‘ஆன்மீக உணர்வு என்றால் என்ன?’ என்ற கட்டுரையில் நாம் ஆன்மீக உணர்வு பற்றிய விவரங்களைப் பார்த்தோம். இந்த கட்டுரையில் உணர்வுக்கும் ஆன்மீக உணர்வுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பதைப் பார்ப்போம்.
1.உணர்வுகள் என்றால் என்ன?
நாம் எல்லோரும் பலவகைப்பட்ட உணர்வுகளை நம்மிடமும் மற்றவர்களிடமும் உணர்கிறோம். உணர்வுகள் என்பவை உலக விஷயங்களுடன் சம்பந்தப்பட்டவை. அவை வெளிமன உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டது. இந்த வெளி மன உணர்வுகள் நமக்கு மகிழ்ச்சியையோ அல்லது துக்கத்தையோ கொடுக்கக்கூடியது. இவைகள் நமது அஹம்பாவத்துடன் தொடர்பு கொண்டவை. எனவே அந்த உணர்வுபூர்வமான நேரத்தில் நம்மை நமது ஐம்புலன்கள், மனம், புத்தி இவற்றுடன் அடையாளப்படுத்திக் கொள்கிறோம். இதைத் தொடர்ந்து நாம் மிகவும் உணர்ச்சி-வசப்பட்டவர்களாக இருப்பது மேலும் மேலும் நம்மை உலக விஷயங்களில் ஆழ்த்தி நமது அஹம்பாவத்தை அதிகரிக்க செய்கிறது. எனவேதான் மிகவும் உணர்ச்சிவசப்படும் சுபாவம் நம்மை இறைவனிடமிருந்து வெகு தூரத்தில் வைத்திருக்கும்.
2.ஆன்மீக உணர்வு என்றால் என்ன?
முன்னே குறிப்பிட்டதற்கு மாறாக ஆன்மீக உணர்வு என்பது இறைவனுடன் தொடர்பு கொண்டுள்ள ஒரு நிலையாகும். அந்த நிலை நமது ஆழ்மனதுடன் (சித்தம்) தொடர்பு கொண்டதாகும். ஒருவரது ஆன்மீக உணர்வு மேலெழும் நிலையில் அவரது உலக ரீதியான அடையாளம் மறைந்து போகிறது. தன்னிருப்பின் உணர்வும் குறைகிறது. எனவே ஆன்மீக உணர்வு மேலெழும்பிய நிலையில் அவரது ஜீவபோதம் மறைந்து பரபோதம் மேலெழுகிறது. ஆன்மீக உணர்வு ஆனந்த அனுபவத்தை அளிக்கிறது. ஆனந்த நிலை என்பது உச்சக்கட்ட மகிழ்ச்சியை, அதாவது இன்பம் துன்பம் ஆகியவற்றைக் கடந்த நிலையைக் குறிக்கிறது.
3.ஆன்மீக உணர்வையும் உலக உணர்வையும் எப்படி வித்தியாசப்படுத்தி அறிவது?
அதிகமாக உணர்ச்சிவசப்படும் சுபாவம் உள்ள ஒருவர் ஆன்மீக சூழ்நிலையில் உதாரணமாக, இறைவழிபாடு நடக்கும் இடத்திலோ அல்லது அந்த நபர் மிகவும் விரும்பி மதிக்கும் ஒரு குரு முன்னிலையிலோ அவருக்கு அவரது இயல்பின் காரணமாக எழும் உணர்ச்சி வேகம் ஆன்மீக உணர்வாக தவறாக கணிக்கப்படுகிறது. எனவே அது இயல்பான சுபாவத்தினால் எழும் உணர்வா அல்லது ஆன்மீக உணர்வா என்பதை நுண்ணிய ஆறாவது அறிவின் மூலமாகவே அறிய முடியும். எப்படியாயினும் கீழ்க்கண்ட முறையில் நமது புத்தியைக் கொண்டு ஓரளவு நமது உணர்வு சாதாரண உலகரீதியான உணர்வா அல்லது ஆன்மீக உணர்வா என்பதை அறிந்து கொள்ள முடியும்.
- அஹம்பாவம் குறைவாக இருத்தல் : ஆன்மீக உணர்வு நிலையில் குறிப்பிடத்தக்க அளவு அஹம்பாவம் குறைகிறது. எனவே நமக்குள் ஏற்படும் அஹம்பாவ வெளிப்பாடைக் கொண்டு நமக்கு ஏற்பட்டிருப்பது உலக ரீதியான உணர்வா அல்லது ஆன்மீக உணர்வா என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். உதாரணமாக ஆன்மீக உணர்வு நிலையில் இருக்கும்போதே அதைப்பற்றிய அஹம்பாவம் நமக்கு ஏற்படுகிறதா என்பதையும் நாம் பரிசோதித்து தெரிந்து கொள்ளலாம். எப்படியாயினும் ஆன்மீக உணர்வு நிலை நீடிக்கவில்லையானால் மீண்டும் அஹம்பாவ உணர்வு தலைதூக்க வாய்ப்புள்ளது.
- தேஹ புத்தி குறைதல் : ஆன்மீக உணர்வு மிகுந்த நிலையில் ஒருவர் எந்த அளவு இறை உணர்வில் ஒன்றி இருக்கிறாரோ அந்த அளவு தேஹ புத்தி குறைந்தவராக இருப்பார். எனவே ஒருவருக்கு ஆன்மீக உணர்வு எட்டுவித வெளிப்பாடுகளாக, கண்களிலிருந்து நீர் வடியும் நிலையிலோ அல்லது ஆனந்த நிலையிலோ வெளிப்படும்போது அவருக்கு தன் நினைவு இருப்பதில்லை. பொதுவாக கூச்ச சுபாவமும் தனித்திருக்கும் சுபாவமும் உள்ளவரும் கூட இதற்கு விதிவிலக்கல்ல. அறிமுகமில்லாத புதிய மனிதர்களிடையே இருக்கும்போது அவர்களுக்கு அவர்களது இயற்கை இயல்பை மீறி ஆன்மீக உணர்வு ஏற்பட்ட நிலையில் மற்றவற்றை அவர்கள் உணர்வது இல்லை.
உலக வங்கியில் உயர் அதிகாரியாக பணி புரியும் எஸ்.எஸ்.ஆர்.எப். ஸாதகர் ஒருவர் சாலையில் நடந்து செல்லும்போதே தனது குருவின் நினைவு ஏற்பட்ட நிலையில் ஆன்மீக உணர்வு விழிப்படைந்து கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வடிய தன் உணர்வு இன்றி நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த அளவு அவர் ஆன்மீக உணர்வில் ஆழ்ந்து இருந்தார்.
- எதிர்பார்ப்பின்றி அன்பு செலுத்தும் அனுபவம் : ஆன்மீக உணர்வு என்பது பொதுவாக நம்முள்ளேயும் பிறரிடத்தும் இறைவனைக் காணும் அனுபவமாகும். மேலும் இந்த நிலையில் நான் என்னும் அஹம்பாவ உணர்வு மிகவும் குறைந்த அளவே காணப்படும். எனவே இந்த நிலையில் ஒருவர் மற்றவரிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அன்பை செலுத்த முடிகிறது.
- குளிர்ந்த கண்ணீர் : நம்மிடம் வெளிப்பட்ட உணர்வு ஆன்மீக உணர்வாக இருந்தால் கண்களிலிருந்து வழியும் நீர் குளிர்ச்சியானதாக இருக்கும். மாறாக உலக ரீதியான உணர்வில் வெளிப்பட்ட கண்ணீராக இருந்தால் அது வெதுவெதுப்பாக இருக்கும்.
- அழுகையின் வகை : துக்கத்தில் வெளிப்படும் அழுகை தேம்பி அழும் நிலையில் வெளிப்படும். மாறாக ஆன்மீக உணர்வு மிகுந்த நிலையில் உண்டாகும் அழுகை மௌனத்துடன் கூடியதாக இருக்கும்.
- அந்த நிலைக்குப் பின் ஏற்படும் உணர்வு : ஆன்மீக உணர்வு மிகுந்த நிலை என்பது இறைவனுடன் ஒன்றியிருக்கும் நிலையாகும். அந்த நிலையிலிருந்து மீண்ட பிறகும் அந்த நபர் பரபோதம் மிகுந்த நிலையிலேயே காணப்படுவார். இந்நிலையை, பரந்த மனப்பான்மை, உறுதியான தன்மை, அதிக ஆன்மீக முதிர்ச்சி, ஆன்மீக பயிற்சி மற்றும் இறைவனை அடைதல் பற்றிய மேம்பட்ட அறிவுபூர்வ நிலைப்பாடு, ஆகிய தன்மைகளிலிருந்து நாம் அனுபவபூர்வமாக இதை உணரலாம்.