சுய ஆலோசனை என்றால் என்ன?
கடந்த இரண்டு பிரிவுகளில் ஆளுமை குறைகளை களைதல்  முறை [ஆங்கிலம்: Personality Defect Removal (PDR)] மற்றும் நம் ஆளுமை குறைகளை எவ்வாறு கண்டறிவது என்று அறிமுகப்படுத்தி உள்ளோம்.  ஆளுமை குறைகளை களைதல் முறையின் அடுத்த படியாக நமது ஆளுமை குறைகளை அகற்றும் ஒரு நுட்பத்தைப் பற்றி பார்ப்போம்.

1. அறிமுகம்

நாம் அதிகமாக  அதிக அளவில் இணைக்கப்பட்டுள்ள உலகத்தில் வாழ்கிறோம்,  நமது  கூட்டுச்  செயல்  மற்றும்  அணுகுமுறை  சமுதாயத்திலும்  சூழலிலும்  தாக்கத்தை  ஏற்படுத்தும். மனித இயல்பை புரிந்துக்கொள்ள நவீன அறிவியல் அதிகமாக முயற்சித்து இருந்தாலும் நம் உணர்வின் ஆழ்ந்த அம்சங்களை அறிய முடியவில்லை. மானிட நடத்தையை ஆள்வது என்ன, நாம் செய்யும் செயல்களை ஏன் செய்கிறோம்?

துயரம், மன அழுத்தம் போன்ற நமது உள்ளார்ந்த உணர்வுகளை முழுமையாக மறைக்க இந்த சமுதாயம் நமக்கு நன்கு கற்பித்துள்ளது. கட்டுப்பாட்டில் தான் இருக்கிறோம் என்று உலகிற்கு காண்பிக்கிறோம் ஆனால் அப்படி இல்லாமல் உள்ளுக்குள் உடைந்து போயிருந்தால் எப்படியிருக்கும்? இச்சூழலில் இருந்து வெளிவந்து நாமும் இதில் பங்கு கொண்டுள்ளோம் என உணருவோமா?  மன  அழுத்தத்திற்கான  காரணங்களை  ஆராய்ந்தோமானால்  நமக்குள்  இருக்கும்  ஆளுமை குறைகளே இதன் காரணம் என்பதை உணர்வோம். நம் ஆளுமையின் குறைபாடுகளே வெவ்வேறு துயரத்தையும் சிக்கல்களையும் உண்டு செய்கிறது.

2. நம் ஒட்டுமொத்த நிலையை மனதில் இருக்கும் எண்ணப்பதிவுகள் தீர்மானிக்கும்

நம்மில் பலர் கஷ்டமான சூழ்நிலையிலோ அல்லது நாம் நினைத்தது போல் நடக்காத சூழ்நிலையில் வெவ்வேறு எதிர்மறை உணர்வுகளை வெளிப்படுத்தி அதிக துயரங்களை அனுபவிக்கிறோம். கோபிக்கக் கூடாது, பொறாமை கூடாது, நாம் நினைத்தது போல் நடக்காத சிறிய நிகழ்வுகளுக்கு எல்லாம் இடிந்து போய்விடக்  கூடாது என்றெல்லாம் அறிவு சார்ந்த ரீதியில் நமக்கு தெரியும். கஷ்டகாலத்திலும் சம நிலையில் இருக்க நினைக்கிறோம். சூழ்நிலைகளுக்கு ஏற்ப வெளிப்படும் சில பொதுவான எதிர்வினைகளை இப்பொழுது பார்க்கலாம்:

  • நான் நினைப்பது போல் நடக்கவில்லை என்றால் சினம் கொள்கிறேன்.
  • எனது நண்பனின் புதிய  ஜாகுவார்  காரை  பார்க்கும்போது பொறாமை ஏற்படுகிறது.
  • எனது கடின உழைப்பை முதலாளி பாராட்டவில்லை என்றால் எவ்வளவு உழைத்தாலும் பயனில்லை என்ற எண்ணத்துடன் வருத்தப்படுகிறேன்.

நமது மனம் நம்மை கட்டுப்படுத்துகிறது. நமது எண்ணங்கள், உணர்வுகள், செயல்கள் & எதிர்செயல்கள் நமது ஒட்டுமொத்த நிலையை தீர்மானிக்கிறது. நமது ஆழ்மனதில் இருக்கும் ஆளுமை குறைகளின் எண்ணப் பதிவுகளால் ஏராளமான எண்ணங்கள் நம் வெளிமனத்திற்குச் செல்கிறது, வெளிமனமும் இந்த தவறான உந்துவிசையால் செயல்படுகிறது. உதாரணத்திற்கு, “எனக்குச் சூடான காப்பி வேண்டும் ஆனால் என் கணவர் மிதமான சூட்டில் காப்பி கொடுத்தார்”. நம் ஆழ்மனதில் இருக்கும் கோபம் என எண்ணப் பதிவால் தவறான உந்துவிசை வெளிமனதிற்குச் செல்கிறது – “கோபம் கொள், இவர் எப்போதுமே இப்படித்தான் செய்கிறார், இனி பொறுக்கலாகாது”. ஆளுமை குறையான கோபத்தின் எண்ணப் பதிவால் எழும் இந்த வலிமையான உந்துவிசையால் நமது வெளிமனம் தவறாக இயங்கி, நாம் சினம் கொள்கிறோம். ஏனென்றால் இந்த தவறான உந்துவிசையை எதிர்க்க எந்தவித நேர்மறையான ஊக்கமும் கொடுப்பதில்லை.

சுய ஆலோசனை கொடுப்பதால் நமது ஆழ்மனதிற்கு நேர்மறையான பரிந்துரை கொடுத்து, எதிர்மறையான எண்ணப்பதிவால் எழும் எதிர்மறை உந்துவிசையை ரத்து செய்கிறோம். மேலே சொன்ன காப்பி உதாரணத்தில் வெளிமனதிற்கு கோபம் கூடாது என புரியவைக்கிறது. இது தவறு, மற்றவர்களை பாதிக்கும்  என்ற விழிப்புணர்வு அதிகரித்து நமது தவறான ஒழுக்கம், எண்ணம், செயல் மற்றும் ஆளுமை குறையின் தவறான எண்ணப்பதிவில் இருந்தும் மீண்டுவர உதவுகிறது.

3. மனதின் எதிர்மறையான போக்கிலிருந்து மீண்டு வர ஆன்மீக சக்தி தேவை

மனதில் உள்ள எதிர்மறை எண்ணப் பதிவுகளில் இருந்து மீள  விருப்பம் மட்டுமே போதாது. எதிர்மறை எண்ணப்பதிவுகள் நம் ஆழ்மனதில் இருக்கின்றன, அதனால் அதே  மட்டத்தில்  தான் சரிசெய்ய வேண்டும். ஆளுமை  குறைகளை  களையும் முறையில் பராத்பர குரு டா.  ஆடவலேயின் சங்கல்பம் உள்ளது, ஆகையால் குறைகளை  களையும்  ஒவ்வொரு படியிலும் சைதன்யம் உள்ளது. அதனால் நாம் சுய ஆலோசனை கொடுக்கும்போது அதன் வார்த்தைகள் மட்டுமின்றி நமது ஆழ்மனதில் சைதன்யமும் நுழைந்து ஆளுமையில் விரைவான மாற்றம் ஏற்படும். தவறாமல் சுய ஆலோசனை கொடுப்பதால் பல ஸாதகர்கள் தனது ஆளுமை குறைகள் குறைந்து விட்டது என அறிந்துள்ளார்கள்.

4. சுய ஆலோசனை என்றால் என்ன?

ஆழ்மனதில் தோன்றும் தவறான எண்ணம், உணர்வு, செயல், எதிர்செயலுக்கு ஒரு நேர்மறை ஆலோசனை கொடுப்பதே சுய ஆலோசனை ஆகும்.  இதன் மூலம் எதிர்மறை எண்ணத்தை எதிர்ப்பதற்கு நம் மனதிற்கு தேவையான தக்க நேர்மறையான ஆலோசனையை வழங்குகிறோம், இதனால் ஆளுமை குறை இறுதியில் அகற்றப்படுகிறது.

உதாரணங்கள்:

  • தவறு/குறைபாடு – கோபம்: அம்மா என்னை என் தங்கையுடன்  ஒப்பிட்டு  அவள்  நன்கு  படிக்கிறாள்  என  கூறியதால்  நான் கோபம் அடைந்தேன்.
  • தவறு/குறைபாடு – பொறாமை: எனது நண்பன் அருணின் புதிய ஜாகுவார்  காரை பார்த்தவுடன் பொறாமை கொண்டேன்.
  • தவறு/குறைபாடு – பாதுகாப்பின்மை (வருத்தம்): என் முதலாளி எனது கடின உழைப்பை பாராட்டத் தவறியதால் எத்தனை உழைத்தாலும் பயனில்லை என்று வருந்தினேன்.

மனதில் தோன்றும் ஒவ்வொரு தவறான எண்ணம்/ உணர்வுக்கும் ஒரு நேர்மறையான ஆலோசனை கொடுப்பதால், அந்த எதிர்மறை உணர்ச்சி மற்றும் மன சஞ்சலம் எதிர்க்கப்பட்டு, மனதை சரியான திசையில் வழிநடத்துகிறது.

சுய ஆலோசனை – கோபம்: “எப்போதெல்லாம் அம்மா என்னை தங்கையுடன் படிப்பில் ஒப்பிட்டுப் பேசுகிறாரே, அப்போது நான் அமைதி காத்து, அம்மா என் நலனுக்காக தங்கையிடம் இருந்து  கற்றுக்கொண்டு, நன்கு படிக்கச் சொல்கிறார் என்று உணர்வேன்”.

சுய ஆலோசனை – பொறாமை: “எப்போதெல்லாம் நான் அருணின் புதிய  ஜாகுவார்  காரை பார்த்து பொறாமை படுகிறேனோ அப்போது நான் அருண் கடினமாக உழைத்து கார் வாங்கியுள்ளான் என்றுணர்ந்து  அவனுக்கு  ஆதரவு  அளித்து அவனுடன் சேர்ந்து மகிழ்ச்சி அடைவேன்”.

சுய ஆலோசனை – பாதுகாப்பின்மை: “எப்போதெல்லாம் எனது முதலாளி என் உழைப்பை பாராட்டத் தவருகிறார் என்று துக்கம் அடைகிறேனோ, அப்போது நான்  இது தொடர்ச்சியாக கற்கும் ஒரு செயல்முறை என்பதை நினைவில் கொண்டு, உயரத்தை அடைய ஏறத்தாழ்வு இருக்கதான் செய்யும் என்றுணர்ந்து, விடாமுயற்ச்சி செய்ய சக்தி கேட்டு கடவுளை பிரார்த்திப்பேன்”.

நம்முள் இருக்கும் ஆளுமை குறைகள், மற்றவரின் ஆளுமை குறைகளால் நமக்கு ஏற்பட்ட கஷ்டம் மற்றும் மாற்றமுடியாத துயரமான வாழ்க்கை சூழலில் இருந்து மீள சுய ஆலோசனை உதவுகிறது. ஒருவர் நேரிடும் தற்போதைய எதிர்மறை சூழலில் இருந்து மீண்டுவர மட்டுமே அல்லாமல் வெகு காலமாக இருக்கும் போதைப்பழக்கம், பால்ய சம்பவங்கள் போன்ற சிக்கல்களில் இருந்தும் தீர்வு காணலாம். சுய ஆலோசனை எடுத்துக் கொள்ளும்போது தினசரி வகுப்பில் நேர்மறை ஆலோசனையை பலமுறை சொல்கிறோம், இதனால் எதிர்மறை எண்ணப் பதிவுகள் குறைகிறது. சுய ஆலோசனை எடுத்து எதிர்மறை எண்ணங்களை குறைத்தால் தானாகவே மறுபுற பண்பு வந்துவிடாது, அதை வளர்க்க நாம் உழைக்க வேண்டும். உதாரணம்: சுய ஆலோசனை மூலம் கோபத்தை குறைத்தால் மற்றவர் மீது அன்பு தானாகவே வராது. அதாவது ஒரு நோயுற்றவர் மருந்து சாப்பிட்டு குணமடைவாரே தவிர தானாகவே உடல் வளர்ச்சி ஏற்படாது. ஒருவர் தனது தசைகளை பெருக்கிக்கொள்ள உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதேபோல், சுய ஆலோசனை எடுத்து கோபத்தை குறைத்தவுடன் மற்றவர் மீது அன்பை வளர்க்க நினைவாக முயற்சி செய்தல் அவசியம்.

இவ்வுலகில் சுய ஆலோசனை மூலம் மீளமுடியாத ஒரு பிரச்சனையே இல்லை. – பராத்பர குரு டா.ஆடவலே

5. உறுதிமொழிக்கும் (affirmation) சுய ஆலோசனைக்கும் என்ன வித்தியாசம்?

மன அழுத்தம் மற்றும் நீடித்த குறைபாடுகள் இருக்கும் நோயாளிகளுக்கு மனநல மருத்துவர் உறுதிமொழி  வடிவமைத்துக்  கொடுத்து சிகிசிச்சை அளிப்பார்,  அத்துடன் ஒவ்வொரு  அமர்விற்கும்   நிறைய பணம் செலவாவதுண்டு. மனநல மருத்துவர்கள் உறுதிமொழி மட்டுமே அளிப்பார்களே தவிர நோயாளிகளின் குறைபாடுகளை அறிந்து, அதிலிருந்து மீள உதவுவதில்லை. ஆளுமை குறைகளை களையும் செயல்முறை தனித்துவமாக ஒருவரின் தேவைக்கு ஏற்றபடி வடிவமைக்கப்படுவதால், உறுதிமொழி எடுத்தலை காட்டிலும் அது அதிக நன்மை பயக்கக் கூடியது. அத்துடன், ஆளுமை குறைகளை களையும் செயல்முறையில் உள்ள ஆன்மீக சக்தி அதன் வினைத்திறனை மேலும் அதிகரிக்கும்.

பிரச்சனை ஒன்றின் மூல காரணம், 90-95% நேரங்களில் நம் குறைபாடுகளிலேயே அன்றி வெளிக் காரணங்களாக இருக்காது. ஆகவே சுய ஆலோசனையானது 90-95% வரை பயன் அளிக்கக்கூடியது. ஒப்பிட்டு பார்த்தால், உறுதிமொழிகள் வெறும் 25-30% பலன் மட்டுமே தரும்.  உறுதிமொழிகள் நம்மை நேர்மறையாக சிந்திக்க வைத்து, கடுமையாக உழைத்து, இலக்கை அடைய ஊக்கம் அளிக்க வல்லது என்பதால் அதனாலும் நன்மைகள் இருக்கின்றன.

மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் சுய ஆலோசனை நம் கர்மவினை/விதியை குறைக்கிறது. ஏனென்றால் நம் ஆழ்மனதில் தான்  எண்ணப்பதிவுகளின்  வடிவில்  கர்மா  சேகரிக்கப்பட்டுள்ளது,   அத்துடன்  சுய  ஆலோசனையின்  ஆன்மீக  சக்தி இந்த எண்ணப்பதிவுகளை நேரடியாக குறைக்கிறது. ஆனால்  உறுதிமொழிகள் கர்மாவை குறைப்பதில்லை. நமது ஆளுமை குறைகள் மூலம் தான் கர்மா நம்முடன் விளையாடுகிறது. உதாரணத்திற்கு எனக்கு  உணர்ச்சி  வசப்படுதல் என்னும் எண்ணப்பதிவு உள்ளது என்று வைப்போம், அது எழும்போதெல்லாம் நான் மனம் வருந்துகிறேன். நண்பர்கள் என்னை ஏமாற்றினால் நான் காயமடைந்து சோகத்தில் இருப்பேன். இந்த சம்பவத்தில் என் நண்பனால் நான் ஏமாற்றப்பட வேண்டும் என்று விதி உள்ளது, ஆனால் இந்த விதியால் நான் பட்ட துயரம்  உணர்ச்சி  வசப்படுதல் என்னும் ஆளுமை குறை எண்ணப்பதிவினால்  தான்  ஏற்படுகிறது.  உணர்ச்சி  வசப்படுத்தலுக்காக  சுய ஆலோசனை எடுத்துக் கொண்டால் அதன்  எண்ணப்பதிவு குறைந்து அதனை  தூண்டிவிடும் நிகழ்வுகள் ஏற்பட்டாலும் மனம் தளராது என்னால் இருக்க முடியும்.

மேலும், இந்த எண்ணப்பதிவு குறைய குறைய நான் அனுபவிக்கும் துயரத்தின் காலமும் குறையும். அதாவது, எனக்கு கோபம் எனும் எண்ணப்பதிவு வலிமையாக இருந்தால், அதனால் எனக்கு ஏற்படும் துயரமும் அதிகம். கோபம் எனும் குறைபாட்டின் எண்ணப்பதிவு குறையும்போது விதியினால் ஏற்படும் துயரத்தின் காலமும் குறைந்து போகும்.

இதைத்தவிர, தவறாமல் சுய ஆலோசனை எடுத்துக் கொள்வதன் மூலம் கூடுதல் பாதகமான விதி உருவாவதை தடுத்து விடுவோம். ஆளுமை குறைகளால் நாம் மேலும் பாதகமான விதியை உருவாக்குகிறோம். உதாரணத்திற்கு மற்றவர்களை கேலி செய்தல் என்ற ஆளுமை குறை எனக்கு உள்ளது, மற்றவர்களை கேலி செய்து அவர்களை புண்படுத்துவேன், இதனால் அவர்கள் புறக்கணிக்கப் படுகிறார்கள். அதனால் எனக்கு மற்றவர்களை புண்படுத்தியதற்காக பாவம்  கிடைக்கும். சுய ஆலோசனை மூலம் மற்றவர்களை கேலி செய்யும் குறைபாடு குறையும்போது எனது நடத்தையும் மாறி மற்றவர்களை அதிகம் புரிந்துக்கொள்ள தொடங்குவேன். இதனால் மேலும் பாதகமான விதி உருவாவதை தடுத்துவிடுவேன்.

மனம் கரைந்து போனால் விதிக்கும் அப்பால் நாம் செல்கிறோம். ஏனென்றால் மனதால் தான் நாம் துயரம் அனுபவிக்கிறோம்.

ஆகையால், சுய ஆலோசனை எடுப்பதனால் ஒரு நிகழ்வின் மூலம் விதியினால் ஏற்படும் துயரங்களை குறைக்கலாம் அல்லது கடந்து செல்லலாம். உறுதிமொழி எடுப்பதனால் இது இவ்வாறு நடக்காது. நாம் அதிகம் ஸாத்வீகம் ஆவதால் நமது நடத்தை சிறப்படைந்து மேலும் பாதகமான விதி உருவாக்குவதில்லை.

6. சுய ஆலோசனை எழுத வழிகாட்டிகள்

1. எளிமை: எளிய மொழியில் வரையறுக்கப்படட  வார்த்தைகளில் சுய ஆலோசனை எழுத வேண்டும். ஒரு ஒப்புமையை பார்ப்போம்: எப்போதாவது நீங்கள் ஒரு பக்கம் முழுக்க எழுத்துகளை படித்ததுண்டா? அதை படிக்கவோ பார்க்கவோ நமக்கு தோன்றுகிறதா? பொதுவாக நமது மனம் அதை படிக்கவோ பார்க்கவோ மறுத்து விடுகிறது. ஏனென்றால் எளிமையாகவும் சுலபமாகவும் இருந்தாலே மனதிற்கு படிக்க பிடிக்கும். அதேபோல் சுய ஆலோசனை கூட எளிமையான  வரையறுக்கப்படட  வார்த்தைகளில் இருந்தால் மனதிற்கு சுலபமாக செய்தி கிடைக்கும்.

2. “எப்போதெல்லாம்” -இல் இருந்து தொடங்கும்: எதிர்காலத்தின் ஒரு குறிப்பிட்ட நிகழ்வை குறிக்க சுய ஆலோசனை என்றுமே “எப்போதெல்லாம்” -இல் இருந்து தொடங்கும். “எப்போதெல்லாம்” என்று சொன்னால் மனம் விழிப்புணர்வுடன் இருக்கும்.

உதாரணத்திற்கு, இந்த தவறை பார்ப்போம்: “சோம்பேறித்தனமாக  இருந்ததால்  வெளியே  நடக்க  செல்வதை  ஒத்தி வைத்தேன்”.

சுய ஆலோசனை எழுதும்போது இந்த சம்பவத்தை எதிர்காலத்தில் இவ்வாறு குறிப்பிட வேண்டும்: “எப்போதெல்லாம்  வெளியே  நடக்க  செல்வதை  நான் ஒத்திவைக்க நினைக்கிறேனோ….” பிறகு இதை தடுக்க என்ன செய்யப் போகிறோம் என்று எழுதலாம்.

3. நேர்மறைத்தன்மை: சுய ஆலோசனை எப்போதுமே நேர்மறையாக இருக்க வேண்டும். இல்லை, முடியாது, கூடாது, ஆகாது, மாட்டேன் போன்ற வார்த்தைகளை தவிர்க்க வேண்டும். உதாரணத்திற்கு, “நான் கோபப் படமாட்டேன்” என்று சொல்வதற்கு பதில் “நான் அமைதியாக இருப்பேன்” என்று சொல்லலாம். ஏனென்றால் மனதிற்கு  புரட்சித்தனம்  ஒன்று  உண்டு, ஒன்றைச் செய்யாதே என்று மனதிற்குச் சொன்னால் அதைத்தான் செய்ய தோன்றும். மாறாக அதே விஷயத்தை நேர்மறையாகச் சொன்னால் மனம் ஒப்புக்கொள்ளும்.

4. குறிப்பிட்ட தன்மை: சுய ஆலோசனை பொதுவானதாக இல்லாமல் குறிப்பிட்டதாக இருக்க வேண்டும். உதாரணம்: “எப்போது  மக்கள் என்னை பார்க்கும்போது நான் வெட்கப்படுகிறேனோ…” என்று சொல்வதற்கு பதில் குறிப்பிட்ட நிகழ்வை இவ்வாறு சொல்ல வேண்டும் “எப்போதெல்லாம் கமலா என்னை  பார்க்கும்  போது நான் வெட்கப் படுகிறேனோ….”. பொதுவான முறையில் “மக்கள்” என்று சொன்னால் குறிப்பிட்ட சுய ஆலோசனை போல் பயனுள்ளதாக இருக்காது. சுய ஆலோசனை பொதுவாக இருந்தால் மனம் சரியான உணர்வை கண்டறியாது, ஆனால் ‘கமலா’ என்ற பெயர் வந்தால் சாத்தியம். கமலாவின் மீது காதல் இருப்பதால் அவள் என்னை பார்க்கும்போதெல்லாம் காதல் சம்மந்தப்பட்ட உணர்ச்சி வெளிவரும். மற்றொரு உதாரணம், “எனது மூத்த மாணவர் ஸ்ரீராம் பள்ளியில் என்னை அவமதித்ததால் நான் மனம் தளர்ந்தேன்”. ‘ஸ்ரீராம்’ என்ற பெயர் வந்தவுடன் அவன் என்னுடன் அன்பாக பழகாத தருணங்கள் நினைவிற்கு வந்து மொத்த கோபம் அனைத்தும் வெளிவரும். வேறு  ஒருவரின்  பெயர் இருந்தால் இவ்வாறு  உணர  மாட்டேன்.

5. ஒரு நேரத்தில் ஒரு குறைபாடு: ஒரு நிகழ்வில் ஒன்றுக்கு மேல் ஆளுமை குறைகள் இருக்கலாம், ஆனால் நாம் ஒரு நேரத்தில்  ஒரு   குறைபாட்டிற்கு சுய ஆலோசனை அளிக்க வேண்டும். உதாரணம்: “என் சக ஊழியர் வாக்குறுதி அளித்தபடி வேலையில் எனக்கு உதவாததனால் நான் உணர்ச்சி  வசப்பட்டு வருந்தினேன்”. எதிர்பார்ப்பு, எதிர்மறை சிந்தனை, உணர்ச்சிவசம் போன்றவை இங்கு குறைபாடுகள். சுய ஆலோசனை எழுதும்போது ஒரு குறையை தேர்ந்தெடுக்கலாம். எந்த குறை நம் மீதும் மற்றவர் மீதும் மிக  வலிமையாக  செயல்படுகிறதோ  அதை தேர்ந்தெடுக்கலாம்.

6. குறைகளின் நிகழ்முறைப்படி தேர்வு செய்க: ஒரு குறைக்கு ஒன்றுக்கு மேல் சம்பவங்கள் ஏற்பட்டால், பலமுறை ஏற்படும் ஒரே ஒரு சம்பவத்தை தேர்ந்தெடுத்து சுய ஆலோசனை கொடுக்கவும். உதாரணம்: கோபத்தைக் குறைக்க முயற்சிக்கிறேன், அது பல்வேறு விதத்தில் வெளிப்படுகிறது. எனினும் பொதுவாக வெளிப்படுவது இப்படி – ‘என் மகன் படிப்பதற்கு பதிலாக டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது கோபம் அடைந்தேன்’ ஏனென்றால் இது தினமும் நடக்கிறது. அதனால் இந்த வெளிப்பாடை  தேர்ந்தெடுத்து நடைமுறைப் படுத்துவேன்.

7. சுய ஆலோசனைகளில் இருந்து தொடங்கவும்: ஆரம்பத்தில்  நாளொன்றிற்கு 3 அமர்வுகள் சுய ஆலோசனை செய்யவும்.  ஞாபகத்தில்  வைக்க முடியவில்லை  என்றால் சுய ஆலோசனையை எழுதிக்கொண்டு 5 முறை படிக்கவும். பிறகு நாளொன்றிற்கு 5 அமர்வுகள் சுய ஆலோசனை செய்யலாம். அடுத்த பாகத்தில் இதைப்பற்றி விரிவாக பேசுவோம்.

7. முடிவுரை

நம் உணர்ச்சிகளுடன் எவ்வளவு போராடியும், எத்தனை நிவாரணம் செய்தும், பணம் செலவழித்தும் தீர்வு கிடைப்பதில்லை. சுய ஆலோசனை எடுப்பது ஆன்மீக ரீதியான ஒரு தீர்வு, நமது எதிர்மறை உணர்வுகளை வேரோடு அகற்ற வல்லது. தவறாமல் 10 நிமிடங்கள் சுய ஆலோசனை எடுத்து நிம்மதி மற்றும் நீடித்த மகிழ்ச்சியை அனுபவித்துள்ளனர் பலர். சுய ஆலோசனை எடுத்து பலனடைந்தவர்களின் சாட்சியங்களை வரவிருக்கும் கட்டுரைகளில் கொடுப்போம்.  ஆளுமை  குறைகளை  களைதல்  (PDR) முறை மற்றும் சுய ஆலோசனையை பற்றி மேலும் படித்து நற்பலனை அனுபவிக்க தாங்கள் நேரம்  அளிப்பீர்கள்  என்று நம்புகிறோம்.