இறைவனுக்கு சேவை செய்வதன் முக்கியத்துவமும் நன்மைகளும்- ஸத்சேவை

இறைவனுக்கு சேவை செய்வதன் முக்கியத்துவமும் நன்மைகளும்- ஸத்சேவை

1. ஒரு அறிமுகம்

இறைசேவை என்பது சத்தியத்திற்கான சேவையாகும் (ஸத்சேவை). இது குருக்ருபாயோக, அஷ்டாங்க ஸாதனையில் மூன்றாவது படியாகும். வெறுமனே ஒரு செயலாக செய்யாமல் சத்தியத்திற்கான சேவையாக அதாவது சேவை மனப்பான்மையுடன்  செய்வதால், அதிகபட்ச ஆன்மீக நன்மைகளைப் பெற முடியும் ஏதோ செய்ய வேண்டும் என்பதற்காக இயந்திரத்தனமாக செய்வதனாலேயோ அல்லது வாக்கு கொடுத்துவிட்டேன், செய்தாக வேண்டும் என்பதனாலேயோ இறைசேவை செய்வதனால், அது உரிய ஆன்மீக நன்மையினை தராது. ஸத்சேவை என்பது கடவுளுக்குச் செய்யும் சேவை என்பதை ஒருவர் தொடர்ந்து நினைவில் கொண்டு சேவையின் ஒவ்வொரு செயலையும் ஒருவரின் ஆன்மீக பயிற்சியாகச் செய்ய வேண்டும் மற்றும் ஒருவர் முழு மனதுடன் தன்னை இறைசேவையில் ஈடுபடுத்திக் கொண்டு, முடிந்தவரை அதை செவ்வனே செய்ய வேண்டும். சுருக்கமாக கூறவேண்டும் என்றால், கடவுளின் அருளைப் பெறுவதற்காக ஒரு செயலை ஆன்மீக நோக்கத்துடன் சத்தியத்திற்கான சேவையாக செய்வது ஸத்சேவை என்று அழைக்கப்படுகிறது.

2. நாமஜபம் மற்றும் ஸத்சங்கத்தில் கலந்துகொள்வதை காட்டிலும் இறைசேவை (ஸத்சேவை) செய்வது ஏன் முக்கியமாகிறது?

ஆன்மீக பயிற்சியில் நாமஜபத்திற்கு 5% முக்கியத்துவமும், சத்தியத்தின் சங்கத்திற்கு (ஸத்சங்கம்) 30% முக்கியத்துவமும், ஸத்சேவைக்கு 100% முக்கியத்துவமும் வழங்கப்பட்டுள்ளது. இறைசேவைக்கு  எதனால் இவ்வளவு  முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது? இறைசேவையின் போது, அஷ்டாங்க ஸாதனையின் எட்டு பயிற்சிகளையும் கடைப்பிடிக்கும் வாய்ப்பு ஒரு ஸாதகர்க்கு ஏற்படுவதால் ஆகும். உதாரணத்திற்கு, ஸத்சேவை செய்யும் போது ஒருவர் பிரார்த்தனையும் நாமஜபமும் செய்யலாம். இறைசேவையில் ஈடுபடும்போது சத்தியத்தின் சங்கம் இயல்பாகவே கிடைக்கிறது. நாம் செய்யும் சேவையின் வகையினை பொருத்து நமது நேரம், பணம், மனம், புத்தி அல்லது உடலை இறைசேவைக்காக தியாகம் செய்கிறோம். நமது ஆன்மீக உணர்வை அதிகரிக்க ஒரு வாய்ப்பையும் இறைசேவை தருகிறது.

மற்ற ஸாதகர்களுடன் கூட்டாக  ஸத்சேவை செய்யும்போது, நமது சொந்த ஆளுமை குறைபாடுகள் மற்றும் அகம்பாவ வெளிப்பாடுகளை அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு ஏற்படுகிறது. அதற்கு பின்னர் அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை நாம் எடுக்கலாம்.  ஸத்சேவையானது மற்ற ஸாதகர்களுடன் நெருக்கத்தினை ஏற்படுத்த உதவுவதால்  பரந்த மனப்பாங்கினை வளர்த்துக்கொள்ள உதவுகிறது.

மேலும், உலக வாழ்வில் ஒருவர் வேலை செய்யும்போது அதற்கு ஈடாக ஏதாவது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. அதேசமயம் ஸத்சேவையை எந்த எதிர்பார்ப்பும் இன்றி, நாம் செய்யும் போது, மிகவும் அழகான ஒரு விஷயம் கிடைக்கிறது அதுவே ஆனந்தம் எனப்படுகிறது.

3. வேலைக்கும் இறைசேவைக்கும் உள்ள வேறுபாடு

சாதாரண உலகக் கடமைக்கும், ஸத்சேவை செய்வதற்கும் முக்கிய வகையில் வித்தியாசம் ஒன்று உள்ளது. நாம் ஒரு தொழிலோ அல்லது வேறு ஏதேனும் வேலையையோ செய்தால், வேலை முடிந்ததும் சில நன்மைகள் கிடைக்கும் எனும் உத்தரவாதத்தை எதிர்பார்க்கலாம். உதாரணத்திற்கு பெரும்பாலான மக்கள், மாத இறுதியில் சம்பளம்  பெறப்போவதில்லை என்றால் தினந்தோறும் வேலைக்குச் செல்ல மாட்டார்கள்.

வழக்கமாக, ‘நான் இந்த வேலையைச் செய்கிறேன், எனது முயற்சிகளுக்கு நான் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற அஹம்பாவ எண்ணம் மனதில் எழுகிறது. ஆனால் ஸத்சேவை செய்யும்போது இதற்கு எதிரான எண்ணம் எழுகிறது. இறைவனுக்கு சேவை செய்யும் போது   ‘நான் தான் செய்கிறேன்’ என்ற எந்த உணர்வும் இல்லாமல் செய்யப்படுகிறது. ஏனென்றால் நாம்  இறைவனின் கைக்கருவிகளாக  செயல்படுகையில், கடவுள் மட்டுமே நம் மூலமாக ஸத்சேவையினை நடத்துகிறார் என்ற ஒரு புரிதல் நிறுவப்படுகிறது. நாம் ஆன்மீக ரீதியாக  முன்னேறும்போது, இந்த புரிதல் மேலும் ஆழமாகி, கடவுள் மீது நம்முடைய ஆன்மீக உணர்வு அல்லது பக்தி அதிகரிக்கிறது.

ஒருவர் கடவுளின் பணிக்காக  பங்களிக்கத் துவங்கும்போது, கடவுளுடன் ஒரு நெருக்கமான உறவு நிறுவப்படுகிறது. அந்த நபர் உலக கடமைகள் மற்றும் வேலைகளில் ஈடுபட்டிருந்தாலும் நேர்மறையான  சக்தி தொடர்ச்சியாக நிறுவப்படுகிறது. மும்முரமான வேலை நாள் ஒன்றின் இறுதியில், ஒருவர் ஸத்சேவையினை செய்ய ஆரம்பித்தாலும் அவர் எந்த வகையிலும் சோர்வடைவது இல்லை.

4. ஸத்சேவையின் நன்மைகள்

 1. தெய்வீக உணர்வைப் பெறுதல் (சைதன்யம்) : ஸத்சேவை செய்யும் நேரம் முழுவதும் பரிபூரண சத்தியத்தில் (‘ஸத்’) லயித்து இருக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இறைசேவை செய்யும் போது வெகுமதியாக தனது சைதன்யத்தை இறைவன் நமக்கு அளிக்கிறார். இந்த தெய்வீக உணர்வு ரஜ-தமவைக் குறைப்பதுடன் ஸாத்வீகத்தை அதிகரித்து, ஒவ்வொரு ஆன்மீக ஆர்வலரின் நோக்கத்தையும் நிறைவேற்றுகிறது.
 2. தெய்வீக குணங்கள் உருவாகுதல் : நேரம் தவறாமை, திட்டமிடல், சேவை அணுகுமுறை போன்ற தெய்வீக குணங்களை வளர உதவுகிறது.
 3. ‘பிறரின் விருப்பத்திற்கு’ முதன்மை தருதல்: ஒருவருக்கொருவர் ஆளுமைகளில் உள்ள வேறுபாடுகளால் ஏற்படும் எதிர்வினைகளை கடந்துவர கற்றுக்கொள்வதுடன், மற்றவர்களின் விருப்பங்களை தன் சொந்த விருப்பத்தை விட முன்னிறுத்தவும் செய்கிறார். ஸத்சேவையில் ஈடுபட்டுள்ள அனைத்து ஸாதகர்களின் பரிந்துரைகளுக்கும்  உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால், மற்றவர்களின் கருத்துக்களை புரிந்துகொள்வதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும் இது ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இதுவே அகம்பாவத்தை குறைக்கவும் உதவுகிறது.
 4. தடைகளுக்கான தீர்வுகள்: மற்ற ஸாதகர்கள் எதிர்கொள்ளும் தடைகள் மற்றும் அத்தடைகளை சமாளிக்க என்ன செய்தார்கள் என்பதிலிருந்தும், ஒருவர் கற்றுக்கொள்கிறார்.
 5. அகம்பாவம் குறைதல்:  பிரார்த்தனை செய்த பிறகு, இறைசேவை மிகவும் நேர்த்தியாக நடக்கிறது என்பதனை ஸாதகர்கள் உணரும்போதும், அதற்கு தானே கர்த்தா என்ற உணர்வு கொள்ளாத போதும் அகம்பாவம் குறைகிறது.
 6. ஒற்றுமை உருவாகுதல்: மற்ற ஸாதகர்களின் ஆன்மீக பயிற்சிக்கு உதவுவதற்கு இது வாய்ப்பளிக்கிறது. நாம் மற்றவர்களுக்கு உதவும்போது, நம் மீதானகவனம் திசை திரும்புகிறது. இது மற்ற ஸாதகர்களுடன் நெருக்கத்தை வளர்க்க உதவுகிறது,  பரந்த மனப்பான்மை அதிகரிப்பதுடன், நமது அகம்பாவமும் குறைகிறது.
 7. மற்றவர்களின் தவறுகளிலிருந்து கற்றல்:  பிற ஸாதகர்களின் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்வதால், தன்னுடைய தவறுகளைக் குறைக்க உதவி கிடைக்கிறது.
 8. ஊக்கம் கிடைத்தல்: தடைகள் இருந்தபோதிலும் மற்ற ஸாதகர்கள் இறைசேவை செய்வதற்காக எடுக்கும் முயற்சியைக் கவனிப்பதன் மூலம், ஊக்கமடைந்து ஒருவர் ஆன்மீக பயிற்சியை தீவிரப்படுத்துகிறார்.
 9. விரைவான ஆன்மீக முன்னேற்றத்தை எளிதாக்குகிறது:  ஆன்மீக பிரசார குறிக்கோளுடன் ஒன்றுபட்டு செயற்பட வாய்ப்பு கொடுத்து விரைவான ஆன்மீக முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கிறது.

5. சிறந்த ஸத்சேவை எது?

கடவுளுக்கு சேவை செய்ய பல்வேறு வழிகள் உள்ளன. ஆன்மீக  பிரசாரமே சிறந்த ஸத்சேவை ஆகும்

இதைச் செய்வதற்கான சில எளிய வழிகள் :

 • நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு எஸ்.எஸ்.ஆர்.எஃப் கட்டுரைகள் அல்லது ஆன்மீகம் தொடர்பான இணைப்புகளை மின்னஞ்சல் செய்யலாம்.
 • செயல்பாட்டு முகாம்கள் மற்றும் ஸத்சங்கங்களுக்கான நிகழ்விடத்தை அமைக்க உதவதுடன், சுத்தம் செய்யவும் உதவலாம்.
 • வலைதளம் தொடர்பான ஸத்சேவைக்களுக்கு கணினி திறன்களை பயன்படுத்தலாம்.
 • எஸ்.எஸ்.ஆர்.எஃப் வழிகாட்டுதலின் கீழ் ஆன்மீக பயிற்சி செய்வதன் மூலம் கற்றுக்கொண்டவற்றையும், அனுபவித்தவற்றையும்  மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
 • ஆங்கிலத்தைத் தவிர வேறு மொழி உங்களுக்குத் தெரிந்திருந்தால், எஸ்.எஸ்.ஆர்.எஃப்  வலைத்தளக் கட்டுரைகளை வேறொரு மொழியில் மொழிபெயர்க்க நீங்களே முன்வரலாம்.
 • நீங்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர் என்றால், எஸ்.எஸ்.ஆர்.எஃப் தளக் கட்டுரைகளின் அற்புதமான தெய்வீக ஞானத்தை குறித்த விழிப்புணர்வை மற்றவர்களிடம்  பரப்பலாம்.
 • ஆறு அடிப்படைக் கோட்பாடுகளின்படி,  போதிய ஆன்மீக பயிற்சியை முறைப்படி செய்வதன் மூலம் அவர்களும் எவ்வாறு ஆனந்தத்தை அனுபவிக்க முடியும் என்பதை மக்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

6. இறைவனுக்கு சேவை செய்யும்போது ஸாதகர்களுக்கு எற்பட்ட ஆன்மீக அனுபவங்கள்

இறைவனுக்கு சேவை செய்வதன் முக்கியத்துவமும் நன்மைகளும்- ஸத்சேவை1. சில மாதங்களுக்கு முன்பு நானும், ஒரு சக ஸாதகரும் சக ஊழியர் ஒருவரை அவரது வீட்டில் சந்திக்கச் சென்றோம். எஸ்.எஸ்.ஆர்.எஃப் வலைத்தளத்தை மறுசீரமைப்பதில் தொழில்நுட்ப ரீதியாக எங்களுக்கு உதவ தனது விருப்பத்தை சக ஊழியர் வெளிப்படுத்தியிருந்தார். இறைவனின் போதனை தத்துவம் (குரு தத்துவம் தான் எங்களுக்கு உதவியதாக  நான் உணர்ந்தேன். ஏனெனில் வலைதளத்தில் தொழில்நுட்ப ரீதியாக எதை அடைய முயற்சிக்கிறோமோ, அதில் அந்நபருக்கு முன்அனுபவங்கள் இருந்தன. அவருடனான எனது உரையாடல் முழுவதும், நான் கடவுளின் இருப்பை உணர்ந்ததால் ஆன்மீக உணர்வை  அனுபவித்துக் கொண்டிருந்தேன். அத்துடன் என்னுடன் வந்த ஸாதகரும் ஆன்மீக உணர்வை  உணர்ந்தார். ஆன்மீகம் குறித்து அவர் கேட்ட சில கேள்விகளுக்கும் நாங்கள் பதிலளித்தோம். அவரால் எவ்வளவு நேரம் இதற்காக ஒதுக்க முடியும் என்று நாங்கள் அவரிடம் கேட்டபோது, “எனது  ஓய்வு  நேரம் முழுவதும்” என்று கூறினார். அடுத்த நாள் அவர் எனது சக ஸாதகரிடம் நேற்றைய சந்திப்பின் போது அவருக்கு  ஏற்பட்ட  அனுபவத்தை கூறினார்.

எங்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் வாய்விட்டு கேட்கவில்லை  என்றாலும், அவர் மனதில் ஆன்மீகம் குறித்த கேள்வி எழுந்தவுடன், நான் பதில் அளித்து கொண்டிருந்தேன் என்பதை பகிர்ந்து கொண்டார். இந்த அனுபவத்தால் அவர் மிகவும் வியப்பிற்குள்ளானார் என்று தெரிந்தது. நாங்கள் சென்ற பிறகு, இந்த அனுபவத்திலிருந்து வெளியே வருவதற்கு அவருக்கு சிறிது நேரம் பிடித்தது – திரு. ஷான் கிளார்க், ஆஸ்திரேலியா.

இறைவனுக்கு சேவை செய்வதன் முக்கியத்துவமும் நன்மைகளும்- ஸத்சேவை

2. கடந்த வாரம், எங்களுக்கு எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஸத்சங்கம் இருந்தது. ஸத்சங்கத்தின் போது,  தினமும் 1 லிருந்து -2 மணிநேரத்திற்கு ஸத்சேவையை  அதிகரிக்க எனக்கு வழிகாட்டப்பட்டது. அந்த ஸத்சங்கங்கில், கடவுள் என்னுள்  எதையோ விதைப்பதை உணர்ந்தேன். ஆதலால் எனக்கு போராடும் உணர்வு அதிகம் ஏற்பட்டது. அந்த வாரம் முழுவதும் இறைசேவைக்காக, தினமும் குறைந்தபட்சம் ஒரு மணிநேரம் என்னால் கொடுக்க முடிந்தது.

இறை சேவை செய்த அந்த வாரத்திற்குப் பிறகு, இறைசேவையிலிருந்து எனக்கு எவ்வளவு உள் வலிமை கிடைத்தது என்பதை உணர்ந்தேன். முன்பு போல் அறிவு  மற்றும் மனோரீதியான குழப்பத்தால், சமநிலையிலிருந்து வெளியேறாமல்  நிதானத்துடன் இருப்பதை கண்டேன். ஸத்சேவையை அதிகரிக்க முடிந்ததால், நான் இன்னும் அமைதியாக உணர்ந்தேன். ஆன்மீகம் மற்றும் ஆன்மீக பரிமாணத்தை பற்றி பல ஆண்டுகளாக என்னை நிலைகொள்ளாமல் தவிக்க விட்ட அனைத்து சந்தேகங்களும் அவநம்பிக்கைகளும் மறைந்துவிட்டதைப் போல உணர்ந்தேன்.

என்னிடம்  பொறுமை காட்டியதற்காக கடவுளுக்கு நன்றி! ஸத்சேவையை பல முறை செய்யச் சொன்னாலும், நான் பல ஆண்டுகளாக போதுமான ஸத்சேவை செய்யவில்லை. இன்றிலிருந்து நான் முடிந்தவரை செய்வேன் – திரு. அகோஷ் நாகி, ஹங்கேரி.

3. எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஸாதகர் ஒருவருக்கு பேசும் போது திக்கி தடுமாறும் பிரச்சனை இருந்தது. சிறுவயதிலிருந்தே அவருக்கு இந்த பிரச்சனை இருந்தது, ஆனால் அதற்கு எந்த சிகிச்சையும் இருக்கவில்லை. ஆன்மீக பயிற்சி மற்றும் அவரது ஸத்சேவையின் ஒரு பகுதியாக ஆன்மீகத்தைப் பற்றி பேசுவதை ஏற்றுக்கொண்டதன் காரணமாக, அதே ஸாதகர் ஆன்மீகக் கூட்டம் ஒன்றில் அதிக எண்ணிக்கை கொண்ட பார்வையாளர்களுக்கு முன்னால் குறைபாடற்ற முறையில் பேசினார். தடுமாறும் பிரச்சனை இல்லாமல் பேசக்கூடிய பெரும்பாலானோர், பார்வையாளர்களுக்கு முன்னால் பேச வேண்டியிருந்தால் ஒரு கட்டத்தில் தடுமாறக்கூடும் என்ற உணர்வின் காரணமாக பாதுகாப்பற்று உணர்வார்கள். தனது வாழ்நாள் முழுவதும் தடுமாற்றத்துடன் பேசிக் கொண்டிருந்த ஒருவர் ஸத்சேவையின் மூலம் அந்த குறைபாட்டிலிருந்து விடுபட்டார் என்ற போது இது அற்புதம் அன்றி வேறெதுவும் இல்லை.

முடிவுரை

இறைசேவையில் ஈடுபடுவது, விரைவான ஆன்மீக முன்னேற்றத்தை அடைவதற்கான ஒரு வழியாகும். அதாவது, ஒரு ஸாதகரின் பண்புகளை வளர்ப்பதற்கும் மற்றும் அஹம் லயம் , புத்திலயம், மனோலயம் ஏற்படுவதற்கும் இது உதவுகிறது.

ஸத்சேவைக்கான எந்தவொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்வதோடு, அதை சிறப்பாகச் செய்வதும் ஸாதகரின் பொறுப்பாகும். எது எப்படி இருந்தாலும், கடவுளின் பணி எவ்வாறேனும் செய்து முடிக்கப்படும். எனவே, எந்தவொரு ஸத்சேவையும் நிறைவு செய்வதற்கு தான் இன்றியமையாதவர் என்ற அகம்பாவத்தை ஸாதகர் வளர்த்துக் கொள்ளக்கூடாது. அவர் ஸத்சேவை செய்யாவிட்டாலும், அந்த ஸத்சேவையை  செய்வதற்கு வேறு சில ஸாதகர்கள் எப்போதும் இருப்பார்கள் என்று தன்னை தானே நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.

ஸாதகர் ஒருவர் குருவின் பணிக்கான ஒரு கருவியாக மாற முயற்சிக்கும்போது, இறைவனின் தெய்வீக  போதனை தத்துவம்  செயல்பட்டு அவரை அடைகிறது.

அன்புள்ள வாசகர்களே, ஸாதகர்களே, நாமஜபம் மற்றும் ஸத்சங்கத்தில்  கலந்துகொண்ட பிறகு, அடுத்த கட்டமாக இந்த கட்டுரையில் நாங்கள் பகிர்ந்ததை நேரடியாக அனுபவிக்க சில ஸத்சேவைகளை இயல்பாகவே நீங்கள் செய்ய முயற்சி செய்யலாம் என்று எஸ்.எஸ்.ஆர்.எஃப் பரிந்துரைக்கிறது.

நீங்கள் ஸத்சேவை செய்ய விரும்பினால், தயை கூர்ந்து  எங்களை  “நுழைவு வசதி” மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.