
அட்டவணை
- 1. முன்னுரை
- 2. அஹம்பாவத்தைக் குறைக்க எளிய மன நுட்பங்கள்
- 2.1 ஆளுமை குறைகளை களைதல்
- 2.2 உங்கள் தவறுகளை ஏற்றுக்கொள்ளுங்கள்
- 2.3 பணிவை வளர்த்துக் கொள்ளுங்கள்
- 2.4 பாராட்டு(அங்கீகாரம்) தேடுவதை நிறுத்துங்கள்
- 2.5 உங்களை உங்களுக்கு முன்னால் இருப்பவர்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்
- 2.6 குழந்தைகளுடன் விளையாடுதல்
- 2.7 எதிர்வினையாற்றுவதற்கு முன் சற்று காத்திருக்கவும்
- 2.8 மென்மையாகவும் பணிவாகவும் பேசுங்கள்
- 2.9 இனிமையான முகபாவனைகளை வைத்திருங்கள்
- 2.10 ஒரு உரையாடலில் மற்றவர்களை குறுக்கிடாமல் இருப்பது
- 2.11 மற்றவர்களின் விருப்பங்களுக்கு முதன்மை தாருங்கள்
- 3. முடிவுரை
1. முன்னுரை
கடந்த வாரம் அல்லது கடந்த 24 மணிநேரத்தை நினைத்துப் பாருங்கள். விஷயங்கள் உங்கள் விருப்பப்படி நடக்காதபோது நீங்கள் கோபப்பட்டீர்களா, அங்கீகாரம் தேடினீர்களா அல்லது வருத்தப்பட்டீர்களா என்று கவனித்தீர்களா?
அதுதான் அஹம்பாவத்தின் செயல்பாடு.
“நான்” என்ற உணர்வு இயற்கையானது என்றாலும், ஒரு பெருத்த அஹம்பாவம் நம்மை மகிழ்ச்சி, நல்லிணக்கம் மற்றும் ஆன்மீக வளர்ச்சியிலிருந்து எப்போதும் விலக்கி வைக்கிறது. மனதளவில் பிரத்தியேகமான முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம், அஹம்பாவத்தின் தாக்கத்தை படிப்படியாகக் குறைத்து, நமது உள்ளே அதிக அமைதியை உணர முடியும்.
அஹம்பாவத்தை வெல்ல இன்றே நீங்கள் செயல்படுத்த கூடிய உளவியல் சார்ந்த சில நடைமுறை பயிற்சிகள் இங்கே தரப்பட்டுள்ளன
2. அஹம்பாவத்தைக் குறைக்க எளிய மன நுட்பங்கள்
2.1 ஆளுமை குறைகளை களைதல்
ஆளுமை குறைகள் என்பது கோபம், பேராசை மற்றும் பொறாமை போன்ற எதிர்மறை குணநலன்கள் ஆகும். இவை அஹம்பாவத்துடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன. நம்மிடம் குறைகள் அதிகமாக இருந்தால், நமது அஹம்பாவம் வலுவாக இருக்கும். அவற்றைக் கடக்க, இந்த குறிப்புகளைப் பின்பற்றவும்:
- மற்றவர்களின் தவறுகளில் கவனம் செலுத்துவதை நிறுத்துங்கள்.
நாம் தொடர்ந்து மற்றவர்களிடம் குறைகளைத் தேடும்போது, அவர்களுக்குள் இருக்கும் தெய்வீகத்தை காணத் தவறிவிடுகிறோம். அதற்குப் பதிலாக, அவர்களின் நற்குணங்களில் கவனம் செலுத்தி, உங்கள் முன்னேற்றத்திற்கான பகுதிகளை அடையாளம் காண உள்நோக்கி கவனத்தை செலுத்துங்கள்
- தீயசிந்தனைகளை ஆன்மீக வளர்ச்சியை நோக்கி திசைதிருப்புங்கள்
குறைகளிலிருந்து எழும் எண்ணங்கள், பொருத்தமற்ற நடத்தை அல்லது செயல்களை ஆன்மீக பயிற்சி அல்லது கடவுளை மையமாகக் கொண்ட எண்ணங்களாகவோ அல்லது செயல்களாகவோ மாற்றுங்கள்.
உதாரணமாக, ஒருவருக்கு கோபம் என்ற குறைபாடு இருப்பின் அவர் இவ்வாறு நினைக்கலாம்: “நான் கோபமாக இருக்கும்போது, கடவுளை மறந்துவிடுகிறேன். பிறகு எனக்கும் ஆன்மீகப்பயிற்சி செய்யாத ஒருவருக்கும் என்ன வித்தியாசம்? ஆன்மீகப்பயிற்சி செய்து ஆனந்தத்தை அடைய அல்லது அவரை நோக்கி முன்னேற கடவுள் எனக்குக் கொடுத்த நேரத்தை நான் ஏன் வீணாக்க வேண்டும்?
ஒருவருக்கு எளிதில் மனம் புண்படுதல் அல்லது அதிக உணர்ச்சிவசப்படுதல் போன்ற குறை இருந்தால் அவர் இவ்வாறு சிந்திக்கலாம்: “எளிதில் மனம் புண்படுவது என்பது எனது சுய விழிப்புணர்வு அதிகமாக இருப்பதைக் குறிக்கிறது. நான் இன்னும் கடவுளிடமிருந்து வெகு தொலைவில் இருக்கிறேன். காயம் அடைவதற்குப் பதிலாக, கடவுள் மேல் எனது ஆழ்ந்த தாபம் அல்லது அவரது நாமத்தை ஜபிக்கும் நேரம் இன்னும் அதிகரிக்கப்படவில்லை என்று நான் வருத்தப்பட வேண்டும்.”
- சோர்வடையவோ அல்லது பொறுமையிழக்கவோ வேண்டாம்.
குறைகள் மீண்டும் தலைதூக்கும்போது, தோற்றுவிட்டதாக நினைக்க வேண்டாம். உங்கள் அஹம்பாவத்தை செயலில் காணவும் அதிலிருந்து கற்றுக்கொள்ளவும் கிடைத்த வாய்ப்பிற்கு நன்றியுடன் இருங்கள். ஏற்றுக்கொள்ளுங்கள், விட்டுவிடுங்கள், திருத்திக் கொள்ளுங்கள், நிகழ்காலத்தில் இருங்கள்.
சுய ஆலோசனைகள் மற்றும் ஆளுமை குறைகளை களைதல் (PDR) செயல்முறையைப் பயன்படுத்துவது, ஆழ் மனதில் இருந்து எதிர்மறையான பதிவுகளை படிப்படியாக அழிக்க உதவுகிறது.
2.2 உங்கள் தவறுகளை ஏற்றுக்கொள்ளுங்கள்
மறுப்பதன் மூலம் அஹம்பாவம் வளர்கிறது. “நான் தவறு செய்தேன்” என்று சொல்லும் எளிய செயல் உடனடியாக அதன் பிடியை பலவீனப்படுத்துகிறது.
ஏற்றுக்கொள்ளும் பக்குவம் படிப்படியாக வளர்கிறது:
- ஆரம்பத்தில், யாராவது உங்கள் தவறைச் சுட்டிக்காட்டும்போது அதை நியாயப்படுத்த வேண்டும் என்ற உந்துதல் உங்களுக்கு ஏற்படும் போது, பேசாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். அதற்குப் பதிலாக உங்கள் எண்ணங்களை எழுதுங்கள். அதை எழுதுவது நடுநிலையாக இருக்கும் தன்மையை கொண்டுவர உதவுகிறது.
- நீங்கள் ஒருவரை காயப்படுத்தியிருந்தால், மன்னிப்பு கேட்பது உங்கள் அஹம்பாவத்தை மேலும் குறைக்க உதவுகிறது.
- ஒவ்வொரு தவறும் நமக்கு ஏதாவது ஒன்றைக் கற்பிக்கிறது. எனவே, அடுத்த முறை அதே தவறை மீண்டும் செய்யாமல் இருக்க நீங்கள் கற்றுக்கொண்டதை எழுதுங்கள். இது ஆழ் மனதில் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை(பாவத்தை) வளர்க்கிறது மற்றும் தவறு செய்வதோடு அடிக்கடி ஏற்படும் எதிர்மறை உணர்வுகளைக் குறைக்கிறது. கற்றல் மனப்பான்மையுடன், நேர்மறை வளரும்.
- இது ஒரு நேர்மறையான, கற்றல் சார்ந்த மனநிலையை வளர்க்கிறது, மற்றும் சுயநல சிந்தனையைக் குறைக்கிறது.
இது ஒரு நேர்மறையான, கற்கும் மனநிலையை வளர்ப்பதோடு அல்லாமல் சுயநல சிந்தனையையும் குறைக்கிறது.
2.3 பணிவை வளர்த்துக் கொள்ளுங்கள்
ஒரு பழமொழி உண்டு: “பணிவு, கற்றவர்களுக்கு அருளைத் தரும்.” நாம் எவ்வளவுதான் அறிந்திருந்தாலும், கடவுளின் எல்லையற்ற ஞானத்துடன் ஒப்பிடும்போது நமது அறிவு எப்போதும் குறைவாகவே இருக்கும். இதை நினைவில் வைத்துக் கொண்டு, எல்லோரையும், எல்லாவற்றையும் மரியாதையுடன் நடத்துவதன் மூலம், நாம் இயல்பாகவே அஹம்பாவத்தைக் குறைத்து, தெய்வீக அருளுக்கு பாத்திரமாகிறோம்.
2.4 பாராட்டு(அங்கீகாரம்) தேடுவதை நிறுத்துங்கள்
ஏதாவது நல்லது செய்த பிறகு, நாம் பெரும்பாலும் அங்கீகாரத்தை எதிர்பார்க்கிறோம். கவனத்தை உங்களிடமிருந்து விலக்க பின்வரும் வழிமுறைகளை முயற்சிக்கவும்:
- தேவைப்பட்டால் தவிர, உங்கள் சாதனைகளைப் பற்றி குறிப்பிடுவதைத் தவிர்க்கவும்.
- பாராட்டப்படும்போது, உங்களை நீங்களே மையப்படுத்திக் கொள்வதற்குப் பதிலாக, உங்கள் குழு, குரு அல்லது கடவுளின் பங்களிப்பை ஒப்புக்கொள்ளுங்கள்.
- உங்கள் திறமைகளும் அறிவும் கூட தெய்வத்தின் பரிசுகள், அது இல்லாமல் நீங்கள் எதையும் சாதிக்க முடியாது என்பதை உங்களுக்கு நீங்களே நினைவூட்டிக் கொள்ளுங்கள்.
இந்த மனநிலை பெருமையை நன்றியுணர்வாக மாற்றுகிறது.
2.5 உங்களை உங்களுக்கு முன்னால் இருப்பவர்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்
ஆரோக்கியமான ஒப்பீடு ஊக்கமளிக்கும். குறைந்த அனுபவம் அல்லது அறிவு உள்ளவர்களுடன் உங்களை ஒப்பிடுவதற்குப் பதிலாக, இவற்றில் உங்களுக்கு முன்னே இருப்பவர்களைப் பாருங்கள். இது வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் உங்கள் கவனத்தை சுய-ஈர்ப்பிலிருந்து திசை திருப்புகிறது.
2.6 குழந்தைகளுடன் விளையாடுதல்

குழந்தைகள் பெருமை மற்றும் பாசாங்கு இல்லாமல் நிகழ்காலத்தில் வாழ்கிறார்கள். அவர்களுடன் விளையாடுவது எளிமை, தூய்மை மற்றும் நிபந்தனையற்ற அன்பை நமக்கு நினைவூட்டுகிறது – இவை அனைத்தும் அஹம்பாவத்தைக் கரைக்க உதவுகின்றன.
2.7 எதிர்வினையாற்றுவதற்கு முன் சற்று காத்திருக்கவும்
பல மோதல்கள் உணர்ச்சிவசப்பட்டு எதிர்வினையாற்றுவதால் எழுகின்றன. நீங்கள் கோபம், புண்படுத்தப்பட்ட உணர்வு அல்லது எரிச்சலை உணரும்போது:
- ஒரு நிமிடம் காத்திருக்கவும். ஒரு சம்பவம் நடந்தவுடன் கோபம் மற்றும் புண்படுத்தப்பட்ட உணர்வு போன்ற எதிர்மறை உணர்ச்சிகள் வலிமையானவையாக இருக்கும்.
- ஆழமாக சுவாசிக்கவும் அல்லது நீங்கள் அமைதியாக உணரும் வரை நாமஜபம் செய்யவும். நாம் நம்மை அடக்கி வைத்துக்கொண்டு, சிறிது அமைதி அடையும் வரை நாமஜபம் செய்ய முடிந்தால், அது நம்மை நிலையாக ஆக்க உதவுகிறது.
- ஆன்மீகக் கண்ணோட்டத்தின்படி ஒரு சூழ்நிலையை பரிசீலனைச் செய்யுங்கள். உலகியல் கண்ணோட்டத்திலிருந்து ஆன்மீக கண்ணோட்டம் வேறுபடலாம், இருப்பினும் இதன் படி செயல்படுவது ஆன்மீக வளர்ச்சிக்கு (முன்னேற்றத்திற்கு) உதவி, உன்னத நிலையை அடைய வழிவகுக்கும் அல்லது ஆத்ம கொள்கை நிலை அடைய வழிவகுக்கும்.
இது சூழ்நிலைகள் மோசமடைவதைத் தடுக்கிறது; எதிர்மறையைக் குறைத்து நடு நிலையை வளர்க்கிறது.
2.8 மென்மையாகவும் பணிவாகவும் பேசுங்கள்
நாம் பேசும் தொனி நமது அஹம்பாவத்தை பிரதிபலிக்கிறது. மென்மையாகவும் மரியாதையுடனும் பேசுவது ஆணவ உணர்வைக் குறைக்க உதவுவதோடு மட்டுமல்லாமல் மற்றவர்களுடன் நல்லிணக்க உணர்வை வளர்க்கிறது.
2.9 இனிமையான முகபாவனைகளை வைத்திருங்கள்
ஒரு புன்னகை அதிசயங்களைச் செய்யும். மற்றவர்கள் சொல்வதைக் கேட்கும்போது ஒரு அன்பான மற்றும் இனிமையான முகபாவனையைப் பராமரிப்பதன் மூலம், நீங்கள் அவர்களைப் பாதுகாப்பாகவும், மதிப்புகுரியவராகவும், மதிக்கப்படுவதாகவும் உணர வைக்கிறீர்கள். இது உங்களை விட மற்றவர்கள் மீது கவனம் செலுத்த உங்களை ஆழ்மனதில் நினைவூட்டுகிறது.
2.10 ஒரு உரையாடலில் மற்றவர்களை குறுக்கிடாமல் இருப்பது
மற்றவர்கள் பேசுவதை பொறுமையாகக் கேட்பது மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள உதவுகிறது. மேலும், மற்றவர்களை குறுக்கிட்டு பேசுவது அவர்களை புறக்கணிக்கப்பட்டதாகவோ அல்லது மனச்சோர்வடைந்ததாகவோ உணர வைக்கும்.
2.11 மற்றவர்களின் விருப்பங்களுக்கு முதன்மை தாருங்கள்
அஹம்பாவம் “என் வழியே” என்பதை வலியுறுத்துகிறது. சிறிய விஷயங்களில் மற்றவர்களின் விருப்பங்களுக்கு உணர்வுபூர்வமாக முன்னுரிமை அளிப்பதன் மூலம் நீங்கள் அதைக் குறைக்கத் தொடங்கலாம்.
உதாரணமாக, எந்த உணவகத்திற்குச் செல்வது என்பது குறித்து கருத்து வேறுபாடு இருந்தால், மற்றவர்கள் விரும்பும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். காலப்போக்கில், இந்த எளிய பழக்கம் உங்கள் மகிழ்ச்சியைப் போலவே மற்றவர்களின் மகிழ்ச்சியையும் மதிக்க மனதைப் பயிற்றுவிக்கிறது.
3. முடிவுரை
அஹம்பாவத்தைக் குறைப்பது என்பது உங்கள் தனித்துவத்தை அடக்குவது பற்றியது அல்ல; அது சுயநலத்தை மீறி, உங்களை விட உயர்ந்த ஒன்றோடு இணைவதை பற்றியது. பணிவு, சுய பிரதிபலிப்பு மற்றும் பச்சாதாபத்தை கடைப்பிடிப்பதன் மூலம், நாம் இயல்பாகவே அதிக அமைதி, சிறந்த உறவுகள் மற்றும் ஆழமான ஆன்மீக வளர்ச்சியை அனுபவிக்கிறோம்.
சிறிய முயற்சிகளை தொடங்குங்கள், நிலையாக இருங்கள்; அஹம்பாவம் அதன் பிடியைத் தளர்த்தும்போது வாழ்க்கை இலகுவாக மாறுவதை நீங்கள் காண்பீர்கள்.