தானே கர்த்தா என்ற உணர்வை குறைத்து இறைவனிடம் எவ்வாறு சரணடைவது?

தானே கர்த்தா என்ற உணர்வை குறைத்து இறைவனிடம் எவ்வாறு சரணடைவது?

1. அறிமுகம்

நமது ஆன்மீக பயிற்சியில் உள்ள மிகப்பெரிய தடங்கல் அஹம்பாவம் ஆகும். நம்மில் பலருக்கு அஹம்பாவம் என்றால் என்ன என்பதன் பொருள் ஓரளவுக்கு தெரிந்தாலும் “கர்த்ருத்வம்” அஹம்பாவத்தின் ஒரு பிரதான வகை என்று தெரியாது. கர்த்ருத்வம் என்பது தானே கர்த்தா என்ற உணர்வாகும். ஒரு செயலை கர்த்ருத்வத்துடன் நாம் செய்யும்போது, நமது செயல்களை கடவுள் தான் செய்கிறார் என்று உணர்ந்து அவரிடம் சரணடையாமல் நாமே அந்த செயலை செய்கிறோம் என்று எண்ண தொடங்குகிறோம். அதாவது, நம்மால் அனைத்தையுமே செய்யமுடியும் என்று நினைத்து எல்லா செயல்களையும் செய்ய துவங்குகிறோம். உதாரணத்துக்கு வீடு- வாகனம் எனக்கு சொந்தம், வாழ்வுக்காக நான் உழைக்கிறேன் போன்றவை.

ஆன்மீக பயிற்சிக்கு ‘தானே கர்த்தா’ என்ற உணர்வை துறப்பது அவசியம். இந்த உணர்வு உண்மையில் நாம் எதையுமே செய்யவில்லை, கடவுளே அனைத்தையும் செய்கிறார் என, ஒரு தொடர்பை கடவுளோடு ஏற்படுத்த உதவுகிறது.

2. கர்த்ருத்வம் எவ்வாறு உருவாகிறது?

துன்பத்தை தவிர்த்து மகிழ்ச்சியை நாடும் தற்போதைய உலகளாவிய போக்கின் காரணமாக கர்த்ருத்வம் எழுந்துள்ளது. கடந்த யுகங்களில் ஆன்மீக ரீதியாக அதிக தூய்மையுடைய மானிடர்கள் வாழ்ந்தனர், அவர்களிடம் குறைந்த கர்த்ருத்வ உணர்வு இருந்ததோடு, கடவுளே அனைத்தையும் நடத்துகிறார் என்றுணர்ந்து கடவுளிடம் சரணாகதி அடையும் மனநிலையை அவர்கள் பெற்றிருந்தார்கள். காலம் கழிய இயற்கையாகவே கடவுளோடு ஒன்றிணையும்  நிலையை இழக்க ஆரம்பித்து தனது ன்னிச்சை செயலால் துயரங்களை தவிர்க்கவும் மற்றும் மகிழ்ச்சியை தேடவும் தொடங்கினார்கள். இதன் விளைவாக மனிதர்கள் தாமே சில செயல்களை செய்கிறார்கள் என்றுணரத் துவங்கியதால் மெல்ல -மெல்ல சூட்சும கர்த்ருத்வம் வளர்ந்தது.

கர்த்ருத்வம் வளர, வளர நாம் கடவுளை விட நம்மையே அதிகம் சார்ந்திருக்க ஆரம்பித்தோம். கடவுளை நாம் சரணடைந்தால் நமக்கு தேவையானதை அளிக்கிறார். மாறாக நம்மையே சார்ந்திருந்தால் தவறுகள் ஏற்பட வாய்ப்புண்டு. நம்மையே நாம் சார்ந்திருந்த படியால் மனதில் தவறான எண்ணப்பதிவுகளை ஏற்படுத்தும் தவறுகளை செய்ய ஆரம்பித்தோம். இதன் விளைவாக பொறுமையின்மை, அச்சம், கவலை, அவசரப்படுதல், முரட்டுத்தனம், அதிகம் சிந்தித்தல், எதிர்மறை சிந்தனை, பரிபூரணவாதம் போன்ற ஆளுமை குறைகள் வளர்ந்தன. தனது திறமைக்கு அப்பாலான சூழ்நிலைகளை சரி செய்யவும் ஏராளமான எண்ணங்களை சேமிக்கவும் மனம் அளப்பரிய ஆற்றலை செலவிட பழகியது, இதனால் நமது திறமை குறைந்து மன அழுத்தத்தோடு சூழ்நிலைகளை கையாள வேண்டியதாயிற்று. தற்போதைய உலக சூழ்நிலையில் அதிகபட்ச மக்கள் தமது செயல்களுக்கு தாமே பொறுப்பு என்று ஏற்றுக்கொண்டபடியால் மகிழ்ச்சியின்மையின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது.

3. கர்த்ருத்வத்தை நாம் ஏன் கடவுளிடம் சமர்ப்பிக்க வேண்டும்?

இப்போதெல்லாம் நமது செயல்களின் பொறுப்பு அல்லது கர்த்ருத்துவத்தை இயல்பாகவே நாமே ஏற்றுக்கொள்வதால் அதை ஏன் சரணடைய வேண்டும் என்ற தெளிவில்லாமல் இருக்கலாம். சுவாரசியமான ஒரு விஷயம் என்னவென்றால் எந்தவொரு நடவடிக்கையின் வெற்றிக்கும் ‘நானே கர்த்தா’ என்ற உணர்வில்லாமல் இருப்பது இன்றியமையாததாகும். எந்தவொரு செயலும் சரியாக நடைபெற  சரணாகதியும், தளர்வும் தேவை. இதை நன்கு புரிந்துகொள்ள வயலின் வித்வான், உடற்பயிற்சி வல்லுநர் மற்றும் சமூக பேச்சாளர் என்ற மூவரை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். மன அழுத்தம் மற்றும் ‘தானே கர்த்தா’ என்ற உணர்வு இருந்தால் மூவரில் எவருமே சரிவர எந்த செயல்பாட்டையும் நிகழ்த்த முடியாது. மன அழுத்தம் இருந்தால் வயலின்  வித்வான் நன்றாக வாசிக்க மாட்டார், உடற்பயிற்சி வல்லுநர் குதிக்கும்போது விழுந்து விடுவார் மற்றும் சமூக பேச்சாளர் தவறாகப் பேசி விடுவார்.

வெற்றிகரமான இசைகலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், சமூக பேச்சாளர்கள் நிதானத்தோடு இருப்பார்கள். அந்த செயல்பாட்டிற்கே தன்னை அர்ப்பணித்து ஓரளவு அதோடு இணைந்தும் இருப்பதால் அச்செயல் தானாகவே அவர்கள் மூலம் நடக்கும். இதனால் தான் பிழையின்றி சில செயல்களை அவர்களால் செய்ய முடிகிறது.

ஆன்மீக முன்னேற்றம் அடையும் ஒரு ஸாதகர் தனது அடையாளத்தை ஐம்புலன்கள், மனம் மற்றும் புத்தியினால் காண்பதை குறைத்துவிட்டு அதிகளவு இறை தத்துவத்தோடு காண்கிறார். இசை வித்வான், உடற்பயிற்சி வல்லுநர் மற்றும் சமூக பேச்சாளரை போல தளர்ந்த மனதோடு செயல்களை செய்வதால் சிரமமின்றி நற்பலன்களை பெறுகிறார். துயரமான சூழ்நிலைகளிலும் கூட கடவுள் மீது முழு நம்பிக்கை வைத்து கவலையின்றி ஸாதகர் இருக்கிறார். குறைந்த கர்த்ருத்வ உணர்வால் ஏற்படும் சரணாகதி நிலையே இதன் ரகசியம்.

உலகியல் மற்றும் ஆன்மீகக் கண்ணோட்டத்தில் ‘தானே கர்த்தா’ என்ற உணர்வை குறைத்து எதிர்கொள்வது மிக்க நன்மை தரும், ஏனென்றால் இவ்வுணர்வு குறைந்தளவு இருக்கும்போது நமது உலகியல் மற்றும் ஆன்மீக முயற்சிகள் சிறந்த விதமாக அரங்கேறும்.  இதன் பொருள் நமது இலக்குகள் உலகியலாக இருந்தாலும், ஆன்மீகமாக இருந்தாலும் குறைந்த கர்த்ருத்வம் இருந்தால் அவற்றை எளிதில் அடையலாம்.

4. கர்த்ருத்வத்தை நாம் எவ்வாறு அடையாளம் கண்டு வெல்வது?

உளவியல் ரீதியாக மகிழ்ச்சி அல்லது மகிழ்ச்சியின்மையை ஒருவர் அனுபவிக்கும்போது ‘தானே கர்த்தா’ என்ற உணர்வு ஏற்படும். “நான் நன்றாக இதைச் செய்து வருகிறேன்”, “மற்றவர்களை நான் கவர்ந்து விடுவேன்”, “இப்பணியை நான் சிறந்து செய்து வருவதால் நான் திறமைசாலி” போன்ற எண்ணங்கள் ‘தானே கர்த்தா’ என்ற உணர்வினால் எழுகின்றனவாகும். இப்படிச் சிந்திப்பதால் நாம் மகிழ்ச்சி அடைகிறோம் ஆனால் இந்த சிந்தனைகள் ‘நானே கர்த்தா’ என்ற எண்ணத்தால் தான் உண்மையில் வருகின்றன. மகிழ்ச்சியை அனுபவிக்கும்போது நாம் உள்வாங்கி கவனித்தால் பலநேரங்களில் இத்தகைய சூட்சுமமான எண்ணங்கள் நமக்குள் இருப்பது தெரியும்.

அதே நேரத்தில் ‘தானே கர்த்தா’ என்ற உணர்வினால் நாம் துயரத்தையும் அனுபவிக்கிறோம். “பிறர் என்னை புரிந்துகொள்ள வேண்டும்”, “இச்சூழலை என்னால் கையாள முடியாது”, “இதைவிட எனக்கு சிறந்தது கிடைக்கவேண்டும்” போன்ற எண்ணங்களும் இதனாலேயே ஏற்படுகின்றன.

இன்னொரு விதமாகச் சொன்னால், நமது செயல்களின் பலன்களால் நாம் மகிழ்ச்சியோ, துயரமோ அனுபவிப்பது ‘தானே கர்த்தா’ என்று சிந்தனையால் என அடையாளம் காணலாம்.

சரி, இந்த கர்த்ருத்வத்தை எவ்வாறு எதிர்கொள்வது? உண்மையில், பெரும்பாலோருக்கு ‘தானே கர்த்தா’ என்று நினைக்காமல் செயல்களைச் செய்யத் தெரியாது, ஏனென்றால் பல பிறவிகளாக நாம் அவ்வுணர்வோடு தான் செயல்களை செய்து வந்துள்ளோம். “கர்த்ருத்வத்தை நான் வெல்வேன்” என்ற எண்ணமும் கர்த்ருத்வத்தால் தான் ஏற்படுகிறது. இருப்பினும், கர்த்ருத்வத்தை வெல்ல ஒரு ஸாதகர் மேற்கொள்ளும் பல படிகள் கீழ்வருமாறு உள்ளன :

  1. கடவுளிடம் சரணடைவதால் கர்த்ருத்வத்தை வெல்லலாம். சிறு பணிகளை எவ்வாறு செய்வது என்று நமக்கு கற்றுத்தரும்படி இறைவனிடம் பிரார்த்தித்துத் தொடங்கலாம். உதாரணத்திற்கு, நமது அறையை சுத்தப் படுத்துவது எப்படி அல்லது கணினியை ஆன்மீக பயிற்சிக்கு உபயோகிப்பது எவ்வாறு என்பதை கற்றுத்தர இறைவனிடம் கேட்கலாம். சிறிய பணிகளிலும் கர்த்ருத்வம் அடங்கியுள்ளது, இப்பணிகளில் இறைவனிடம் உதவி கேட்பதால், சரணடைய ஒரு ஸாதகர் கற்றுக்கொள்வார். பின்னர் அறிக்கை எழுதுதல் அல்லது ஸத்ஸங்கம் நடத்துதல் போன்ற பெரிய பணிகளிலும் இறைவனிடம் சரணடைய ஸாதகரால் முடியும்.
  2. மகிழ்ச்சியையும், துயரத்தையும் கடவுளிடம் சரணடைவதன் மூலம் கர்த்ருத்வத்தை வெல்லலாம். மகிழ்ச்சியைவிட துயரத்தை அர்ப்பணிப்பது சுலபம், ஏனென்றால் மனம் அதிகம் இணைந்திருப்பது மகிழ்ச்சியுடனே தான். கடினமான சூழ்நிலைகளை ஏற்றுக்கொள்வதால் துயரத்தை சரணடைய ஒரு ஸாதகர் கற்றுக்கொள்கிறார், அதோடு கடவுளிடம் உதவியும் கேட்கலாம். அத்தகைய சூழ்நிலையில் ஆன்மீக பயிற்சி எவ்வாறு செய்வது என கற்றுத்தர ஒரு ஸாதகர் கடவுளிடம் கேட்கலாம், அச்சூழ்நிலை கடந்த பின்பு நமக்கு உதவியதற்கு கடவுளிடம் நன்றி செலுத்தலாம். உதாரணத்திற்கு, தனது பணியை இழந்துவிட்ட ஒரு ஸாதகர்,மற்றொரு வேலை கிடைக்கிறதா, இல்லையா என்று பொருட்படுத்தாமல், அந்தச் சூழ்நிலையில் ஆன்மீக பயிற்சி செய்வது எப்படி என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்து பின்னர் சரணடைவதன் மூலம் நிலைமையை நேர்மறையாக எதிர்கொள்ளலாம். இவ்வாறு செய்தால் அவரது ஆன்மீக பயிற்சிக்கு தேவையானதை அளித்து ஸாதகரை கடவுள் காப்பாற்றுகிறார். இவ்விதமாக கடினமான சூழ்நிலைகளை கையாள முயற்சித்தால் நாம் கவலையின்றி இருப்பதோடு தீர்வும் வெகு சுலபமாக கிட்டும். “நம்பினோர் கைவிடப்படார்” என்ற பழமொழி இவ்வாறு மெய்யாவதால் கடவுள் நம்பிக்கை மேலும் உயரும்.
  3. முடிவாக ஒரு ஸாதகர் ‘தானே கர்த்தா’ என்ற உணர்வை வெல்ல மகிழ்ச்சியாயினும் துயரமாயினும் கடவுளிடம் சரணடைய கற்றுக்கொள்ள வேண்டும். இது அவ்வளவு எளிதல்ல என்பதால் ஆன்மீக பயிற்சியின் பிற்பகுதி கட்டத்தில் தான் நிகழ்கிறது. முன்னேறும் ஸாதகர் அதிகம் ஆன்மீக உணர்வும் ஆனந்தமும் அனுபவிக்கிறார். இவ்வாறு நிகழ்வது உளவியல் ரீதியான மகிழ்ச்சியை விட பல மடங்கு நீடித்த திருப்தியை தருகிறது என்று ஸாதகர் உணருகிறார். ஆன்மீக உணர்வும் ஆனந்தமும் அதிகரிக்க ஸாதகர் மேலும் முயற்சிகளை மேற்கொள்வார்கள், இதனால் மகிழ்ச்சியுடனான பந்தமும் தானாகவே குறைகிறது. ஆன்மீக பயிற்சியின் இலக்கே ஆனந்தத்தையும் ஆன்மீக உணர்வையும் அனுபவிப்பது மட்டுமே, மகிழ்ச்சி அல்ல என்ற கருத்தை மனதில் ஆழ பதித்துக்கொள்ளலாம். மகிழ்ச்சியை நாடும் மனதின் இப்பழக்கத்தை எளிதில் துறக்க உதவும்.

மேற்கூறியவற்றையும் சேர்த்து நாமஜபம் செய்தல், ஸத்சங்கத்தில் பங்கேற்றுதல், ஸத்சேவை செய்தல் போன்ற ஆன்மீக பயிற்சியின் அனைத்து அம்சங்களிலும் முயற்சிகளை அதிகரிக்கலாம். ஆன்மீக பயிற்சியை அதிகரிப்பதால் ஒருவர் தன்னுள் இறைவனை உணரத் தொடங்குகிறார், இதனால் ‘தானே கர்த்தா’ என்ற உணர்வை கடவுளிடம் சமர்ப்பிப்பது இயல்பாகத் தோன்றும்.

5. கடவுளிடம் சரணடைவது தொடர்பானது

சுருக்கமாகச் சொன்னால், செய்பவர் நாமே, கடவுள் அல்ல என்ற நிலையே கர்த்ருத்வம் ஆகும். இதனாலேயே நாம் மகிழ்ச்சி மற்றும் துயரத்தின் சுழற்சியில் சிக்கிக்கொண்டு நம்முள் இருக்கும் ஆனந்தத்தையும் கடவுளையும் உணர கடினமாக்குகிறது. இதன் விளைவாக ஆளுமை குறைகளும் அஹம்பாவமும் வளர்கிறது. ‘நானே கர்த்தா’ என்ற உணர்வை எதிர்கொள்ள முயற்சிக்கும்போது கடவுளோடு ஒன்றிணைதல் என்ற ஆன்மீக பயிற்சியின் இலக்கை நெருங்குகிறோம்.

கர்த்ருத்வத்தை குறைப்பதற்கான முயற்சிகளை செய்ய ஊக்குவிக்கும் சர்பியா, யூரோப்பில் வசிக்கும் “தேயான் க்ளேசிக் (Dejan Glescic)” என்ற ஸாதகரின் அனுபவம் கீழ்வருமாறு :

“தொழில் மற்றும் வாழ்வின் சில சூழ்நிலைகளால் நான் மன அழுத்தத்தோடு இருந்தபோது ஆன்மீக நிவாரணம் செய்ய அமர்ந்தேன். எதிர்பாராத விதமாக என் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வடிந்தது. இக்கட்டத்தில் கடவுளே என் மனதிற்கு சக்தி கொடுத்து உடலையும் எண்ணங்களையும் அறிவையும் கட்டுப்படுத்துகிறார் என்று உணர்ந்தேன். மூச்செடுப்பது கூட அவரே நடத்துகிறார், எனது முயற்சிகளால் எதுவும் நடக்கவில்லை என்றுணர்ந்தேன். நான் வெறும் பார்வையாளர். கடவுளே எல்லாவற்றையும் செய்கிறார், அவர் நினைவிலேயே நான் மூழ்கியிருந்தேன்.கடவுளை சரணடைந்து அவரை மட்டுமே நம்புவதற்காகவே இச்சூழ்நிலைகளை நான் இத்தருணத்தில் சந்திக்கவேண்டியிருக்கிறது என்றும் உணர்ந்தேன். என்னால் இவ்வனுபவத்தை விளக்கிச் சொல்ல இயலாது, ஆனந்தமாகவும், சுதந்திரமாகவும், அமைதியாகவும் நான் உணர்ந்தேன். ஒரு தடவை ஒருவர் துறவை அடைந்தவுடன் இந்நிலையில் இருப்பது எவ்வளவு அற்புதமானது என்று நினைத்து மகிழ்ந்தேன்.”

இக்கட்டுரையை படித்தவுடன் கர்த்ருத்வத்தை வென்று தன்னுள் கடவுளை உணர உலகெங்கும் வாழும் ஸாதகர்கள் உத்வேகம் பெறட்டும் என நாங்கள் கடவுளை பிரார்த்திக்கிறோம்.