரோ, யாருடைய இலக்கு ஆன்மீக முன்னேற்றமோ அவரே தகுதியானவராக கருதப்படுபவர். ஒருவர் மற்றொரு ஸாதகர் ஆன்மீக முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற காரணத்திற்காக உதவும்போது, அது கொடுக்கல்-வாங்கல் கணக்கில் சேருவதில்லை. கடவுள் ஸாதகர்களுக்கு உதவுவதால், நாமும் ஸாதகர்களுக்கு உதவும்போது கடவுளின் குணத்தை பெறுகிறோம் என்பதால், நம்முடைய ஆன்மீக முன்னேற்றமும் ஏற்படுகிறது.

 1. கடவுள் எல்லோரிடமும் இருப்பதால், தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்வது எ ன்பது அவர்களுக்குள் இருக்கும் இறை தத்துவத்திற்கு சேவை செய்வது ஆகும் என்று சிலர் நினைக்கிறார்கள்; ஆனால் இது ஒரு தவறான கருத்து. ஒருவருக்கு உதவி தேவையாக இருக்கலாம்; ஆனால் அவரிடம் உள்ள ஆத்மாவுக்கு, அதாவது  இறை தத்துவத்திற்கு எந்த உதவியும் தேவையில்லை. ஆன்மீக கண்ணோட்டத்தில், கடவுளுக்கும் மனிதனுக்கும் செய்யப்படும் உண்மையான சேவை என்னவென்றால், தர்ம பிரசாரம் செய்து, மற்றவர்கள் ஆன்மீக பயிற்சியை ஆரம்பிக்க உதவுவது ஆகும். இதுவே மிகவும் உயர்ந்த மற்றும் தூய்மையான சமூக சேவையாகும், இதனால்  பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியிலிருந்து விடுபட்டு ஆனந்தத்தை பெற முடியும்

4. முடிவுரை

இந்த உலகில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்த விரும்புவோருக்கு சமூக சேவையில் ஒரு ஈர்ப்பு இருப்பது புரிந்து கொள்ளத்தக்கது. ஒரு சமூக சேவகரால், சமுதாயத்திற்கு அவர் அளித்துள்ள பங்கின் ஸ்தூலமான, நல்ல விளைவுகளை நேரிடையாகக் காண முடிகிறது. மற்றவருக்கு உதவுவது எவ்வளவு நல்ல அனுபவமாக இருந்தாலும், மாயையில் செய்யப்படும் எந்த ஒரு நல்ல காரியமும் மாயையிலேயே பலனைக் கொடுக்கும், அதாவது புண்ய பலன் சேரும். ஆனால் கடவுளோடு ஒன்றிணையவும் ஆனந்தத்தை அனுபவிக்கவும் முற்படும் ஸாதகர்களின் ஆன்மீக பயணம் வேறுபட்டு இருக்க வேண்டும், அதாவது ஆன்மீக பயிற்சி மேலும் மேலும் சூட்சுமத்தை நோக்கி செல்ல வேண்டும்.

எஸ்.எஸ்.ஆர்.எஃப். (SSRF) -இல், நாம் வேகமாக ஆன்மீகத்தில் முன்னேற ஆன்மீக பயிற்சியின் 8 படிகளை பரிந்துரைக்கிறோம். இந்த படிகள் உங்கள் ஆன்மீக பயிற்சியை துவங்கவோ அல்லது தற்போதைய ஆன்மீக பயிற்சியை வலுப்படுத்தவோ உதவும். எஸ்.எஸ்.ஆர்.எஃப். வழிகாட்டுதலின் கீழ் ஆன்மீக பயிற்சியை மேற்கொள்ளும் பலர் ஏதாவது ஒரு வகை சமூக சேவையில் ஈடுபட்டவர்களாக இருந்துள்ளனர். எனினும், வழிகாட்டுதலின்படி ஆன்மீக பயிற்சியை அவர்கள் செய்ய ஆரம்பித்து உயர்தரமான ஆன்மீக அனுபவங்கள் கிடைத்த பின், சமூக சேவையில் உள்ள வரையறைகளை அவர்கள் உணர்ந்துள்ளனர்.