1. சத்சங்கத்தின் நன்மைகளுக்கான ஒரு அறிமுகம்

ஆன்மீக பயிற்சி செய்யும் ஸாதகரின் ஆன்மீக பயணத்தில் சத்சங்கம் என்பது ஒரு முக்கிய அம்சமாகும். அதுவும் ஆன்மீக பயணத்தின் துவக்கத்தில் ஆன்மீகம் என்பது ஒருவரது வாழ்க்கையில் ஒரு அங்கமாக இன்னும் ஏற்படாத போது சத்சங்கம் மிகவும் அவசியம். ஆன்மீக பயிற்சியில் அனுபவம் வாய்ந்த ஸாதகருக்கு சத்சங்கம் என்பது இறைவனுக்கு சேவை செய்வதற்கு ஒரு வாய்ப்பாகவும், சக ஸாதகருடன் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ஊடகமாகவும், ஆன்மீக பயிற்சி புரியும் ஏனையோரை வழிநடத்தவும் ஏதுவாக அமைகிறது.

சத்சங்கம் எவ்வாறு தங்களுக்கு உதவியது என்பது பற்றி சில ஸாதகர்கள் தங்கள் அனுபூதிகளை கீழே பகிர்ந்துள்ளார்கள்.
திருமணம் நடைபெற்றபின் நான் அமெரிக்காவிற்கு வந்தேன். அப்பொழுது நாமஜபம் செய்ய துவங்கி ஒரு மாதம் கடந்திருந்தது. அமெரிக்கா வந்தபின் நாமஜபம் செய்யவும் சில ஆன்மீக பயிற்சி செய்யவும் முயற்சி செய்வேன். ஆனால் அது முடியாமல் போய்விடும். கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆன்மீக பயிற்சி எதுவும் செய்யாமல் இருந்தேன். சத்சங்கம் செல்ல ஆரம்பித்ததும் தான்  திரும்பவும் நாமஜபம் தொடர்ந்து செய்ய துவங்கி ஆன்மீக முன்னேற்றத்திற்கு வேண்டிய செயற்பாடுகளை திட்டமிட ஆரம்பித்தேன். – எஸ்.கே, ஐக்கிய அமெரிக்கா

2. ஆன்மீகம் பற்றிய கேள்விகளுக்கான விளக்கங்கள்

ஸாதகர் ஒருவர் ஆன்மீக சாஸ்திரத்தை பற்றி கற்கும் பொழுது வாழ்கை தொடர்பான புதிய கருத்துக்களையும் பாடங்களையும் எதிர்நோக்கலாம். இந்த புதிய கருத்துக்கள் அவருடைய மனதில் ‘எவ்வாறு இந்த ஆன்மீக தத்துவத்தை நடைமுறை வாழ்க்கையில் செயல்படுத்துவது’, அல்லது ‘என்னுடைய ஆன்மீக பயிற்சியிலுள்ள தடைகளை எவ்வாறு கடந்து செல்வது’ போன்ற கேள்விகளை எழச்செய்யலாம். இவ்வாறு கேள்விகள் எழுவது சாதாரணமான விஷயம். இக்கேள்விகள் உடனுக்குடன் தெளிவுபடுத்தப்படும்போது ஒருவரது ஆன்மீக பயிற்சி தடைகள் எதுவும் இல்லாது செவ்வனே நடைபெறும்.

ஆன்மீகத்தை பரப்புவதற்கு ஆர்வமும், மற்றவர் மீது எதிர்பார்ப்பில்லாத அன்பும், ஆன்மீக உணர்வும் கொண்ட ஒரு ஸாதகர் சத்சங்கம் நடத்தும் போது அவரால் இறைவனுடைய எண்ணங்களை நல்லபடியாக அணுகமுடிவதோடு, ஆன்மீகம் பற்றியும் ஆன்மீக பயிற்சி பற்றிய கேள்விகளுக்கும் முழுமையான பதில்களை வழங்க முடிகிறது. அதோடு சத்சங்கம் வந்திருக்கும் ஏனைய ஸாதகர்களும் ஒட்டு மொத்தமாக ஏனையோரின் கேள்விகளுக்கான பதில்களை அறிய முடிவதால் அது போன்ற பிரச்சனைகள் எதிர்நோக்கும் போது எவ்வகையான மனப்பாங்கை கொண்டிருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. இவ்வகையான கேள்விகளுக்கு பதில் கிடைக்காவிடில் அது அவர்களுக்கு ஐயத்தை ஏற்படுத்தி, அவர்களுடைய முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு, சில சமயங்களில் ஆன்மீக பாதையை விட்டு அவர்கள் விலகி செல்லுமாறு செய்து விடும்.
ஸாதகர்கள்  சிலர் அனுபவ பூர்வமாக உணர்ந்தது யாதெனில், அவர்களுடைய மனதில் இருந்த கேள்விகள் அவர்கள் வெளிப்படையாக கேட்பதற்கு முன்னமே சத்சங்கம் நடைபெறும்போது பதில் கிடைத்து விடுகிறது என்பதாகும். சத்சங்கம் செல்வதற்கு ஒருவர் மேற்கொள்ளும் முயற்சியின் காரணமாக அவரிடம் சில காலங்களாக காணப்பட்ட கேள்விகளுக்கு பதில் கிடைப்பதற்கு இறைவன் உறுதுணை புரிகிறார்.

3. ‘ஆன்மீக பேட்டரிகளை’ ரீ-சார்ஜ் செய்வதற்கு சத்சங்கம் உதவுகிறது

ஆன்மீக சாஸ்திரத்தின்படி முழு பிரபஞ்சமும் சத்வ, ரஜ, தம என்ற மூன்று அடிப்படை சூட்சும கூறுகளால்  உருவாக்கப்பட்டது. சத்வ என்பது ஆன்மீக தூய்மை மற்றும் ஞானம்; ரஜ என்பது செயல்பாடு மற்றும் ஆசை; தம என்பது அறியாமை மற்றும் செயலற்ற தன்மையை பிரதிபலிக்கிறது.  எல்லா பொருட்களிலும் இருந்து வெளிப்படும் சூட்சும அதிர்வலைகள் இந்த சூட்சும அடிப்படை கூறுகளை பொறுத்தே அமையும்.

இன்றைய உலகில் பொருட்களுக்கும் பொருளியல் சார்ந்த விஷயங்களுக்குமே அதிக கவனம் தரப்படுகிறது. ஆன்மீகத்தில் கவனம் குறைவாகவே காணப்படுகிறது. இவ்வாறு சமூகம் ஆன்மீகத்தில் கவனம் குறைவாக இருக்கும் போது சுற்றுச்சூழலில் ஆன்மீக தூய்மையின்மை உருவாகிறது. இதனை ஆன்மீக மாசடைவு என்பர். அதாவது சமூகத்திலும் சுற்றுச்சூழலிலும் ரஜ தம சூட்சும கூறுகள் அதிகரித்து காணப்படுகின்றன. இந்த மாசடைவு நம் ஆன்மீக ஆற்றலில் குறைவினை ஏற்படுத்தி வார இறுதியில் நமது ‘ஆன்மீக பேட்டரிகளிலிருந்து’ சக்தி வெளியேற்றிவிடுகிறது. இதன் காரணமாக முற்றிலும் வலிமை இழந்ததாக நாம் உணர்வதோடு ஆன்மீக பயிற்சி பற்றி நினைத்து பார்ப்பது கூட கடினமாகிறது. இது நம்முடைய ஆன்மீக பயிற்சியினை விடாமுயற்சியுடன் செய்வதற்கு உள்ள ஆர்வத்தினை இழக்க செய்து விடுகிறது.
நாம் சத்சங்கத்தில் கலந்து கொள்ளும்போது மிக உயர்நிலை ஆன்மீக தூய்மையினை அனுபவிக்க முடிகிறது. சுற்றுச்சூழல் சைதன்யம் எனப்படும் தெய்வீக உணர்வினால் நிரப்பப்படுகிறது. இதன் பிரதானமான சூட்சும கூறு சத்வ ஆகும். சத்சங்கத்தில் கலந்து கொள்ளும் சாதகர்களின் ஆன்மீக நிலை உயர்வடைந்து காணப்படும் பொழுதும் கற்கும் மனப்பான்மையுடன் ஆன்மீக உணர்வும் அவர்களிடம் காணப்படும் பொழுதும்  மேற்கூறப்பட்ட ஆன்மீக தூய்மை இன்னும் அதிகரிக்கிறது. சில சமயங்களில் நேர்மறை சக்திகளும் தெய்வங்களும் கூட சாதகர்களை  ஆசிர்வதிக்கும் பொருட்டு சத்சங்கத்தில் சூட்சுமமாக பிரசன்னமாகின்றனர்.
சவாலான ஒரு வார இறுதியில் சாதகர் உடல் ரீதியாகவும் மனோ ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் வலிமை இழந்திருப்பார். இருப்பினும் சத்சங்கத்தில் கிடைக்கும் தெய்வீக உணர்வு மற்றும் ஆன்மீக தூய்மை போன்றவற்றால் இதில்  கலந்துகொள்ளும் ஸாதகர்கள் இந்த ஆன்மீக தூய்மையினால் நிரப்பப்பட்டு ஆன்மீக பயிற்சியினை தொடர்வதற்கு உற்சாகத்தை பெறுகின்றனர்.

குளிர் காய்வதற்கு நெருப்பு மூட்டும் பொழுது அதனை சுற்றி அமர்ந்த்திருக்கும் அனைவரும் நெருப்பின் வெம்மையை பெறுகின்றனர். அதே போல் சத்சங்கத்தில் கலந்து கொள்வோரும் மற்றவரின் ஆன்மீக அனுபவங்களால் ஆன்மீகரீதியில் ஊட்டமளிக்கப்படுகின்றனர். நெருப்பு எரிய எவ்வாறு காற்று அவசியமோ அதே போல் நமது ஆன்மீக பயிற்சி தொடர்ச்சியாக நடைபெற ஊக்குவிப்பதற்கு சத்சங்கம் அவசியமாகும்.

வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பொழுது மிகவும் சோர்வாக உணர்ந்தேன். ஆகையால் SSRF- இன் மற்ற ஸாதகர்களுடன்  சத்சங்கத்தில் கலந்து கொள்ள மனம் விரும்பவில்லை. தனியாக இருக்க விரும்பினேன். இருப்பினும் எனது கணவர் சத்சங்கத்தில் கலந்து கொள்ள வலியுறுத்தினார். ஆர்வம் இல்லாமல் சத்சங்கத்தில் கலந்து கொள்ள சம்மதித்தேன். சத்சங்கத்தின்  இடையில்,  ஒரு வாரத்திற்கு முன் நான் பெற்ற ஆன்மீக அனுபவத்தை பகிர சொல்லி வேண்டுகோள் விடுத்தனர். அந்த ஆன்மீக அனுபவத்தை பகிரும் பொழுது எனது ஆன்மீக உணர்வு தூண்டப்பட்டு கண்களில் நீர் சொரிய நன்றியுணர்வினை அனுபவித்தேன். அதன் பின் மிகவும் லேசாக உணர்ந்தேன். ஒரு நொடியில் நாள் முழுதும் ஏற்பட்ட சோர்வு காணாமல் போனது. – ஆர்.ஜி, ஐரோப்பா

3.1. தொலைபேசி மூலமாகவும் ஸ்கைப் (Skype) போன்ற தொடர்பு சாதன மென்பொருள் மூலமும் நடத்தப்படும் சத்சங்கங்கள்

சத்சங்கம் ஒன்றின் நேர்மறை சக்தியானது அனைவரும் ஒரே பௌதீக இருப்பிடத்தில் காணப்பட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இணையம் அல்லது தொலைபேசி மூலம் சத்சங்கத்தில் கலந்து கொண்டாலும் ஒருவரால் இறைவனுடைய சக்தியை பெற்றுக்கொள்ள முடியும். சத்சங்கத்தில் கலந்துகொள்ளும் ஸாதகர்களிடம் ஆன்மீக உணர்வு இருந்தால் இறைவனுடைய சக்தி சத்சங்கத்தில் இன்னும் மேலோங்கி காணப்படும்.
ஸ்பிரிச்சுவல் சயின்ஸ் ரிசர்ச் பௌண்டேஷன் உலகம் முழுவதும் ஸாதகர்களுக்காக இணையத்தின் மூலமாக சத்சங்கங்களை நடத்தி வருகிறது. வெவ்வேறு கண்டங்களில் இருந்து ஸாதகர்கள் இணையம் மூலம் சத்சங்கத்தில் ஒன்று கூடி இருப்பினும் அவர்களால் தெய்வீக உணர்வை உணர முடிவதோடு, சத்சங்கத்தில் கலந்து கொள்ளும் ஸாதகர்களுக்கிடையே ஒற்றுமையையும் நெருக்கத்தையும் உணர முடிந்தது.

நான் வட அமெரிக்க ஸ்கைப் சத்சங்கத்தில் கலந்துக் கொண்ட போது அங்குள்ள ஒருவரைக்கூட முன்னர் அறிந்திருக்கவில்லை. ஆரம்பத்தில் நான் அதிகம் பேசவில்லை. மற்றவர் கூறுவதை செவி மடுத்திக்கொண்டு மட்டும் இருந்தேன். சத்சங்கத்தை நடத்துபவர் மிகவும் நட்புடனும் இரக்க குணமுடையவராகவும் காணப்பட்டதுடன் அவர் தொடர்ந்து என்னிடமும் மற்றைய ஸாதகர்கள்களிடமும் கலந்துரையாட முயற்சி செய்தது என் மனதை நெகிழ செய்தது. சத்சங்கத்தில் கலந்து கொண்ட ஏனையோர் தங்களது ஆன்மீக பயிற்சியில் ஏற்பட்டுள்ள தடைகளை பற்றி பகிரும் பொழுது அவர்களுடைய நிலைமையினை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. நானும் நாமஜபம் செய்ய துவங்கியபின் ஏற்பட்ட அனுபவம் ஒன்றை பகிர்ந்தேன். சத்சங்கம் முடியும் தருவாயில் கலந்துக் கொண்ட அனைவரையும் நான் முன்னரே அறிந்திருந்தது போல் உணர்ந்தேன். நாங்கள் அனைவரும் ஆன்மீகம் என்பதால் இணைக்கப்பட்டுளோம் என்பதையும் உணர முடிந்தது. இந்த அனுபவத்திற்கு நான் இறைவனிடத்தில் நன்றி செலுத்துகிறேன். ஏனெனில் இது போன்றவை உலக வாழ்வில் வழக்கமாக நடைபெறுவதில்லை. – ராதா மாலிக், கனடா

4. சத்சங்கத்தின் மூலம் நமது ஆன்மீக பயிற்சியில் விடாமுயற்சியுடன் ஈடுபட ஊக்கம் கிடைக்கிறது

நாம் ஆன்மீக பயிற்சியில் நம்பிக்கையுடன் தொடர்ச்சியாக ஈடுபடும் பொழுது ஆன்மீக அனுபவங்களை பெறுகிறோம். சத்சங்கத்தின் போது இவ்வனுபவங்களை ஸாதகர்கள் பகிர்வதால்  இதன் பின்னணியில் உள்ள ஆன்மீக முக்கியத்துவத்தையும் உணர முடிகிறது. இந்த பாதையில் தொடர்ச்சியாக ஈடுபட இறைவனிடமிருந்து ஸாதகர்களுக்கு கிடைக்கும் பரிசே ஆன்மீக அனுபவங்கள் ஆகும். ஒருவர் தன்னுடைய ஆன்மீக அனுபவங்களை பற்றியோ மற்றையோரின் ஆன்மீக அனுபவங்களை பற்றியோ சிந்தனை செய்யும்பொழுது ஆன்மீக பயிற்சியில் இருக்கும் நம்பிக்கை அதிகரிக்கிறது.

 

ஒருமுறை, எனது ஆன்மீக பயிற்சி சரிவர நடைபெறவில்லை என நான் மிகவும் மன அழுத்தத்தில் இருந்தேன். நான் இறைவனிடம் எனக்கு உதவுமாறும் என்னுடன் இருக்குமாறும் மிகவும் மன்றாடி கேட்டுக்கொண்டேன். அத்தருணம் ஒரு குரல் ‘நான் எப்பொழுதும் உன்னுடன் இருக்கிறேன்’ என கூறுவதை உணர முடிந்தது. பின் நான் இறைவனிடம் ‘இறைவா, நான் உன்னை பார்க்க வேண்டும்’ என கேட்டுக்கொண்டபோது, அவர் ‘ஜன்னலிற்கு வெளியே பார். என்னை காண்பாய்’ என்றார். நான் ஜன்னலிற்கு வெளியே பார்த்தபோது ஒன்றும் தென்படவில்லை. நெடுநேரமாக காத்திருந்து, பின் இறைவனிடம் மறுபடியும் கேட்ட போது, அவர் தன்னுடைய உருவம் மெதுவாக தென்படும் என கூறினார். பின்பு எங்கிருந்தோ திடீரென்று இரட்டை வானவில் தென்பட்டது. அப்போது இறைவன் தான் வானவில் வடிவில் என்னை காண வந்ததாக கூறினார். எனது ஆன்மீக உணர்வு வெளிப்பட்டு நெடுநேரமாக அதே உணர்வில் இருக்க முடிந்தது. இன்று கூட இந்த ஆன்மீக அனுபவத்தை நினைக்கும்போது உத்தரவாதம் கிடைப்பதை உணர்வதோடு மனமும் அமைதியடைந்து விடுகிறது.

இந்த ஆன்மீக அனுபவத்தை மெல்போர்னில் உள்ள ஸாதகர்களுடன் சத்சங்கத்தின் வாயிலாக பகிர்ந்து கொண்ட போது அனைவரும் ஆன்மீக உணர்வை அனுபவிக்க முடிந்ததோடு இறைவன் நமது பிரார்த்தனைகளுக்கு செவிமடுக்கிறார் எனும் நம்பிக்கையும் உறுதியும் ஏற்பட்டு மன அமைதியை உணர முடிந்தது. – சுவேதா கிளார்க், மெல்போர்ன், ஆஸ்திரேலியா

ஆன்மீக முன்னேற்றம் எனும் ஆதாயத்தை பெற வேண்டுமாயின் நமக்கிருக்கும் ஒரே நாணயம் ‘இறை நம்பிக்கை’ ஆகும். உவமானம் ஒன்றின் மூலம் கூறுவதென்றால் அமெரிக்காவின் நாணயம் டாலர், ஐரோப்பாவின் நாணயம் யூரோ. அமெரிக்காவில் ஏதேனும் வாங்க வேண்டுமாயின் டாலர்களையே பயன்படுத்த வேண்டும். அவ்வாறே ஆன்மீக முன்னேற்றம் ஏற்பட அசைக்கமுடியாத நம்பிக்கை மிகவும் அவசியம். பொதுவாக நமது வங்கி கணக்கில் இருந்து எப்பொழுது வேண்டுமானாலும் பணத்தை மீளப்பெற முடியும் என நாம் நம்பிக்கை வைத்திருக்கிறோம். அதேபோல் ஆன்மீகத்தையும் ஆன்மீக முன்னேற்றத்தையும் பொறுத்தவரையில் இறைவன் மீதும் ஆன்மீக பயிற்சி மீதும் நமக்கு இதற்கும் மேலாக நம்பிக்கை இருக்க வேண்டும்.

5. பரந்த மனப்பான்மையும் மற்றவர் மீது அன்பு காட்டும் பண்பும் விருத்தியடைதல்

சத்சங்கத்தில் ஒரு ஸாதகர் மற்ற ஸாதகர்களுடன் நெருக்கத்தை வளர்த்துக்கொள்கிறார். இவ்வுலக உறவுகள் போலல்லாது ஸாதகர்களிடையே உள்ள உறவின் குறிக்கோள் ஆன்மீக முன்னேற்றம்  ஆகும். ஆதலால் அவர்களிடையே குறைவான எதிர்பார்ப்பும், ஒருவருக்கொருவர் ஆன்மீக பயிற்சியில் உதவி செய்வதும், ஒருவரிடமிருந்து மற்றவர் கற்றுக்கொள்ளும் மனப்பான்மையுமே அதிகம் காணப்படும். இவ்வகையான நல்ல நேர்மறையான உறவுகளை வழிகாட்டி உருவாக்குவதற்கு சத்சங்கம் வாய்ப்பினை வழங்குகிறது. நாளடைவில் ப்ரீதி என்று சமஸ்கிருதத்தில் கூறப்படும் எதிர்பார்பற்ற அன்பை ஸாதகர்களால் தங்களிடையே உணர முடிகிறது. பின்னர் அனைத்து மனித குலம் மீதும் எதிர்பார்பற்ற அன்பை ஒருவரால் உணர முடியும். எனினும் இது யாவும் தொடங்குவது ஆன்மீக வழிகாட்டுதலை மையமாக கொண்ட சத்சங்கத்தின் சூழலில் இருந்தே.

நான் கல்லூரியில் மேலாண்மை மாணவர். கடந்த மூன்றரை வருடங்களாக SSRF இன் வழிகாட்டுதலுக்கு ஏற்ப ஆன்மீக பயிற்சியினை செய்து வருகின்றேன். நான் மிகவும் அதிஷ்டசாலி ஏனெனில் ஒவ்வொரு வாரமும் நிகழும் சத்சங்கம் எனக்கு மிகவும் உதவி புரிகிறது. சத்சங்கம் செல்வதற்கு முன் நான் மிகவும் உணர்ச்சி வசப்படுபவர் ஆகவும் மற்றவர் மீது பொறாமை கொள்பவராகவும் இருந்தேன். சத்சங்கம் செல்ல துவங்கிய பின் மற்றவரது சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ளவும் தமது இலக்குகளை அடைந்தவரை பாராட்டவும் ஆரம்பித்தேன். சமீபத்தில் எனது நண்பர் என்னிடம் ‘எவ்வாறு கடினமான தருணங்களிலும் மற்றவரை பற்றி சிந்திக்கின்றாய்’ என வினவினார். அப்பொழுதுதான் நான் எவ்வளவு தூரம் ஆன்மீக பயிற்சியினாலும் சத்சங்கம் செல்வதனாலும் மாறியுள்ளேன் என உணர்ந்து கொண்டேன். – ஒரு ஸாதகர்

6. சுருக்கமாக

ஆன்மீகம் என்பது அனுபவம் மூலம் உணர்ந்து கொள்ளக்கூடிய விஞ்ஞான சாஸ்திரம் ஆகும். ஸாதகரால் சத்சங்கத்தின் நன்மைகளை அறிந்து கொள்ள சிறந்த வழி சத்சங்கத்திற்கு முன்பும் பின்பும் தமது ஆன்மீக பயிற்சியினை கண்காணித்தல் ஆகும். தொடர்ந்து சத்சங்கம் செல்லும்போது நாம் நமது ஆன்மீக பயிற்சியில் திடமான நிலையை அடைகின்றோம். இதன் பலனாக நாம் நம் வாழ்வின் ஆன்மீக நோக்கமான இறைவனை உணர்ந்தே தீர வேண்டும் என்ற உறுதியான நம்பிக்கையை பெறுகிறோம்.

ஸ்பிரிச்சுவல் சயின்ஸ் ரிசர்ச் பௌண்டேஷன் உலகளாவிய ரீதியில் சத்சங்கங்களை நடத்தி வருகிறது. அன்றாடம் ஆன்மீக பயிற்சி செய்யும் ஸாதகர்களால் சத்சங்கங்கள் நடத்தப்பட்டு வருகிறது. சத்சங்க நேரங்களை அறிந்து கொள்ள நிகழ்வுகளின் நாட்காட்டி எனும் பகுதிக்கு செல்லவும்.