தெய்வம் என்றால் என்ன?

ஆன்மீகத்தில், தெய்வம் என்னும் கருத்தை ஒரு ஒப்புமை கொண்டு விளக்கலாம். சிவப்பு, நீலம், மஞ்சள் ஆகிய பிரதான நிறங்கள் இருக்கும்போது, உலகில் ஏன் எண்ணிலடங்கா வண்ணங்கள் இருக்கின்றன என்று எப்பொழுதாவது நீங்கள் சிந்தித்தது உண்டா?

இந்த மூன்று பிரதான நிறங்களின் வரிசைமாற்றங்கள் மற்றும் சேர்க்கைகள் காரணமாக பல்வேறு புதிய நிறங்கள் உண்டாகின்றன என்பதை நாம் அறிவோம்.

அதுபோல, இறைவன் ஒருவராக இருப்பினும் இந்த பிரபஞ்சத்தில் குறிப்பிட்ட தொழில்களை செய்வதற்காக அவர் பல்வேறு விதத்தில் தன்னை வெளிப்படுத்துகிறார். பிரபஞ்சத்தில் பல்வேறு தொழில்களை ஆற்றுவதற்கு இறைவன் பின்வரும் ஐந்து தத்துவங்களாக தன்னை வெளிப்படுத்துகிறார். அவை:

  • படைத்தல்: அனைத்தும் படைக்கப்படுதல்
  • காத்தல்: படைக்கப்பட்ட அனைத்தும் காக்கப்படுதல்
  • அழித்தல்: படைக்கப்பட்டு காக்கப்பட்ட அனைத்தும் அழிக்கப்படுதல்
  • பெருக்கும் தன்மை: இறைவன் எல்லாவற்றிலும் உள்ளார்
  • ஆனந்தம்: உயர்ந்த நித்தியானந்தமே இறைவனின் இயல்பாகும்

இந்த ஐந்து தத்துவங்களும் எண்ணற்ற விதத்தில் சேர்ந்து, பல்வேறுபட்ட தொழில்களை பிரபஞ்சத்தில் ஆற்றுவதற்காக, லட்சக்கணக்கான தனித்துவமான இறைவனின் அம்சங்களை (கற்றல், கற்பித்தல், பாதுகாத்தல், சுகாதாரம் போன்றவை) வழங்குகின்றன. ஆன்மீகத்தின்படி, இறைவனின் ஒவ்வொரு அம்சமும் ஒரு உருவத்தை கொண்டிருக்கும். இவரே தெய்வம் என அழைக்கப்படுகிறார். பிரபஞ்சத்தில் தனித்துவமான தொழில்களை ஆற்றும் தெய்வங்கள் மொத்தம் முப்பத்து முக்கோடி உள்ளனர்.