பிரபஞ்ச சக்திகளின் வரிசைக்கிரமம்

இந்த பிரபஞ்சத்தில் ஆறு விதமான சக்திகள் உள்ளன. எந்த அளவிற்கு சக்தி சூட்சுமமாக உள்ளதோ, அந்த அளவிற்கு அந்த சக்தியின் தன்மை அதிகரிக்கிறது. இந்த சக்திகள் ஒவ்வொன்றையும் பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

1. உடலளவிலான சக்தி: இது அதிக ஸ்தூல தன்மை கொண்டதால் மிகத் தாழ்ந்த நிலையில் உள்ளது. கீழே குறிப்பிட்டுள்ளவை இதில் அடக்கம்:

அ. நோயை குணப்படுத்தும் மருந்துகள் – பாக்டீரியா கொல்லிகள்

ஆ. கொலை செய்ய உபயோகப்படுத்தும் ஆயுதங்கள்

இ. பண சக்தி

ஈ. அரசியல் சக்தி

ஒரு சாதாரண மனிதனிடம் இந்த உடலளவு சக்தியே உள்ளது.

இந்த சக்தியின் பரிமாணம் ஸ்தூல நிலையோடு நின்று போகிறது. உதாரணத்திற்கு, இலக்கை பார்க்க முடியாவிட்டால் ஒரு ஸ்தூல ஆயுதத்தால் அதனை தாக்க முடியாது.

2. ஸ்தூலமும் மந்திரமும்: சூட்சும சக்தியை ஸ்தூல சக்தியுடன் இணைத்து செயல்பட வைத்தால், அதனால் ஏற்படும் பலன் மிகுதியானது. பழங்காலத்தில், மந்திரத்தை ஜபித்தபின் அம்பை வில்லிலிருந்து எய்வார்கள். அந்த மந்திரத்தால் எதிரிகளின் பெயர் பதிவாவதால், அந்த எதிரி நரகத்தில் ஒளிந்திருக்கும் ஆவியாக இருந்தாலும் அம்பு அங்கு சென்று தாக்கும். அந்த அம்புடன் சூட்சும சக்தி இணைந்து இருப்பதே இதன் காரணம். இந்த கோட்பாடே ஆயுர்வேத மருந்துகளின் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. மருந்துகள் தயாரிக்கும்போது மந்திரங்கள் உச்சரிக்கப்படுகின்றன. அதேபோல், ஊசி, கருப்பு உளுந்து, எலுமிச்சை ஆகியவற்றுடன் மந்திரங்கள் உச்சரிக்கப்பட்டு, ஒருவரை பீடித்துள்ள பேய், பிசாசுகள் விரட்டப்படுகின்றன. இருப்பினும், சில சமயங்களில், ஸ்தூல மற்றும் சூட்சும சக்தியை ஒன்று சேர்ப்பினும் பூரண வெற்றி கிடைப்பதில்லை. அந்த சமயங்களில், கீழே கொடுத்துள்ளபடி அதிக சூட்சும சக்தி தேவைப்படுகிறது.

3. மந்திரம் (மட்டும்): அதிக சக்தி வாய்ந்த மந்திரங்களை மாத்திரமே உபயோகப்படுத்தி எதிரிகளை அழிக்க முடியும். மந்திர சக்தியானது, மற்ற உலக விஷயங்களான திருமணம், செல்வம் ஆகியவற்றையும் அளிக்க வல்லது.

4. தொடர்பு: உயர் ஆன்மீக நிலையில் உள்ள ஒரு சாதகர் (70% ஆன்மீக நிலைக்கு மேற்பட்டவர்) எதையாவது தொடும்போது, அந்த பொருள் ஆவிகளை (பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள் போன்றவை) அழிக்கும் சக்தியைப் பெறுகிறது. தொடுதல் மட்டுமன்றி, உயர்ந்த ஆன்மீக நிலையில் இருக்கும் ஒருவரால் நாம் கீழ்க்கண்ட முறைகளினாலும் பயனடையலாம். அவை, உன்னத ஆன்மீக நிலையில் இருப்பவர்:

  • நம்மை நினைக்கும்போது
  • நாம் செய்த விஷயத்தை பரிசோதிக்கும்போது
  • அவரிடம் நம் சந்தர்ப்ப சூழ்நிலை அல்லது கஷ்டம் அறிவிக்கப்படும்போது
  • தொலைபேசியில் நம்முடன் பேசும்போது

5. சங்கல்பம்: 70% ஆன்மீக நிலையை அடைந்து மகானின் நிலையை எட்டியபின், ஒருவரின் மனம் கரைகிறது; புத்தியும் பெரும்பாலும் கரைந்து விடுகிறது. இறைவனின் ரூபமான விச்வமனம் மற்றும் விச்வபுத்தியுடன் இணைகிறது. ஒரு மகான் 80% ஆன்மீக நிலையை கடந்து செல்லும்போது, அவரது மனம் எண்ணங்களற்ற நிலையை அடைகிறது. இந்த நிலையில், ‘இது நடக்கட்டும்’ என்று அவர் மனதில் தோன்றும் ஒரு எண்ணமே அந்த சம்பவத்தை நடத்துவிக்கும்; வேறு எதுவும் தேவையில்லை. கடவுளின் விருப்பப்படியே அவர் சங்கல்பம் அமையும். மேலும் விவரங்களுக்கு ‘சங்கல்பம் செயல்படும் முறை’ என்னும் கட்டுரையை பார்க்கவும்.

6. இருப்பு: அதி உன்னத நிலையில் (90% -க்கும் மேற்பட்ட ஆன்மீக நிலை), ஒரு உன்னத புருஷர் மனதில் சங்கல்பம் கூட செய்ய தேவையில்லை. அவரின் இருப்பு, அருகாமை அல்லது சத்சங்கமே ஒரு நிகழ்வை நடத்துவிக்க வல்லது; உதாரணத்திற்கு, சிஷ்யனின் ஆன்மீக முன்னேற்றம் அல்லது ஆவிகளை (பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள் போன்றவை) அகற்றுதல். இது, சூரியனானது உதிக்கும்போது எப்படி விழிப்பு ஏற்படுகிறதோ, பூக்கள் தானே மலர்கின்றனவோ, அதைப் போன்றது. இவை எல்லாம் தானாகவே நடக்கின்றன. சூரியன் யாரையும் விழிக்க சொல்வதில்லை; பூக்களை மலர சொல்வதில்லை. 90% -க்கும் மேற்பட்ட ஆன்மீக நிலையில் உள்ளவர்களின் செயல்பாடும் இவ்வாறே அமையும்.