
அட்டவணை
- 1. அறிமுகம்
- 2. அஹம்பாவத்தின் பதினொரு(11) பொதுவான வெளிப்பாடுகள்
- 2.1 தற்பெருமை
- 2.2 தன்னிடம், பிறரிடம் மற்றும் சூழ்நிலைகள் மூலம் எதிர்பார்ப்புகள்
- 2.3 “எனக்குத் தெரியும்” என்ற அஹம்பாவம்
- 2.4 கர்த்ருத்வம்
- 2.5 கற்பிக்கும் மனப்பான்மை
- 2.6 அதிகாரமாகப் பேசுதல்
- 2.7 சுய பிம்பத்தைப் பாதுகாத்தல்
- 2.8 கவனத்தை ஈர்த்தல்
- 2.9 உடலுக்கு அதிக முக்கியத்துவம் தருதல்
- 2.10 உயர்ந்தவராகவோ அல்லது தாழ்ந்தவராகவோ உணருதல்
- 2.11 “நான் ஒரு ஆன்மீகவாதி”
- 3. அஹம்பாவத்தை குறைக்க உதவும் ஆன்மீக உபாயங்கள்
- 4. முடிவுரை
1. அறிமுகம்
எந்த ஒரு ஆன்மீகப் பாதையைப் பின்பற்றும் ஸாதகருக்கும், அஹம்பாவம் என்பது மிக முக்கியமான தடைகல்லாகும். பெரும்பாலும் இது நாம் அறியாமலேயே நம் எண்ணங்கள், உணர்ச்சிகள் மற்றும் செயல்களை சூட்சுமநிலையில் பாதிக்கின்றது. இது தான் நமக்கு ஏற்படும் வலி மற்றும் துன்பத்திற்கான முதன்மைக் காரணம். அஹம்பாவம் முதலில் நம்மை உடலாலும், மனதாலும், அறிவாலும் அடையாளம் காண வழிவகுத்து, நாம் தனிப்பட்டவர் என்ற தவறான உணர்வை கொடுத்து கடவுள் மற்றும் தெய்வீகத்திடமிருந்து நம்மைப் பிரிக்கிறது. இது பல சூட்சும வழிகளில் வெளிப்படும். அவற்றை உணர்ந்து, அதைக் கடக்க ஆன்மீக பயிற்சிகளை விழிப்புணர்வுடன் செய்தால்தான், நம்மால் அதிக அளவு மன அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஆன்மீக வளர்ச்சியை அடைய முடியும்.
இந்தக் கட்டுரையில், அஹம்பாவத்தின் பதினொரு (11) பொதுவான வெளிப்பாடுகளை பற்றி ஆராய்ந்து, மஹான்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் அவற்றைக் கடப்பதற்கான நடைமுறை வழிமுறைகளை வழங்குகிறோம்.
2. அஹம்பாவத்தின் பதினொரு(11) பொதுவான வெளிப்பாடுகள்
2.1 தற்பெருமை
“நான் நன்றாகச் செய்தேன்.” “நான் புத்திசாலி.”
நம்மை நாம், நமது திறமைகள், சாதனைகள் அல்லது உடைமைகளுடன் அடையாளம் காணும்போது பெருமை எழுகிறது. அது “நான்” என்ற உணர்வை உருவாக்கி, கடவுளிடமிருந்து நம்மைப் பிரிக்கிறது.
தற்பெருமையை எவ்வாறு சமாளிப்பது :

- பரந்து விரிந்த இந்த பிரபஞ்சத்தில் நமது இடம் மிக சிறிது என்று உணருங்கள்.
- காலத்தை பற்றி சிந்தியுங்கள் : நித்தியத்தின் விரிவாக்கத்தோடு ஒப்பிடுகையில் நமது வாழ்நாள் மிக அற்பமானது.
- நமது உடல், அறிவு மற்றும் திறமை கடவுள் கொடுத்த வரம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நன்றியுணர்வை வெளிப்படுத்துவது தற்பெருமையைக் கரைக்க உதவுகிறது.
2.2 தன்னிடம், பிறரிடம் மற்றும் சூழ்நிலைகள் மூலம் எதிர்பார்ப்புகள்

“மற்றவர்கள் என் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு என்னை தகுந்த முறையில் நடத்த வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்“
எதிர்பார்ப்புகள் பெரும்பாலும் காயப்படுவதற்கும், ஏமாற்றமடைவதற்கும், விரக்தியடைவதற்கும், மோதலுக்கும் வழிவகுக்கும். மேலும், ஒரு குறிப்பிட்ட முடிவை எதிர்பார்க்கும்போது, அது அஹம்பாவத்தை அதிகரிக்கும்.
எதிர்பார்ப்புகளை எவ்வாறு சமாளிப்பது :
- எல்லாம் கடவுளின் விருப்பப்படி நடக்கிறது, நமது விருப்பப்படி அல்ல, என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நமக்கு எது சிறந்ததோ அதை கடவுள் கொடுத்துள்ளார் என்று எண்ணி விளைவுகளை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்
- மற்றவர்களை, உங்களை மற்றும் சூழ்நிலைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். மற்றவர்களையும் சூழ்நிலைகளையும் புரிந்துகொள்வது எதிர்பார்ப்புகளுக்கும் ஏற்றுக்கொள்வதற்கும் இடையிலான பாலமாக செயல்படுகிறது.
- உதாரணமாக, ஒருவர் உங்கள் பிறந்தநாளை மறந்துவிட்டால், அதை ஏமாற்றமாக உணராமல் அவர்களின் மனதில் வேறு பல கவலைகள் இருக்கலாம் என்று எண்ணிப்பாருங்கள். இந்தப் புரிதலில் இருந்து சூழ்நிலையை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் ஏற்பட்டு மன அமைதி கிடைக்கும்.
- நமது விதி பயனே நமது முயற்சிகள் மற்றும் உறவுகளிள் விளைவுகளை ஏற்படுத்துவதற்கான மூல காரணம் என புரிந்து கொள்வது எதிர்பார்ப்புகளைக் குறைக்க உதவுகிறது.
2.3 “எனக்குத் தெரியும்” என்ற அஹம்பாவம்

ஒரே கருத்துகளை பல முறை சொல்வது, பல எடுத்துக்காட்டுகளைக் கொடுப்பது, தனது கருத்தை நியாயப்படுத்தி அது தான் சரியானது என்று வலியுறுத்துவது.
நமது அறிவு அல்லது புத்திகூர்மையை மற்றவர்களிடம் நிரூபிக்க முயற்சிக்கும்போது இந்த அஹம்பாவம் வெளிப்படுகிறது.
“எனக்குத் தெரியும்” என்ற அஹம்பாவத்தை எவ்வாறு சமாளிப்பது :
- அடுத்த சில நிமிடங்களில் என்ன நடக்கும் என்பது கூட நமக்குத் தெரியாது என்பதை ஒப்புக் கொள்ளுங்கள். கடவுள் மட்டுமே அனைத்தையும் அறிந்தவர் ஆவார்.
- பிறரின் கருத்துக்களை கவனமுடன் கேளுங்கள். அவர்கள் மூலம் கூட கடவுள் நமக்குக் கற்பிக்கலாம்.
- குறைவாகப் பேசுங்கள், உங்கள் கருத்தை ஒரு முறை கூறி, மற்றவர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர அனுமதியுங்கள்
- ‘என் வழி’ என்பது மட்டுமே ஒரே வழி அல்ல, சில நேரங்களில் மற்றவர்களும் சிறந்த யோசனைகளை வழங்கலாம் என்றுணர்ந்து அவற்றைக் கேட்க திறந்த மனதுடன் இருங்கள்.
2.4 கர்த்ருத்வம்
“நானே இதை செய்து முடித்தேன்.” “இது எனது திட்டம், என்னுடைய வெற்றி.”
நாம் பெரும்பாலும் நாமே இதை செய்தோம் என்று நினைக்கிறோம். ஆனால் உண்மையில், அனைத்தும் கடவுளின் விருப்பத்தினாலேயே (ஆசியினாலேயே) நடக்கிறது.
தானே கர்த்தா என்ற உணர்வை எவ்வாறு சமாளிப்பது :

- நமது வாழ்க்கை, திறமை, அறிவு, ஆற்றல் மற்றும் வாய்ப்புகள் அனைத்தும் கடவுளின் அருளால் கிடைக்கப்பெற்றது என்பதை உணருங்கள்.
- நமது சாதனைகள் அனைத்திற்கும் நாமே காரணம் என்று கருதாமல் மற்றவர்களின் பங்களிப்பும் உள்ளது என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்.
- கடவுள் நம்மை அவரின் கருவியாக செயல்படுத்தியதற்கு நன்றி செலுத்துங்கள்.
2.5 கற்பிக்கும் மனப்பான்மை

எப்போதும் மற்றவர்களைத் திருத்தும் அல்லது அறிவுறுத்தும் (வழிகாட்டும்) முறையில் நடந்து கொள்வது.
பிறருக்கு அறிவைப் பகிர்வது நன்மை பயக்கும் என்றாலும், எப்பொழுதும் ஒரு வித ஆசிரியர் மனோபாவத்துடன் நடந்துகொள்வது அஹம்பாவத்தின் வெளிப்பாடாகும்.
கற்பிக்கும் மனப்பான்மையை எவ்வாறு சமாளிப்பது :
- மற்றவர்கள் பேசும்போது அதற்குரிய பதில்களைத் திட்டமிடுவதற்குப் பதிலாக கவனமாகக் கேளுங்கள்.
- நம்மிடம் இல்லாத நற்குணங்களை கொண்ட மக்களுக்கு மத்தியில் கடவுள் நம்மை படைத்திருப்பது அவர்களிடமிருந்து கற்றுக் கொள்வதற்கே என்பதை உணருங்கள்.
- ஒவ்வொரு கலந்துரையாடலையும்/தொடர்பையும் ஆன்மீக ரீதியில் வளருவதற்கான ஒரு வாய்ப்பாகக் கருதுங்கள்.
- மற்றவர்களின் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பது, கற்றுக்கொள்ளும் மனப்பான்மையை வளர்க்க உதவும்.
2.6 அதிகாரமாகப் பேசுதல்

அதிகார தோரணையில் பேசுதல் அல்லது மற்றவர்கள் மீது கருத்துக்களைத் திணித்தல்.
அதிகாரமாக பேசுவது பெரும்பாலும் மற்றவர்களை காயப்படுத்துகிறது, நிராகரிக்கிறது அல்லது வெறுப்பூட்டுகிறது.
அதிகார தோரணையில் பேசும் அஹம்பாவத்தை எவ்வாறு களைவது :
- தெய்வீகம் எல்லோரிடமும் உள்ளது என்பதை உணர்ந்து, மற்றவர்களைக் கட்டுப்படுத்த நமக்கு உரிமை இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
- பெற்றோர்களாக, கண்காணிப்பாளர்களாக அல்லது தலைவராக இருக்கும் பட்சத்தில் நமது கடமையானது ஆதிக்கம் செலுத்தாமல், பணிவு மற்றும் அக்கறையுடன் வழிநடத்துவதேயாகும்
- அமைதியாகவும் மரியாதையுடனும் பேசுவது நல்ல விளைவுகளையும், நீண்ட நாள் பலன்களையம் கொடுக்கும்.
2.7 சுய பிம்பத்தைப் பாதுகாத்தல்

மற்றவர்களைக் கவர நல்லவர்களாக நடிப்பது அல்லது நமது குறைபாடுகளை மறைக்க முயற்சிப்பது
மற்றவர்கள் நம்மை எப்படி பார்க்கிறார்கள் என்பதில் மிகுந்த கவனம் செலுத்துவோமேயானால், நாம் நமது நம்பகத்தன்மையை இழந்து செயற்கையான முறையில் செயல்படுவோம்.
சுய பிம்பத்தை பாதுகாக்கும் அஹம்பாவத்தை எவ்வாறு சமாளிப்பது/ களைவது :
- மற்றவர்களைப் பற்றி சிந்திப்பதை விட கடவுள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார் என்பதைப் பற்றி சிந்தியுங்கள்.
- ஆன்மீக வளர்ச்சியில் கவனம் செலுத்தினால், அது அக அழகையும் பிரகாசத்தையும் அதிகரிக்கும்.
- புற தோற்றத்திற்காக வாழாமல் கொள்கைகளின் படி வாழுங்கள்.
2.8 கவனத்தை ஈர்த்தல்

சத்தமாகச் சிரித்தல், கை அசைவுகளைப் பயன்படுத்துதல் அல்லது தனித்து தெரிவதற்காக அதிகமாகப் பேசுதல். நான் மற்றவர்களால் கவனிக்கப்பட விரும்புகிறேன். நானே நிகழ்ச்சியின் உயிரோட்டமாக (முக்கியமானவனாக) காணப்பட விரும்புகிறேன்.
கவனத்தை ஈர்ப்பது என்பது மற்றவர்களிடமிருந்து அங்கீகாரம் பெறவேண்டும் என்ற விருப்பத்திலிருந்து உருவாகிறது
கவனத்தை ஈர்க்கும் அஹம்பாவத்தை எவ்வாறு சமாளிப்பது/ களைவது :
- வெளிப்புற அங்கீகாரத்திற்குப் பதிலாக ஆன்மீக பயிற்சி மூலம் கடவுளின் அருளை நாடுங்கள்.
- மற்றவர்களுக்கும் அவர்களின் கண்ணோட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்.
- கண நேர (நிலையற்ற) அங்கீகாரத்தை விட பணிவு மற்றும் சேவையின் ஆழமான ஆனந்தத்தை அனுபவிக்கவும்.
2.9 உடலுக்கு அதிக முக்கியத்துவம் தருதல்

தனது தோற்றம், ஆரோக்கியம் அல்லது வெளிப்பாடு குறித்து அதிக விழிப்புடன் இருப்பது
உடலில் அதிகப்படியான கவனம் செலுத்துவது மன அழுத்தம், ஒப்பீடு மற்றும் திருப்தியற்ற நிலையை உருவாக்கும்.
உடலுக்கு அதிக முக்கியத்துவம் தருவதை எவ்வாறு சமாளிப்பது/ களைவது எப்படி :
- ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் இருப்பது நல்லது. ஆனால் உண்மையான ஆனந்தம் என்பது உடலை கவனித்து கொள்வதால் மட்டும் அல்ல ஆன்மாவை வளர்ப்பதன் மூலமாகவே வருகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
- புரிதல், இரக்கம் மற்றும் அமைதி மூலமாக அக அழகை வளர்த்துக் கொள்ளுங்கள்.
- அதிகப்படியான ஒப்பனையைத் தவிர்க்கவும். தனது தோற்றதை அல்லது மற்றவர்களின் தோற்றத்தை பற்றி விமர்சிப்பதைத் தவிர்க்கவும்
2.10 உயர்ந்தவராகவோ அல்லது தாழ்ந்தவராகவோ உணருதல்

நம்மை பிறருடன் ஒப்பிட்டு, உயர்வாகவோ அல்லது தாழ்வாகவோ உணர்தல்.
உயர்வு மற்றும் தாழ்வு மனப்பான்மை இரண்டும் அஹம்பாவத்தின் வடிவங்கள். அவை நம்மை மற்றவர்களிடமிருந்து பிரிக்கின்றன.
ஒப்பிடும் மனப்பான்மையை எவ்வாறு சமாளிப்பது :
- ஒவ்வொருவரும் தன்னுடைய தனித்துவமான ஆன்மீக பயணத்தில் உள்ளனர் என்பதை உணருங்கள்.
- உங்களிடம் இருப்பதற்கு நன்றியுணர்வோடும், இல்லாததற்கு பணிவோடும் இருங்கள்.
- அனைவரிடமும் உள்ள தெய்வீகத்தை உணர்ந்து, சமத்துவத்தையும் மரியாதையையும் வளர்க்கவும்.
2.11 “நான் ஒரு ஆன்மீகவாதி”
நாம் ஆன்மீக ரீதியாக மேம்பட்டவர்கள்.எனவே உயர்ந்தவர்கள் என்று நம்புதல். மேலும் தொடர்ந்து தனது ஆன்மீக அனுபவங்கள் அல்லது முயற்சிகளைப் பற்றியே பேசுதல்.
ஆன்மீக தற்பெருமை சூட்சுமமானது மற்றும் ஆபத்தானது, ஏனெனில் அது ஆன்மீக முன்னேற்றத்தைத் தடுக்கும்.
ஆன்மீக தற்பெருமையை (அஹம்பாவத்தை) எவ்வாறு சமாளிப்பது :

- உண்மையான ஆன்மீகம் என்பது சாதனைகள் அல்லது அங்கீகாரத்தில் அல்ல, சரணடைதல் மற்றும் பணிவு ஆகியவற்றில் தான் உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
- ஆன்மீக முன்னேற்றத்திற்கு தனிப்பட்ட முயற்சியை விட கடவுளின் அருளே காரணம் என்றுணர்ந்து சரணடையுங்கள்.
- அங்கீகாரத்தை எதிர்பார்க்காமல் ஆன்மீகப் பயிற்சியை நேர்மையாக தொடர்ந்து செய்யுங்கள்
3. அஹம்பாவத்தை குறைக்க உதவும் ஆன்மீக உபாயங்கள்
எஸ்.எஸ்.ஆர்.எஃப் இல், அஹம்பாவத்தை களைய பல நடைமுறை உபாயங்களை நாங்கள் பரிந்துரைக்கிறோம் :
- கடவுளின் நாமத்தை உச்சரித்தல் : அகத்தில் சிந்தனையை செலுத்தி உடல் மற்றும் மனதை பற்றிய நினைவில்லா நிலையை அடைதல்.
- ஆளுமை குறைபாடு நீக்கும் (PDR) செயல்முறை : அஹம்பாவம் சார்ந்த நிகழ்வுகளை கண்டறிந்து அவற்றைக் களைய சுய ஆலோசனைகளை வழங்குதல். இதில் உள்முக சிந்தனை மற்றும் குறிப்பெடுத்தல் அடங்கும். அதாவது எண்ணங்களையும் செயல்களையும் கவனித்து, அதன் மூலம் நமது அன்றாட வாழ்க்கையில் அஹம்பாவம் எவ்வாறு வெளிப்படுகிறது என்பதைக் கவனித்து குறிப்பெடுத்தல் .
- ஸத்சேவா (கடவுளுக்கு சேவை செய்தல்) : தன்னலமின்றி மற்றவர்களுக்கு சேவை செய்வது பணிவை வளர்க்கிறது.
- உள் முக சிந்தனை மற்றும் குறிப்பெடுத்தல் : எண்ணங்களையும் செயல்களையும் கவனித்து சூட்சும அஹம்பாவத்தின் வகையை கண்டறிதல்.
- பிரார்த்தனை மற்றும் சரணடைதல் : கடவுளிடம் வழிகாட்டுதலை வேண்டும் பொழுது நாம் அவருடைய சித்தத்தின் கருவியாகிறோம். இது நாம் பெற்ற அனைத்திற்கும் நன்றியுணர்வுடன் இருக்க வைக்கிறது.
4. முடிவுரை
அஹம்பாவம் பல சூட்சும வடிவங்களில் வெளிப்படுகிறது, ஆனால் விழிப்புணர்வு, பணிவு மற்றும் உண்மையான ஆன்மீக பயிற்சி மூலம், அதை படிப்படியாகக் குறைக்க முடியும். அஹம்பாவம் கரைந்து போகும்போது, நாம் ஆழ்ந்த உள்ளார்ந்த அமைதியையும், உறவுகளில் அதிக நல்லிணக்கத்தையும், கடவுளுடன் நெருக்கமான தொடர்பையும் அனுபவிக்கிறோம்.
பிரார்த்தனை :
“ஓ கடவுளே, அருள்கூர்ந்து எனது அஹம்பாவத்தை உணர்த்தி, என்னை உங்களிடம் சரணடைய உதவுங்கள். என் எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்கள், பணிவு மற்றும் உமது அருளை பிரதிபலிக்கட்டும்.”