ஒவ்வொரு ஸாதகரும் தங்களது ஆன்மீக பயணத்தில் இறைவன் தங்களை எவ்வாறு வழிநடத்துகிறார் என்பதை ஏதாவது ஒரு சந்தர்ப்பத்திலாவது அனுபவத்தில் உணர்வார்கள். இவ்வாறு வழிநடத்துவது வழிநடத்தும் இறைதத்துவம் ஆகும். இது குருதத்துவம் என்றும் வழங்கப்படுகிறது. இந்த தத்துவம் ஒரு ஸாதகரை ஆன்மீக பயிற்சியில் ஈடுபடும்படி செய்து அவரது ஆன்மீக பயணம் சிறப்புற, படிப்படியாக வழிகாட்டுகிறது. ஒவ்வொரு அடியாக வழிநடத்துகிறது. அதனால்தான் குரு தத்துவம் ஒரு ஸாதகருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இயல்பாகவே இறை நாட்டம் உள்ள ஒரு நேர்மையான ஸாதகர் தனது வாழ்க்கையில் உதவ குருதத்துவம் எவ்வாறு எல்லா வகைகளிலும் வெளிப்பட்டு தோன்றி உதவியது என்பதை அனுபவத்தில் உணர்ந்து நன்றியுணர்வு நிறைந்தவராக இருப்பார். குருதத்துவத்திற்கு நாம் நன்றி சொல்ல எல்லா நாட்களும் நல்ல நாட்களே என்று கருதப்பட்டாலும், வருடத்தில் ஒரு நாளான குருபூர்ணிமா நாள், அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது ஏனெனில் குருபூர்ணிமா தினத்தில் குருதத்துவம் உலகம் முழுவதிலும் ஆயிரம் மடங்கு அதிகமாக செயல்படுகிறது. உண்மையில் குரு தத்துவம் வருட ஆரம்பத்திலிருந்து செயல்பட ஆரம்பித்து குருபூர்ணிமா தினம் வரை அதிகரித்துக் கொண்டே வந்து அன்றைய தினம் மிக அதிக அளவான ஆயிரம் மடங்கு செயல்படுகிறது.

அதாவது ஒருவர் சரியான கண்ணோட்டத்துடன் சரியான முறையில் முயற்சித்தால் ஆன்மீக நிலையில் குருபூர்ணிமா வரையுள்ள காலமும் குருபூர்ணிமா அன்றும் அதிகபட்ச பலனை அவர் அடையலாம். இவ்வருடம் குருபூர்ணிமா ஜூலை 3(இந்திய நேரப்படி), திங்கட்கிழமை அன்று வருகிறது. இக்காலகட்டத்தில் அதிக செயல்பாட்டில் உள்ள குருதத்துவத்தின் மூலம் பயன் பெறுவதற்கான சில வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கற்றுக் கொள்ளும் மனப்பான்மையுடன் எப்போதும் இருத்தல்

நம் வாழ்வில் சில சமயங்களில் பல வழிகளிலும் சவாலாக இருக்கக் கூடிய சந்தர்ப்பங்களை எதிர்கொள்ள நேரிடும். அம்மாதிரி சந்தர்ப்பங்களை, அவை நமக்கு கற்றுத் தரும் படிப்பினை என்ன என்ற மனப்பான்மையுடன் எதிர்கொள்ளும்போது குருதத்துவத்துடன் ஒன்றிணைந்து குருதத்துவம் நமக்கு காண்பிக்கும் விஷயங்களை உணர்ந்து  நல்ல பயனை பெற முடியும். ”சந்தர்ப்பங்களே நமக்கு குரு” என்று சொல்லும் ஒரு சொல் வழக்கு உண்டு. எனவே ஒவ்வொரு நிகழ்ச்சியும் அதன் மூலம் நமக்கு ஒரு படிப்பினையை கொடுப்பதற்காகவே இறைவனால் உருவாக்கப்படுகிறது என்ற ஆன்மீக உணர்வுடன் எப்போதும் நாம் இருக்க வேண்டும். ஒவ்வொரு நிகழ்வின் மூலமும் அவர் என்ன படிப்பினையை நமக்கு கொடுக்கிறார் என்பதை இறைவனிடமே நாம் கேட்கலாம்.

இறைவன் நமக்கு அளித்திருக்கும் விஷயங்களை நினைத்து நாம் நன்றியை வளர்த்துக் கொள்ள வேண்டும்

இந்த உலகம் முழுவதையும் படைத்தவர் இறைவனே. இறைவன் நமக்கு உயிரை அளித்து அதை ஒவ்வொரு கணமும் பாதுகாக்கிறார். அவர் நமக்கு தேவையான எல்லாப் பொருள்களையும் அளித்திருப்பதால் நாம் ஆன்மீக பயிற்சியில் கவனம் செலுத்த முடிகிறது. ஆனால் பெரும்பாலான நேரங்களில் நமக்கு இந்த விஷயத்தில் கவனம் இருப்பதில்லை. ஆனால் நாம் அவ்வப்போது இறைவனுக்கு நன்றி செலுத்தும் நோக்கத்தை வளர்த்துக் கொண்டோமானால் அது நமது நன்றியுணர்வையும், நாம் எப்போதும் நன்றி செலுத்தும் ஆன்மீக உணர்வுடன் இருப்பதையும், மேம்பட வைத்து அதன் மூலம் நமக்கு ஆன்மீக முன்னேற்றம் விரைந்து ஏற்படவும் உதவும்.

அளவிலும் தரத்திலும் ஆன்மீக பயிற்சி மேம்பட நமது முயற்சியை அதிகரித்தல்

குருபூர்ணிமா நெருங்கி வரும் இந்த காலகட்டம் ஆன்மீக வளர்ச்சிக்கு மிகவும் பொருத்தமான காலமாகும். இந்த நேரத்தில் ஆன்மீக பயிற்சிக்கு அதிக முயற்சி எடுத்துக் கொண்டோமானால் குருதத்துவத்தை நம்மிடம் அதிக அளவு ஈர்த்து, அதன் மூலம் அதிக அளவு நன்மைகளை அடைய முடியும். அளவிலும் தரத்திலும் மேம்பட நாம் முயற்சி செய்யலாம். அளவில் வளர்ச்சி என்பதன் பொருள் அதிக நேரம் நாமஜபம் செய்வது, ஆளுமைக் குறைகளைக் களைவதில் அதிக கவனம் செலுத்துவது, ஸத்சேவையில் அதிக நேரம் செலவிடுதல் ஆகியனவை ஆகும். தரத்தில் வளர்ச்சி என்பதன் பொருள் நாமஜபத்தை ஆன்மீக உணர்வுடன் செய்வது, ஸத்சேவையை கூடுமானவரை தவறுகள் நேராமல் கவனத்துடன் திருத்தமாக செய்வது, நேர்ந்த தவறுகளை சம்பந்தமாக மனதை உள்முகப்படுத்தி ஆழ்ந்து கவனித்து இனி தவறுகள் நேராமல் கவனத்துடன் இருப்பது ஆகியன ஆகும்.

உன்னிடம் என்ன உள்ளதோ அதை இறைவனுக்கு அளித்தல்

இறைவன் நமக்கு என்ன வேண்டுமானாலும் அளிக்க தயாராக இருக்கிறார். ஆனால் அதை பெறுவதற்கு நாம் நம்மை எவ்வாறு தகுதியுள்ளவர்களாக செய்து கொள்வது? நம்மிடம் என்ன உள்ளதோ அதை இறைவனுக்கு அர்ப்பணிப்பதன் மூலம் அவரது ஆசியை பெறுவதற்கு நம்முள் இடமேற்ப்படுத்திக் கொள்கிறோம். ச்ரத்தையுடன் நமது குறைகளைக் களைய முயற்சிப்பதன் மூலமும் நாமஜபத்தின் மூலமும் நமது மனதையும் இறைவனுக்கு ஸமர்ப்பிக்கலாம். உடலினாலும் புத்தியினாலும் பல்வேறு ஸத்சேவை-களில் ஈடுபடலாம். உலக அளவில் ஆன்மீகத்தை பரப்புவதை அடிப்படை கொள்கையாகக் கொண்ட ஆன்மீக ஸ்தாபனங்களுக்கோ மகான்களுக்கோ நமது செல்வத்தை அர்ப்பணிக்கலாம். இந்த வகையில் எஸ்.எஸ்.ஆர்.எஃப். அமைப்பு ஆர்வமுள்ள ஸாதகர்களுக்கு அவர்களது உடல், மனம், புத்தி, செல்வம் ஆகியவைகளை இவ்வகையில் அர்ப்பணிக்க பல்வேறு வழிவகைகளில் வழி-காட்டுகிறது. மேலே குறிப்பிட்டவைகளுள் செல்வத்தை அர்ப்பணிப்பது சுலபமான வழி. ஆனால் ஒரு ஸாதகர் மற்ற வழிகளிலும் தன் பங்கை செலுத்தினாலே அதிகமான பயனை அடைய முடியும்.

குருபூர்ணிமா நெருங்கும் இந்த நேரத்தில் ஸாதகர்களாகிய நீங்கள் அதிக அளவில் ஆன்மீக பயிற்சி செய்து குருபூர்ணிமாவை ஆனந்த நிலையில் அனுபவிக்க விரும்புகிறோம்!