A1 சுய ஆலோசனை  முறை

1. A1 சுய ஆலோசனைக்கு ஒரு அறிமுகம்

நமது செயல்கள், சொற்கள், எண்ணங்கள் ஆகியவை நம்மை மட்டுமல்லாமல், நம்மோடு இணைந்திருப்பவர்களையும் பாதிக்கும் ஆற்றல் உடையவை. ஒருபுறம் அவை நம்மையும், மற்றவரையும் ஊக்குவித்து நல்ல மாற்றங்களை கொண்டு வர இயலும். மறுபுறம் நமது தவறான செயல்கள், சொற்கள் மற்றும் எண்ணங்கள் மற்றவர்களை நம்பிக்கை இழக்கச் செய்து அவர்களுக்கு தீங்கு விளைவிக்கலாம். நாம் நமது மிக சிறந்த முயற்சிகளை செய்தாலும், நமது  சிறந்த நோக்கங்கள் மற்றும் முயற்சிகளையும் மீறி, நமது வாழ்வில் எப்போதாவது தவறிழைப்பதும், நமது குறைகள் வெளிவருவதும் தவிர்க்க முடியாதது.

இந்த தவறுகள்/குறைகள் அற்பமானதாக இருக்கலாம். உதாரணத்திற்கு, நாம் ஒரு நாள் பணிக்கு செல்ல  தாமதமாக புறப்படும் போது, நமது வண்டியின் சாவியை வீட்டிலேயே வைத்து விட்டு வந்ததை, லிப்ட்டில்  பத்து மாடி கீழே இறங்கி வந்தவுடன் உணர்வோம். சில சமயம் நாம் சில கடுமையான தவறுகளையும் செய்கிறோம். உதாரணத்திற்கு, நமது தவறான மதிப்பீட்டால் ஒரு முக்கியமான வாடிக்கையாளரை இழப்பது. மொத்தத்தில் நமது ஒவ்வொரு தவறும் நமக்கு மன அழுத்தத்தையும்பிற இனிமையற்ற உணர்சிகளையும்  அளிக்கின்றன. அவற்றால் உறவுகள் கெடலாம், பண விரயம் ஆகலாம் மற்றும் நேரம், ஆற்றல் வீணாகலாம்.

இந்த இனிமையற்ற உணர்சிகளை, பலரும், பலவிதமாக எதிர்கொள்கிறோம். பல சமயங்களில், மனிதர்கள் தங்களது தவறுகளைப் பற்றி அதிகம் சிந்திக்காமல், அவற்றை விரைவாக புறந்தள்ள முயல்கிறார்கள்.  மறுபுறம் நம்மில் சிலர், இந்நிகழ்வுகளை குறித்து சிந்தித்து, நமது தவறுகளை ஆராய்ந்து, நம்மை நாமே புதுப்பித்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு , நமது திறன்களை வளர்த்து கொள்ளவும், தவறான பழக்கங்களை திருத்தி  ஒரு ஒட்டுமொத்த மேம்பாட்டை அடையவும்  விழைகிறோம் .  இதில் நாம் ஓரளவிற்கு வெற்றி கண்டாலும், ஒரு முழுமையான மாற்றத்தை அடைவதில்லை. இது ஏனென்றால், நமது தவறான செயல்களும், எண்ணங்களும், உணர்ச்சிகளும் நமது ஆழ்மனதிலிருக்கும் எண்ணப்பதிவுகளிலிருந்து முளைப்பதால், இவற்றை வெல்ல ஆன்மீக சக்தி தேவையாகின்றது.

மனநல நிபுணர்களும், சுய முன்னேற்ற பயிற்சியாளர்களும் மக்கள் தங்களை எவ்வாறு மாற்றிக் கொள்ள இயலும் என்பதை பற்றி விரிவான ஆராய்ச்சிகள் செய்து கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்கள்.  இந்த ஆய்வுகளில் அல்லது மக்கள் தங்களை எவ்வாறு மாற்றிக் கொள்ளலாம் என்பதைப் பற்றிய தகவல்களில், மிக சிலதே ஆழ்மனதிலுள்ள எண்ணப்பதிவுகளைப் பற்றி குறிப்பிடுகின்றன,  அதுவும் மேலோட்டமாகவே குறிப்பிடுகின்றன.  நமது ஆழ்மனதிலுள்ள எதிர்மறையான எண்ணப்பதிவுகளை சரி செய்யாததால், அவை நமது நடத்தையில் மோசமான பாதிப்புகைளை  ஏற்படுத்துகின்றன, இதனால் நாம் மீண்டும் மீண்டும்,  சில சிக்கலான சூழ்நிலைகளை எதிர்கொள்கிறோம்.  உதாரணத்திற்கு, கோபப்படுவது உதவி செய்யாது என்பதை புத்திபூர்வமாக நாம் உணர்ந்தாலும் கோபமடைகிறோம், பிறரை பார்த்து பொறாமை கொள்ள விருப்பம் இல்லை என்றாலும் கூட நாம் அவ்வாறு உணர்கிறோம்,  நமது மேலதிகாரிக்கு விருப்பமில்லை என்று அறிந்தும் கூட தொடர்ந்து வேலைக்கு தாமதமாகச் செல்கிறோம்.

எதிர்மறை எண்ணப்பதிவுகளை நீக்குவதற்கு தேவையான ஆன்மீக சக்தியை சுய ஆலோசனைகள் தருகின்றன. இக்கட்டுரை தொடரில் ‘சுய ஆலோசனை என்றால் என்ன?’, எனும் முந்தய கட்டுரையில் விளக்கியுள்ளபடி, சுய ஆலோசனைகள் நமது ஆழ்மன எண்ணப்பதிவுகளை சரி செய்து நமது ஆளுமையில் நீடித்த நல்ல மாற்றங்களை கொண்டு வர உதவுகின்றன.

பல விதமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள பல விதமான சுய ஆலோசனைகள் உள்ளன. இக்கட்டுரையில் A1 சுய ஆலோசனை முறையை கொண்டு எவ்வாறு நமது தவறான செயல்கள், எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளை எதிர்கொள்ளலாம் என்பதை பார்ப்போம். இந்த A1 சுய ஆலோசனை முறையை, புகை பிடித்தல், குடிப்பழக்கம், சூதாட்டம் போன்ற போதை பழக்கங்களிலிருந்து மீளவும், திக்குவாய், நகம் கடித்தல், படுக்கையில் சிறுநீர் கழித்தல் போன்ற தவறான பழக்கங்களிலிருந்தும் விடுபடவும் பயன்படுத்தலாம். இதைப்பற்றி பகுதி 7-இல் விவரிக்கப்பட்டுள்ளது.

2. A1 சுய ஆலோசனை முறையின் வரைவிலக்கணம்

A1 சுய ஆலோசனை முறை, நமது எல்லா தவறான எண்ணங்கள், உணர்ச்சிகள் மற்றும் செயல்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவற்றை திருத்தும் வழிமுறைகளை நம் மனதிற்கு வழங்கி, அவற்றை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

இதனுடைய வடிவமைப்பு :

தவறான செயல், எண்ணம் அல்லது உணர்ச்சி + விழிப்புணர்வை ஏற்படுத்துதல் + சரியான செயல் மூலம் கட்டுப்படுத்துதல்

 

கவனத்தை கோருதல் ஊழல்தன்மை யோசிக்காமல் செயல்படுவது அளவுக்கு அதிகமான பரிபூரணத்வம்
பழமைவாதத்தில் முடங்கி இருத்தல் பகல் கனவு காணுதல் தீர்மானிக்க இயலாமை கர்வம்
லட்சியத்தில் அளவுக்கு அதிகமான வெறி இருத்தல் விசுவாசமின்மை மன ஒருமைப்பாடு இல்லாமை சுயநலம்
அளவுக்கு அதிகமாக பகுத்தாய்தல் ஒழுக்கமின்மை சோம்பல் சந்தேகப்படுதல்
தற்புகழ்ச்சி பொறுமையின்மை நேரம் தவறுதல் துப்புறவின்மை

3. A1 சுய ஆலோசனையின்  கட்டமைப்பு, வடிவம் மற்றும் அதன் பயன்பாடு

A1 சுய ஆலோசனை முறையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது ஒரு உதாரணத்தின் மூலம் கீழே விளக்கப்பட்டுள்ளது :

இதில் தவறு/குறைபாடு என்பது ஒருவர் பாத்திரங்களை கழுவ சோம்பல் பட்டு அதை சமையலறை தொட்டியில் இரவு முழுவதும் விட்டதே.

  • அதனால், A1 சுய ஆலோசனையின்  வடிவமைப்பின் படி, ‘எப்பொழுதெல்லாம் நான் பாத்திரங்களை கழுவ சோம்பல் படுகிறேனோ, அப்பொழுது அதை விழிப்புடன் உணர்ந்து, நான் உடனே பாத்திரங்களை கழுவுவேன்’ என்பதே இங்கு சுய ஆலோசனையாகும்.
  • இந்த சுய ஆலோசனையை ‘எப்பொழுதெல்லாம்’ எனும் வார்த்தையில் தொடங்கி, பின்னர் தூண்டுதலாக விளங்கும் நிகழ்வின் பகுதி சேர்க்கப்படுகின்றது (இங்கு அது – ‘பாத்திரங்களை கழுவ சோம்பல் படுவது’).
  • பின்னர், இதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, ‘அப்பொழுது அதை விழிப்புடன் உணர்ந்து’ என்று கூறி அதைத் தொடர்ந்து சரியான நடவடிக்கை சேர்க்கப்படுகின்றது. (இங்கு அது – ‘நான் உடனே பாத்திரங்களை கழுவுவேன்’ என்பதே).
  • ஒருவருடைய ஆளுமை வகையை பொறுத்து நாம் தரும் சரியான கண்ணோட்டத்தில் சிறிய மாறுதல்களை செய்யலாம். உதாரணத்திற்கு, சிலருக்கு ‘உடனே’ எனும் வார்த்தையை சேர்ப்பது அக்காரியத்தை உடனடியாக செய்ய உதவியாக இருக்கும். மற்றும் சிலருக்கு அவ்வார்த்தையே பதட்டத்தை ஏற்படுத்த கூடும். அப்படி இருக்கும் பட்சத்தில், அந்த வார்த்தையை தவிர்க்கலாம்

4. A1 சுய ஆலோசனை முறையை தேர்வு செய்வது என்பதை எவ்வாறு முடிவு செய்வது

எந்த சூழ்நிலைகளில் அல்லது எவ்வித தவறுகளை திருத்த A1 முறையை  பயன்படுத்தலாம் என்பதை காண்போம்.

இந்த A1 முறையை   நம்மால்  செய்யப்படும் தவறுகளுக்கு காரணமான எல்லா செயல்கள், எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளை  திருத்த பயன்படுத்தலாம்.

தவறான செயல்கள், எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகள் என்பதின் அர்த்தம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தவறு / குறைபாடு விளக்கம்
தவறான செயல் செயலளவில் தவறு என்பது நாம் உடலால் ஒரு தவறு செய்யும்போது ஏற்படுகின்றது. உதாரணத்திற்கு, காலையில் விழித்த பின் படுக்கையை சரி செய்யாமலிருத்தல், நமக்கு பிடித்த உணவை உடன்பிறந்தவர்களோடு பகிராமல் இருத்தல் போன்றவை.
தவறான எண்ணம் வெளிப்புற சூழ்நிலையால் பாதிக்கப்படாமல் நமக்கே  எதிர்மறையான முறையற்ற எண்ணங்கள் வருவதையே தவறான எண்ணம் என்கிறோம். உதாரணத்திற்கு, ஒருவர் தன்னிச்சையாக தான் ஒரு நல்ல மாணவன் அல்ல மற்றும் தான் வாழக்கையில் வெற்றி பெற முடியாது என எந்த வித வெளிக்காரணமும் இல்லாமல் நினைப்பது தவறான எண்ணமாகும்.
தவறான உணர்ச்சி ஒரு குறிப்பிட்ட உணர்ச்சி நமது ஆளுமையில் வலுவாக இருக்கும்போது, அதனால் பல எண்ணங்கள் நம் மனதிற்குள் தோன்றுவதையே தவறான உணர்ச்சி என்கிறோம். உதாரணத்திற்கு, கவலைப்படுவது ஒருவரின் வலுவான உணர்ச்சியாக இருக்குமானால், அவர் வெளிப்புற தூண்டுதல்கள் எதுவும் இல்லாமலேயே  பல விதமான விஷயங்களைப் பற்றி கவலைப்படுவார்.

மேலே கூறப்பட்டவை தவறான எதிர்எண்ணங்களுடன் தொடர்பற்றவை என்பதை கவனிக்கவும். தவறான எதிர்எண்ணங்கள் வெளிப்புறத் தூண்டுதல்களால் ஏற்படுகின்றன. இவற்றுக்கு A1முறையை பயன்படுத்துவதில்லை. சுருக்கமாக,

  • ஒரு தவறான செயல், எண்ணம் அல்லது உணர்ச்சி என்பது, நாம் ஒரு வெளி நிகழ்விற்கு எதிர்வினை காட்டாமல் இருக்கும்போது ஏற்படுவது ஆகும். எந்த விதமான வெளிப்புற தூண்டுதலும் இல்லாமல் நாம் ஒரு தவறான செயலை செய்தால் அல்லது ஒரு தவறான எண்ணமோ, உணர்ச்சியோ நம் மனதில் தோன்றினால் இந்த A1முறையை முறையை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • மறுபுறம், ஒரு தவறான எதிர்எண்ணம் என்பது ஒரு நபர் அல்லது சூழ்நிலையின் காரணமாக தவறான ஒரு எண்ணம், செயல் அல்லது உணர்ச்சி ஏற்படுவதை குறிக்கின்றது. உதாரணத்திற்கு, நமக்கு முன்னால் ஒருவர் மிகவும் மெதுவாக வண்டியை ஓட்டி செல்லும்போது, நாம் பொறுமை இழப்பது தவறான எதிர்எண்ணமாகும். (எதிர்எண்ணம் அளவில் நடக்கும் இத்தகைய தவறுகளுக்கும், குறைபாடுகளுக்கும் A2 சுய ஆலோசனை முறையை பார்க்கவும்.)

ஆகவே ஒரு தவறுக்கு நாம் பொறுப்பாக இருக்கும்போது மற்றும்   அது ஒரு தவறான செயல், எண்ணம் அல்லது உணர்ச்சியின் காரணமாக நிகழும்போது  நாம் A1 முறையை தேர்ந்தெடுக்க வேண்டும். பின்வரும் ஓட்ட விளக்கப்படம் நாம் ஒரு தவறுக்கு எப்போது A1 சுய ஆலோசனை முறையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை காண்பிக்கின்றது.

மேலுள்ள ஓட்ட விளக்கப்படத்தை பயன்படுத்தி எவ்வாறு A1 சுய ஆலோசனையை வடிவமைக்க வேண்டும் என்பதை பின்வரும் உதாரணம் நமக்கு காட்டுகின்றது.

தவறு/குறைபாடு : ஒழுங்கற்ற செயல்பாட்டால் என்னுடைய பாஸ்போர்ட்டை வீட்டிலேயே மறந்து வைத்து விட்டு, அதை விமான நிலையம் சென்றடைந்த பின்தான் உணர்ந்தேன். இதனால் சர்வதேச விமான பயணத்தை என்னால் மேற்கொள்ள இயலவில்லை.

எந்த வகையான சுய ஆலோசனையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க நாம் கேட்க வேண்டிய முதல் கேள்வி – யாருடைய ஆளுமை குறை இந்த சூழ்நிலையில்  மன அழுத்தத்திற்கு முதன்மையான காரணம் அல்லது தவறுக்கு காரணம் யார்? இங்கே அது நானாவேன், ஏனென்றால் நானே பாஸ்போர்ட்டை  எடுக்க மறந்தேன்.

அடுத்து நம் கேள்வி, ‘இந்த தவறு, ஒரு தவறான செயலா, எண்ணமா, உணர்ச்சியா அல்லது தவறான எதிர்எண்ணமா?’ என்பதாகும்.  இங்கு  அது தவறான செயலாகும்.

எனவே இந்த ஆய்வின்படி, இந்த தவறு நான் செய்த தவறான செயலால் உண்டானதால்  A1 சுய ஆலோசனையை பயன்படுத்த வேண்டும்.

A1 சுய ஆலோசனையை கட்டமைக்க பின்பற்ற வேண்டிய வடிவமைப்பு :

தவறான செயல், எண்ணம் அல்லது உணர்ச்சி + விழிப்புணர்வை ஏற்படுத்துதல் + சரியான செயல் மூலம் கட்டுப்படுத்துதல்

சுய ஆலோசனை : எப்பொழுதெல்லாம் நான் வீட்டை விட்டு விமான நிலையத்திற்கு புறப்பட இருக்கிறேனோ, அப்பொழுது விழிப்புடன், நான் பாஸ்போர்ட்டை எடுத்துக் கொண்டுள்ளேனா என சரிபார்த்து, பாஸ்போர்ட்டை எடுத்துக் கொண்ட பிறகே வீட்டை விட்டு வெளியேறுவேன்.

5. A1 வகை சுய ஆலோசனைகளின் உதாரணங்கள்

A1 சுய ஆலோசனையின் சில உதாரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை தவறான செயல்கள், தவறான எண்ணங்கள் மற்றும் தவறான உணர்ச்சிகள்  என்று பிரிக்கப்பட்டுள்ளன.

எஸ்.எஸ்.ஆர்.எஃப் வழங்கும் A1 சுய மனோவசிய சுய ஆலோசனைகள்

நம் அன்றாட வாழ்க்கையில் A1 வகை சுய ஆலோசனைகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை மேலே உள்ள உதாரணங்கள் காட்டுகின்றன. A1 சுய ஆலோசனைகளை எடுத்துக்கொள்வது, நமது விழிப்புணர்வை அதிகரிப்பதன் மூலம் தவறான செயல்கள், எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளைத் தவிர்க்க உதவுகின்றன. குறிப்பாக, தவறான செயல்கள் குறித்த விழிப்புணர்வின் நிலைகள் அடுத்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன.

6. தவறான செயல்களைப் பற்றிய விழிப்புணர்வின் நிலைகள்

நாம் A1 சுய ஆலோசனைகளை எடுத்துக்கொள்ளும் போது, நமது விழிப்புணர்வின் நிலைகளை நாம் படிப்படியாக அதிகரிக்கிறோம்.

தவறு குறித்த ஒருவரின் விழிப்புணர்வைக் கணக்கில் எடுத்துக்கொண்டு நாம் தவறான செயல்களைப் பற்றிய விழிப்புணர்வின் பல்வேறு நிலைகளை வடிவமைக்கலாம்:

  1. தவறான செயலை செய்த பிறகு விழிப்புணர்வு ஏற்படுதல் : இந்நிலையில், நாம் தவறான செயலை செய்த பிறகே அதனை பற்றிய விழிப்புணர்வை பெறுகிறோம்
  2. தவறான செயலை செய்து கொண்டிருக்கும்போது விழிப்புணர்வு ஏற்படுதல் : இந்நிலையில், நாம் தவறான செயலை செய்து கொண்டிருக்கும்போதே அது தவறு என்று புரிந்து கொள்கிறோம்
  3. தவறை செய்வதற்கு முன் விழிப்புணர்வு ஏற்படுதல், ஆனால் செயலை நிறுத்த இயலாமல் இருத்தல் : அடுத்த நிலையில், நாம் தவறான செயலை செய்ய போகிறோம் என செய்வதற்கு முன் உணர்ந்தாலும் அதை தடுத்து நிறுத்த முடிவதில்லை
  4. தவறை செய்வதற்கு முன் விழிப்புணர்வு ஏற்பட்டு அதனை செய்யாமல் இருத்தல் : இறுதி நிலையில், நாம் தவறான செயலை செய்ய போகிறோம் என செய்வதற்கு முன் உணர்ந்து அதை செய்யாமல் நம்மை தடுத்து நிறுத்திக்கொள்கிறோம்

ஒரு தவறான செயலை பொறுத்த வரையில் நாம் எந்த நிலையில் இருந்தாலும், A1 சுய ஆலோசனைகளை எடுப்பதன் மூலம், படிப்படியாக உயர் நிலைகளுக்குச் சென்று இறுதியில் தவறு செய்வதைத் தவிர்க்கலாம். நடைமுறையில் இது எவ்வாறு நிகழும் என்பதைக் காண முந்தைய பகுதியிலிருந்து ஒரு எடுத்துக்காட்டுக்கு செல்வோம் :

தவறு / குறைபாடு : அவனுக்கு பிடித்த சாக்லேட் டோனட்டை விமல் இன்னும் உண்ணவில்லை  என தெரிந்தும் கூட,  கடைசி டோனட்டை நான் தின்றுவிட்டேன்.

  1. முதல் நிலையில், நாம் டோனட்டை சாப்பிட்ட பிறகு தவறை உணர்வோம்.
  2. இரண்டாவது நிலையில், நாம் டோனட்டை சாப்பிடும்போது  தவறை உணர்வோம்.
  3. மூன்றாவது நிலையில், நாம் கடைசி டோனட்டை சாப்பிட எடுக்கும்போது  அது தவறு என்பதை உணர்வோம், ஆனால் நம்மால் நம்மை கட்டுப்படுத்த இயலாது.
  4. இறுதி நிலையில், நாம் கடைசி டோனட்டை சாப்பிட எடுப்பதற்கு முன்பே, விமல் இன்னும் ஒன்று கூட சாப்பிடாததால் அது தவறு என்பதை உணர்ந்து, நாம் அவருக்காக டோனட்டை வைத்து விடுவோம்.

7. போதை மற்றும் பிற தீய பழக்கங்களிலிருந்து மீண்டு வர A1 சுய ஆலோசனை முறையை பயன்படுத்தல்

7.1 A1 வகை சுய ஆலோசனைகளை பயன்படுத்தி போதை பழக்கத்திலிருந்து மீளுதல்

போதை பழக்கம் மற்றும் பிற தீய பழக்கங்கள் தவறான செயல்களில் அடங்கும். இதனால்தான் அவற்றிலிருந்து மீள A1 சுய ஆலோசனை முறையைப் பயன்படுத்தலாம்.இதை எவ்வாறு செய்வது என்பது குறித்த விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நம்மில் பெரும்பாலோர் போதை பழக்கமுள்ள ஒருவரை அறிவோம். நம் குடும்பத்தவர் போதைப் பழக்கத்திலிருந்து விடுபட இயலாமல் உள்ளபோது நாம் உதவியற்று உணர்கிறோம். பெரும்பாலும், போதைப் பழக்கமுள்ளவர்கள் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். மேலும் தங்களுக்கு ஒரு பிரச்சனை இருப்பதாக ஒப்புக் கொண்டாலும், அவர்களால் அதிலிருந்து விடுபட முடியாமல், அதை கட்டுப்படுத்த இயலாமல்  உணர்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, தற்போதைய சிகிச்சை முறைகள் மோசமான வெற்றி விகிதத்தைக் கொண்டுள்ளன.  சில போதை மருந்துகளை பொறுத்த வரையில், மறுபடியும் அவற்றை உபயோகிக்கும் பழைய நிலைக்கே திரும்பும் விகிதம் 90%-திற்கும் அதிகமாக உள்ளது (Smyth, 2010). பொருத்தமான ஆன்மீக நிவாரண முறைகளை மேற்கொள்வதன் மூலமும் A1 சுய ஆலோசனைகளை  எடுத்து கொள்வதன் மூலமும், போதை பழக்கத்திற்கான சிகிச்சையின் வெற்றி விகிதம் கணிசமாக மேம்படலாம். அதனால் போதை பழக்கமுள்ள ஒருவர் அதிலிருந்து மீள முடியும்.

போதை பழக்கம் தவறான செயல்களின் கீழ் வருவதால், பிரிவு 5-இல்f கொடுக்கப்பட்டுள்ளபடி நம்முடைய விழிப்புணர்வு நிலையைப் பொறுத்து சுய ஆலோசனைகள் மாறுபடும். புகைபிடிக்கும் பழக்கத்திலிருந்து மீள, ஒவ்வொரு  விழிப்புணர்வு நிலைக்கும் நாம் எடுத்துக் கொள்ளக்கூடிய  சுய ஆலோசனைகளின்  உதாரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  1. புகைபிடித்த பிறகு விழிப்புணர்வு ஏற்படுதல் : எப்பொழுதெல்லாம் நான் சிகரெட் பிடித்தேனோ, அப்பொழுது புகைப்பதன் எதிர்மறை விளைவுகளை உணர்வேன்.
  2. புகைபிடிக்கும்போது விழிப்புணர்வு ஏற்படுதல் : எப்பொழுதெல்லாம் நான் சிகரெட் பிடிக்கிறேனோ, அப்பொழுது புகைப்பதன் எதிர்மறை விளைவுகளை உணர்ந்து புகைபிடிப்பதை நிறுத்துவேன்.
  3. புகைபிடிப்பதற்கு முன் விழிப்புணர்வு ஏற்படுதல், ஆனால் புகைப்பதை நிறுத்த இயலாமல் இருத்தல் : எப்பொழுதெல்லாம் நான் சிகரெட் பிடிக்க போகின்றேனோ, அப்பொழுது புகைப்பதன் எதிர்மறை விளைவுகளை உணர்ந்து சிகரெட்டை பக்கம் வைத்து விடுவேன்.
  4. புகைபிடிப்பதற்கு முன் விழிப்புணர்வு ஏற்பட்டு, புகைக்காமல் இருத்தல் : எப்பொழுதெல்லாம் எனக்கு சிகரெட் பிடிக்கும் ஆசை வருகிறதோ, அப்பொழுது புகைப்பதன்  எதிர்மறை விளைவுகளை உணர்ந்து நான் என் ஆசையை வெல்வேன்.

புகைப்பிடிப்பதை நிறுத்த முயற்சிக்கும் எவரும் அவர்கள் எந்த விழிப்புணர்வு நிலையில் இருக்கிறார்கள் என்பதை மதிப்பிட்டு, அதற்கு தகுந்த சுய ஆலோசனையை எடுக்கலாம். விழிப்புணர்வின் நிலை அதிகரிக்கும்போது சுய  ஆலோசனையை மாற்றலாம். குடிப்பழக்கம், போதைப்பொருள், சூதாட்டம் போன்ற பிற போதை பழக்கங்களுக்கான சுய ஆலோசனைகளையும் இதேபோல் வடிவமைக்கலாம்.

7.2 திக்குவாய் பழக்கத்திலிருந்து விடுபடுவது

நீங்கள் ஒரு நேர்காணலுக்கு செல்வதாக எண்ணிக்கொள்ளுங்கள். நீங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக அந்த நேர்காணல் நடைபெறுகிறது, மேலும் நேர்காணல் செய்பவரின் அனைத்து கேள்விகளுக்கும் நீங்கள் நன்கு பதிலளிக்கிறீர்கள். அப்போது, நேர்காணல் செய்பவர் கேட்கும் ஒரு கேள்விக்கு உங்களால் சரியான பதிலை அளிக்க முடியாது என்பதை உணர்ந்தவுடன் நீங்கள் சோர்வடைகிறீர்கள். நீங்கள் பதிலளிக்க முயற்சிக்கிறீர்கள், ஆனால் நீங்கள் அறிந்தது  போலவே, திக்கத்  தொடங்குகிறீர்கள். இந்த ஒரு சின்ன சருக்கல்  காரணமாக உங்களுக்கு வேலை கிடைக்காமல் போகலாம் என்பதை நீங்கள் உணர்ந்து நம்பிக்கை இழக்கிறீர்கள்.

தவறான பழக்கங்கள் பெரும்  சங்கடங்களுக்கு காரணமாக அமைவது மட்டுமில்லாமல் ஒருவரின் மன சக்தியை குறைத்து விடுகின்றன.  மேற்கண்ட உதாரணம் விளக்குவது போல, அவை ஒருவரின் வேலை வாய்ப்புகளில் இடையூறாக அமைவது போன்ற கடுமையான விளைவுகளையும் உண்டாக்கலாம். இத்தகைய தவறான பழக்கங்களால் பாதிக்கப்பட்ட பலர் உண்மையிலேயே அவற்றிலிருந்து விடுபட விரும்புகிறார்கள். இருப்பினும், அவர்களின்  உணர்வுபூர்வமான முயற்சியால் மட்டுமே இதை செய்வது கடினமாகும். ஏனென்றால், மக்கள் பெரும்பாலும் விழிப்புணர்வு இல்லாமலேயே  தவறான பழக்கங்களைச் செய்கிறார்கள். உதாரணமாக, ஒருவர் மன அழுத்தத்தை  எதிர்கொள்ள  நகங்களைக் கடிக்கக்கூடும். ஆனால்  கடிக்கப்பட்ட  நகங்களைப் பின்னர் பார்க்கும்போதே நகம் கடித்ததைஅவர் உணரலாம்.  நகங்களைக் கடிக்கும்போது அதை அவர் உணர்ந்தாலும், அவ்வாறு செய்வதற்கான ஆழ்மனத் தூண்டுதல் மிகவும் சக்திவாய்ந்ததாக இருப்பதால்.  அது தவறான பழக்கத்தை நிறுத்துவதற்கான எந்தவொரு வெளிமன நோக்கத்தையும் வென்று விடும். A1 சுய ஆலோசனை முறையை  பயன்படுத்தி இத்தகைய தவறான பழக்கங்களிலிருந்து நாம் திறம்பட விடுபடலாம். தவறான பழக்கங்களும் தவறான செயல்களேயாகும். எனவே பகுதி 7.1-இல் போதை பழக்கத்திலிருந்து மீள அவரவர் விழிப்புணர்வு நிலைக்கு ஏற்ப சுய ஆலோசனைகள் எவ்வாறு கட்டமைக்கப்பட்டதோ, அதை போலவே தவறான பழக்கங்களுக்கும் செய்யலாம். திக்குவாய் பழக்கத்திற்கு எடுக்கக்கூடிய சுய ஆலோசனைகளின் எடுத்துக்காட்டுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  1. வாய் திக்கிய பிறகு விழிப்புணர்வு ஏற்படுதல் : எப்பொழுதெல்லாம் நான் வேகமாகப் பேசியபின் “ட-ட-ட” என்று சொல்கிறேனோ, அப்பொழுது நான் அதை விழிப்புடன் உணர்வேன்.
  2. வாய் திக்கும்போது விழிப்புணர்வு ஏற்படுதல் : எப்பொழுதெல்லாம் நான் வேகமாகப் பேசும்போது “ட-ட-ட” என்று சொல்கிறேனோ, அப்பொழுது நான் அதை விழிப்புடன் உணர்ந்து அதை சரி செய்வேன்.  நிதானமாக மூச்சிழுத்து சரியாக பேசுவேன்.
  3. வாய் திக்கும் முன் விழிப்புணர்வு ஏற்படுதல் ஆனால் அதைத் நிறுத்த இயலாமல் இருத்தல் : எப்பொழுதெல்லாம் நான் வேகமாகப் பேசும்போது “டி-டி-டி” என்று சொல்லப் போகிறேனோ, அப்பொழுது நான் செய்ய இருக்கும் தவறை விழிப்புடன் உணர்ந்து அதை சரி செய்வேன்.

வாய் திக்கும்  விஷயத்தில், விழிப்புணர்வின் நான்காவது நிலை இல்லை. ஏனென்றால், ஒரு நபரின் மனதில் வாய் திக்கப்போகிறது எனும் எண்ணம் எழுவதில்லை. ஒருவருக்கு திக்குவாய் உண்டாகும் காரணத்தை பொறுத்து “வேகமாக பேசுவது” என்ற பதத்தை மாற்றிக் கொள்ளலாம்.  உதாரணமாக, ‘ப’ என்ற எழுத்தை போன்ற ஒரு குறிப்பிட்ட சப்தத்தை ஒருவரால் திக்காமல் சொல்ல இயலவில்லை என்றால், அதை சுய ஆலோசனையில் குறிப்பிடலாம்.

ஒரு நபர் திக்குவாய் அல்லது வேறொரு  தவறான பழக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும், மேலே குறிப்பிட்டபடி சுய ஆலோசனைகளை கட்டமைப்பதன் மூலம் அதிலிருந்து விடுபடலாம். ஒரு தவறான  பழக்கத்திற்கு  எத்தனை விழிப்புணர்வின் நிலைகள் உள்ளன என்பதை நாம் மதிப்பீடு செய்து அதற்கேற்ப சுய ஆலோசனைகளை எடுக்கலாம்.

8. முடிவுரை

நம் செயல்கள், எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளை நாம் சரிசெய்யத் தொடங்கும் போது, நமது  உறவுகள், தொடர்புகள் மற்றும் நடத்தை சிறப்பாக மாறுகிறது. அமெரிக்க கடற்படை அட்மிரல், வில்லியம் எச். மெக்ராவன் கூறியது போல், ‘நீங்கள் உலகத்தை மாற்ற விரும்பினால், உங்கள் படுக்கையை சரி செய்வதிலிருந்து   தொடங்குங்கள்.’ மாற்றத்தை உருவாக்க மனதிற்கு தேவைப்படும் நேர்மறை தூண்டுதலை அளிக்க  A1 சுய ஆலோசனை முறை  உதவுகிறது. இதனால், மனம் சுத்தப்படத் துவங்கி, நாம் நேர்மறையான  மனநிலையை அனுபவிக்கிறோம். எனவே, அதிக நேர்மறையான ஆளுமையின் நன்மைகளை நீங்கள் நேரடியாக தனிப்பட்ட முறையில் அனுபவிக்க இதைச் செயல்படுத்த நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம்.