கடவுளின் நாமத்தை ஜபித்தல் மற்றும் மந்திரத்தை ஜபித்தல்

1. கடவுளின் நாமத்தை ஜபித்தல் மற்றும் மந்திரத்தை ஜபித்தல்- ஒரு அறிமுகம்

மந்திரத்தின் உட்பொருள் பலரையும் கவர்ந்துள்ளது. மேலும், பல நேரங்களில் அது கடவுளின் நாமஜபத்துடன் இணையாகப் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் இவ்விரண்டும் ஒரு எழுத்து, சொல், மந்திரம் அல்லது வாக்கியத்தைத் திரும்பத் திரும்ப உச்சரிப்பதை அடிப்படையாகக் கொண்டுள்ளதால், ஒன்றை மற்றொன்றாகத் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகின்றன. இருப்பினும், ஆன்மீக அறிவியலின் பார்வையில் இவை இரண்டும் பல்வேறு வகைகளில் வேறுபடுகின்றன. மேலும், இந்தக் கட்டுரையில் கடவுளின் நாமஜபத்திற்கும் மந்திர ஜபத்திற்கும் இடையிலான வேறுபாடுகள் ஒப்பிட்டு விளக்கப்பட்டுள்ளன.

2. மந்திரத்தின் வரைவிலக்கணம்.

மந்திரம் என்ற சொல்லின் ஆன்மீக நுணுக்கங்களை விளக்கும் பல வரையறைகள் உள்ளன. பொதுவாக, மந்திரம் என்பது ஒரு எழுத்து, ஒலி, சொல் அல்லது ஆன்மீக உண்மைநிலையையோ அல்லது கடவுளின் ஒரு அம்சத்தையோ குறிக்கும் சொற்களின் தொகுப்பாகும். ஒரு மந்திரத்தை ஜபிப்பதன் மூலம் ஒருவர் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவோ அல்லது ஒரு குறிப்பிட்ட ஆன்மீக இலக்கை அடையவோ முடியும். மந்திரத்தை மீண்டும் மீண்டும் ஜபிக்கும் போது, சில விதிகள், கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுங்குமுறைகளை கடைப்பிடிப்பது அவசியமாகும். இது மந்திரயோகத்தின் முக்கியமான அம்சமாகும்.

3. நாமஜபத்தின் வரைவிலக்கணம்

நாமஜபம் என்பது இறைவனின் நாமத்தை மீண்டும் மீண்டும் உச்சரிக்கும் மிக எளிய முறையாகும். மந்திர ஜபத்தைப் போல அல்லாமல், இதற்கு எந்த விதிகளும், கட்டுப்பாடுகளும் அல்லது ஒழுங்குமுறைகளும் தேவையில்லை; ஏனெனில் இதை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் செய்யலாம். கடவுளின் நாமஜபத்தின் நோக்கம், அதில் உள்ள உள்ளார்ந்த தெய்வீக சக்தியை ஒருவர் உள்வாங்கி ஆன்மீக முன்னேற்றம் அடைவதாகும். மேலும், இது ஒருவரின் ஆன்மீகப் பயணத்தில் தடைகளை ஏற்படுத்தக்கூடிய தீய சக்திகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள உதவும் ஒரு சக்திவாய்ந்த முறையாகும். கீழே உள்ள அட்டவணையில், கடவுளின் நாமஜபமும் மந்திர ஜபமும் ஒப்பிட்டு விளக்கப்பட்டுள்ளன.

கடவுளின் நாமத்தை ஜபிப்பதற்கும் மந்திரத்தை ஜபிப்பதற்கும் இடையிலான ஒப்பீடு

அம்சம்

கடவுளின் நாமத்தை ஜபித்தல்

மந்திரத்தை ஜபித்தல்

1. மீண்டும் மீண்டும் உச்சரிப்பது அவசியமா?

ஆம்

ஆம்

2. நாமத்தை உச்சரிப்பதற்கு முன் சங்கல்பம்1 எடுத்துக்கொள்வதின் அவசியம்

அவசியம் இல்லை

அவசியம்2

3. சடங்குகள் உதாரணத்திற்கு யாகங்கள் வளர்ப்பது போன்ற பல.

செய்யப்படுவது இல்லை

செய்யப்படுகிறது

4. நிறைவு செய்யப்பட்ட எண்ணிக்கையை கணக்கில் வைத்திருக்குதல்

கணக்கில் வைத்திருக்கத் தேவையில்லை.

எண்ணிக்கையை கணக்கில் வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் எந்தப் பலனும் கிடைக்காது.

5. நோக்கம்

ஒரு குறிப்பிட்ட பலனை எதிர்பார்த்தோ அல்லது எதிர்பார்க்காமலோ இருக்கலாம்

ஒருவர் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள, எதிரியை அழிக்க அல்லது அமானுஷ்ய சக்திகளைப் (சித்திகள்) பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனும்; அல்லது எதிர்பார்ப்புகள் இல்லாமலும் இருக்கலாம்

6. ஆன்மீக குருவிடம் இருந்து தீட்சை பெறுதல்

நாமஜபத்தின் சக்தி அந்தக் கடவுளின் நாமத்திலேயே அடங்கியிருப்பதால், குருவிடமிருந்து தீட்சை பெற வேண்டியதில்லை.

மந்திரத்தின் சக்தி குருவின் சங்கல்பம் அல்லது உறுதியான தீர்மானத்தின் காரணமாக வெளிப்படுவதால், குருவிடமிருந்து தீட்சை பெறுவது அவசியம். மேலும், மந்திரத்தை உச்சரிக்கும் முறை குருவின் வழிகாட்டுதலின் படி ஒரு குறிப்பிட்ட முறைக்குட்பட்டு செய்யப்பட வேண்டும்.

7. சடங்கு விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுவது

இல்லை

‘மந்திரங்களின் அனுஷ்டானத்தை ஆரம்பிப்பதற்கு முன் குளிப்பது மற்றும் அந்த காலகட்டங்களில் பால், பழங்கள் போன்றவற்றை மட்டும் உட்கொள்வது’ போன்றவை பொதுவாக பின்பற்றப்படும் சடங்கு விதிகளின் உதாரணங்கள் ஆகும். ‘மாமிசம் சாப்பிடாமல் இருப்பது’ என்பதும் ஒரு கட்டுப்பாடாகும்.

8. சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம்

மு க்கியமில்லை

உச்சரிப்பு சரியாக இருந்தால் மட்டுமே அதன் பலன் கிடைக்கும்

9. பயிற்சி செய்வதற்கான நேரம்

எந்த நேரத்திலும் செய்யலாம்; இதற்கு நேரக் கட்டுப்பாடு ஏதுமில்லை.

குறிப்பிட்ட நேரத்தில் செய்ய வேண்டும். உதாரணமாக, காயத்ரி மந்திரத்தை சூரிய உதயம் மற்றும் அஸ்தமன நேரங்களில் ஜபித்தால் அதிக பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

10. பயிற்சி செய்யும் இடம்

எங்கு வேண்டுமானாலும். குளியலறை போன்ற ஸாத்வீகமற்ற இடங்களில்கூட செய்யலாம்.

ஆன்மீக அடிப்படையில் தூய்மையான இடங்களில் மட்டுமே செய்ய வேண்டும். உதாரணமாக வீட்டில், ஆற்றங்கரையில், மாட்டு கொட்டகையில், அக்னியை வழிபடும் இடத்தில், புண்ணியத்தலங்களில் அல்லது நாம் வழிபடும் தெய்வத்தின் திருவுருவச் சிலைக்கு முன்பாக செய்ய வேண்டும்.

11. தீங்கு ஏற்படும் வாய்ப்பு

ஒருபோதும் இல்லை

உச்சரிப்பு தவறாக இருந்தால் அது தீங்கு விளைவிக்கக் கூடும்.

அடிக்குறிப்புகள்:

  1. பிரபஞ்சத்தில் உள்ள சக்திகளில் ஒன்றாகிய “சங்கல்பத்தை” பற்றி விளக்கும் கட்டுரையைப் பார்க்கவும்.
  2. இணையத்தளங்களில் அல்லது வெவ்வேறு புத்தகங்களில், சில குறிப்பிட்ட நோக்கங்களுக்காக பரிந்துரைக்கப்பட்ட பல்வேறு மந்திரங்களை நாம் காண்கிறோம். எனவே, அவற்றிலிருந்து குறிப்பிட்ட பலனைப் பெறுவதற்காக சிலவற்றைத் தேர்ந்தெடுக்கிறோம். இருப்பினும், அந்த மந்திரத்தை ஒரு மஹான்  அல்லது ஒரு குரு பரிந்துரைக்கவில்லை என்றால், அதன் மூலம் எவ்விதப் பலனும் கிடைப்பதில்லை; அல்லது மிகக் குறைந்த அளவிலான பலனே கிட்டுகிறது.
  3. குறிப்பிட்ட பலன்களைப்பெற, அதற்குரிய வெவ்வேறு மந்திரங்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் (108 முறை அல்லது 1008 முறை போன்றவை) உச்சரிக்க வேண்டும். அவ்வாறு ஜபிக்கும் போது பரிந்துரைக்கப்பட்ட எண்ணிக்கையை நிறைவு செய்யாவிட்டால் எவ்விதப் பலனும் கிட்டாது.
  4. ஒவ்வொரு மந்திரத்தின் விளைவும் அதன் அடிப்படையில் செயல்படும் பரிபூரண பிரபஞ்ச தத்துவங்களில் (ஐம்பூதங்கள்) ஒன்றினாலோ அல்லது அவற்றின் சேர்க்கையினாலோ உணரப்படுகிறது. ஒரு மந்திரத்தை சரியான முறையில் ஜபிக்காமல் அல்லது நமக்குப் பிடித்தபடி ஜபித்தால், அந்த குறிப்பிட்ட பிரபஞ்ச தத்துவத்தின் மூலம் நமக்கு பாதிப்பு ஏற்படலாம். உதாரணமாக, பரிபூரண பிரபஞ்சத்தின் நெருப்பு தத்துவத்துடன் (தேஜ தத்துவம்) தொடர்புடைய மந்திரத்தை நம் விருப்பப்படி ஜபித்தால், உடலில் வெப்பம் அதிகரித்து சில உடல் செயல்பாடுகளுக்கோ அல்லது உறுப்புகளுக்கோ பாதிப்பு ஏற்படக்கூடும்.

4.  நாமஜபம் செய்வதே நாம் தற்போது வாழும் காலத்திற்கு மிகவும் உகந்த ஆன்மீக பயிற்சியாகும்

ஒவ்வொரு யுகத்தின் சராசரி ஆன்மீக நிலை

ஒவ்வொரு யுகத்திற்கும், அந்த காலகட்டத்திற்கு ஏற்றவாறு மக்கள் எளிதாகக் கடைபிடிக்கக்கூடிய ஒரு குறிப்பிட்ட ஆன்மீகப் பயிற்சியை இறைவன் நிர்ணயித்துள்ளார். இன்றைய நமது வாழ்க்கை முறை, மந்திரங்களை மீண்டும் மீண்டும் உச்சரிக்க தேவையான விதிமுறைகள், கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுங்குமுறைகளை கடைப்பிடித்து அதன் பயனை அடைந்த அன்றைய காலத்திலிருந்து பெரிதும் மாறுபட்டுள்ளது. நமது பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும் நம்மைச் சுற்றியுள்ள சூழலில் காணப்படும் ஆன்மீகத் தூய்மையின்மை போன்ற காரணங்களால், நீண்ட நேரம் தியானயோகம், கர்மயோகம் போன்ற ஆன்மீகப் பாதைகளைப் பின்பற்றுவதில் சில வரம்புகள் உள்ளன. எனவே, ஆன்மீகத்தில் உன்னத நிலையை அடைந்தவர்களும் மஹான்களும், கலியுகத்தின் தற்போதைய காலத்திற்கு நாமஜபத்தையே மிகவும் உகந்த ஆன்மீகப் பயிற்சிப் பாதையாக அறிவுறுத்தியுள்ளனர். ஏனெனில், இது ஆன்மீகத்தின் 6 அடிப்படைக் கொள்கைகளுக்கு ஏற்றதாகவும், ஆன்மீக ரீதியாக வேகமாக முன்னேற உதவுகின்றது.

5. சுருக்கம்

    • கடவுளின் நாமத்தை ஜபிப்பதும் மற்றும் மந்திரத்தை ஜபிப்பதும் இரண்டும் ஒரே எழுத்து, சொல் அல்லது வாக்கியத்தை மீண்டும் மீண்டும் உச்சரிப்பதை அடிப்படையாகக் கொண்டுள்ளதால், இவ்விரண்டையும் ஒன்றை மற்றொன்றாக எளிதில் தவறாகப் புரிந்துகொள்ளலாம். ஆனால், இந்த இரு பாதைகளுக்கிடையில் பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. அவற்றில் முக்கியமான வேறுபாடு என்னவென்றால், மந்திர ஜபத்தில் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் மிகவும் அதிகமாக இருப்பதாகும்.
    • கடவுளின் நாமஜபமும் மந்திரஜபமும் இரண்டுமே ஆன்மீக வளர்ச்சிக்கு வழிவகுக்கின்றன. இருப்பினும், இவ்விரண்டில் தற்போதைய காலக்கட்டத்தில் ஆன்மீக வளர்ச்சிக்கு மிகவும் உகந்த ஆன்மீகப் பயிற்சியாக கடவுளின் நாமஜபமே பரிந்துரைக்கப்படுகிறது.
    • ஒரு மஹானோ அல்லது குருவோ குறிப்பாக ஒரு மந்திரத்தை ஜபிக்க அறிவுறுத்தாத வரையில், கடவுளின் நாமத்தை ஜபிக்கும் ஆன்மீகப் பயிற்சியையே எஸ்.எஸ்.ஆர்.எஃப். (SSRF) பரிந்துரைக்கிறது, ஏனெனில் அது ஆன்மீக ரீதியில் வேகமாக வளர நமக்கு உதவும்.