கர்மயோகம்

1. கர்ம யோகத்தின் அறிமுகம்

கர்மயோகம் என்றாலே நம் கண் முன் சமுதாயத் தொண்டர்களும் தன்னார்வத் தொண்டர்களும்தான் தோன்றுவார்கள். ஆனால் இவர்களது தொண்டு, உணர்ச்சி வேகத்தாலோ அல்லது புகழ், விளம்பரம் போன்றவற்றிற்காகவோ செய்யப்படுகிறதே தவிர இவர்களது செயல் உண்மையில் கர்மயோகத்தின் கீழ் வராது.

சில மனிதர்கள் தங்கள் அன்றாட அலுவல்களை செய்வதும் தங்களின் வேலைகளை உண்மையாகவும் நேர்மையாகவும் செய்வதுமே கர்மயோகம் என்று எண்ணுகின்றனர். ஆனால் அது உண்மை அல்ல. ஏனெனில் அது அவர்களது ஆன்மீக வளர்ச்சிக்கு உதவுவதில்லை.

எனவே உண்மையில் கர்மயோகம் என்றால் என்ன?

2. சில அடிப்படைத் தத்துவங்கள்

கர்மயோகத்தைப் பற்றிய விரிவான விளக்கங்களுக்கு போகும் முன் அதைப் பற்றிய சில அடிப்படைத் தத்துவங்களைத்  தெரிந்து கொள்வோம்.

2.1 கர்மயோகத்தின் விதிமுறைகள்

ஆன்மீக சாஸ்திரப்படி ஒவ்வொரு செயலுக்கும் அதன் பிரதிபலனாக ஒரு விளைவு உண்டு. நல்ல செயலா அல்லது தீய செயலா என்பதைப் பொருத்து அதன் விளைவு புண்ணிய அல்லது பாவ பலனாக நமக்கு கிடைக்கின்றன. அத்துடன் யார் இந்த செயலுடன் சம்பந்தப்பட்டவரோ அவருடன் கொடுக்கல்-வாங்கல் கணக்கும் ஏற்படுகிறது.

 • நாம் செய்யும் நல்ல அல்லது தீய செயல்களின் தீவிரத்திற்கு ஏற்ப நமக்கு மகிழ்ச்சியும் துக்கமும் ஏற்படும்.
 • செயல்களின் விளைவுகளிலிருந்து யாரும் தப்ப முடியாது.
 • நமது செயல்களின் விளைவுகளை நல்லதோ கெடுதலோ அதை இந்தப் பிறவியிலேயே அனுபவிக்காவிட்டால் (அநேகருக்கு இது போன்று நடக்கின்றது) அந்த நல்லது பொல்லாததுகளை அனுபவிக்க நாம் இன்னொரு பிறவி எடுக்க நேரிடுகிறது. அது போன்ற சமயங்களில் நமக்கு யார் யாரிடம் கொடுக்கல்-வாங்கல் கணக்கு இருக்கிறதோ அவர்கள் பூமியில் பிறந்துள்ள சமயத்தில், அந்த கணக்கை தீர்க்க நாமும் பூமியில் பிறக்க நேர்கிறது. அதோடு பூலோகத்தில் அதற்குத் தகுந்த சூழ்நிலை ஏற்படும்வரை நாம் காத்திருக்க நேர்கிறது. உதாரணமாக நமது கர்மவினையின் பயனாக நாம் அதிகமான துன்பங்களை அனுபவிக்க வேண்டி இருந்தால் அதற்கு தகுந்த துன்பமான சூழ்நிலை பூமியில் ஏற்படும்வரை நாம் பிறவி எடுக்க காத்திருக்க வேண்டி வரும்.

தர்மம் என்பது 3 பணிகளை சாதிக்கின்றது:


1. சமூக அமைப்பை சிறந்த நிலையில் வைத்திருத்தல்
2. ஒவ்வொரு உயிரின் உலக முன்னேற்றத்தை ஏற்படுத்துதல்
3. ஆன்மீக ரீதியிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்துதல்.


- ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார்

 • தனது செயல்களின் விளைவான கஷ்டங்களை அனுபவிக்க ஒருவர் விரும்பாமல் போனால் அது புரிந்து கொள்ளத் தக்கதே. ஆனால் ஒருவர் தனது நல்ல செயல்களையும் நல்ல விளைவுகளையும் அனுபவிக்க விரும்பவில்லை என்றால் அது எப்படி? பலவிதமான காரணங்களில் ஒன்று – அதாவது இந்த பிறவியிலோ அல்லது வரும் பிறவிகளிலோ நமது நல்ல செயல்களின் நல்ல விளைவுகளை அனுபவிக்க பிறக்கும்போது நாம் மறுபடியும் சில செயல்களை செய்வோம். அதற்கான புதிய புண்ய அல்லது பாவ கணக்கு ஏற்படுகிறது. முடிவில்லாத பிறப்பு-இறப்பு சக்கர சுழற்சியில் சிக்க நேரிடுகிறது. தர்மம் நலிந்த இந்த சூழ்நிலையில் ஏற்கனவே பாவச் சுமையோடு பிறக்கும் நாம் மேலும் வாழ்க்கை ஓட்டத்தில் புதிய பாவச் சுமைகளை சேர்த்துக் கொள்ளும் வாய்ப்பு அதிகம். எனவே சராசரி ஆன்மீக நிலை உள்ள ஒரு மனிதன் மகிழ்ச்சியை விட துன்பங்களையே அதிகம் அனுபவிகின்றான். எனவே மனிதன் துக்கத்தின் சுழலில் சிக்கி அதன் பிடியில் இருப்பதால் மகிழ்ச்சியை விட துன்பங்களையே அதிகம் அனுபவிகின்றான்.

2.2 க்ரியா அல்லது க்ருதி

பாவ-புண்ணிய கணக்கில் சேராத நமது சில செயல்கள் க்ரியா எனப்படுகின்றன. குறிப்பிட்ட நோக்கம் எதுவும் இல்லாமல் தன்னிச்சையாக செய்யப்படும் செயல்களான  கண் கொட்டுவது, சிமிட்டுவது, தும்முவது, கொட்டாவி விடுதல் போன்றவை க்ரியா எனப்படும்.

2.3 கர்மா

ஒரு நோக்கத்துடன் செய்யப்படும் செயல்கள் கர்மா எனப்படுகின்றன. ஆனால் செயல் என்பது நமது பௌதிக செயல்பாடுகளான நடப்பது, பேசுவது, சிரிப்பது போன்றவற்றோடு நிற்பதல்ல. கர்மா என்னும் சொல்லில் நமது ஞானேந்த்ரியங்கள் ஐந்து, கர்மேந்த்ரியங்கள் ஐந்து, மனம், புத்தி இவற்றால் செய்யப்படும் செயல்களும் அடங்கியுள்ளன. ஆனால் ஆன்மீக கண்ணோட்டத்தில் எந்த செயலால் நமக்கு பாவ புண்ணியம் சேருமோ அந்த செயலே கர்மா எனப்படும். ஆனால் நோக்கத்துடன் செய்யாமல் சாலையில் நடக்கும்போது தற்செயலாக நாம் ஒருவர் மீது இடிக்க நேர்ந்து அதனால் அந்த மனிதர் சிறிதளவே பாதிக்கப்பட்டாலும் அதனால் நமக்கு சிறிது பாவம் நேரும். ஆனால் பாவத்தில் 80% அளவு நாம் செய்யும் செயலின் நோக்கத்தை சார்ந்தது.
(நாம் இங்கு உபயோகிக்கும் கர்மா என்ற சொல் விதி அல்லது கர்மவினையை இங்கு குறிக்கவில்லை.)

2.4 அகர்ம-கர்மா

 • ஒருவரின் ஆன்மீக வளர்ச்சியின் உச்ச கட்ட நிலையே கர்மயோகத்தின் அகர்ம-கர்மா நிலையாகும்.
 • 80% ஆன்மீக நிலையை அடைந்த ஒருவராலேயே இது சாத்தியமாகும். ஆனால் 80% ஆன்மீக நிலையில் அகர்ம-கர்மா நிலை துவங்கி அவர் 100% ஆன்மீக நிலையை அடையும் போது பூரணத்துவம் அடைகிறது.
 • இந்த நிலையில் விருப்பத்துடன் ஒருவருக்கு செய்யும் உதவியும் ‘க்ரியா’வாகிறது.
 • இவ்வாறு ஆன்மீகத்தில் உன்னத நிலையிலுள்ள, இறைவனுடன் பூரணமாக தொடர்பில் உள்ள ஒருவரின் அகர்ம-கர்மா செயல்பாடுகளின் உதாரணங்கள். இறைவனுடன் ஒன்றி இருக்கும் அந்த நிலையில் அவர்கள் உடலைப் பற்றிய உணர்விழந்த நிலையில் அதாவது சமாதி நிலையில் (உடல், மனம், ஸ்தூல, சூட்சும ஆகிய எல்லா நிலைகளையும் கடந்து) அவர்களது செயலின் பயன் அவர்களை சென்று அடையாது. மேலும் ஆன்மீகத்தில் மிக உன்னத நிலையடைந்த அவர்கள் இறைவனுடன் இரண்டறக் கலந்த நிலையில் அவர்களால் செய்யப்படும் செயல்கள் கடவுளின் விருப்பத்தினால் செய்யப்படுவதாகவே கருதப்படுகிறது. இந்த முறையில் அவர்களின் எல்லா செயல்களும், செயலற்றதாகி விடுகிறது.
 • இந்த உயர்ந்த நிலையை அடைவதன் முக்கியத்துவம் என்னவெனில் அந்நிலை அடைந்த பிறகு அவர்கள், செயலின் பயன் என்ற கர்ம தளையிலிருந்து விடுபட்டு விடுகிறார்கள்.
 • எனவே ஆன்மீகத்தில் இந்த உன்னத நிலை அடைந்தவர்கள் ஐம்புலன்கள், மனம், புத்தி இவற்றைக் கடந்து விடுவதால் இவற்றோடு தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. அவர்கள் பாவ-புண்ணியங்களை சம்பாதிப்பது இல்லை என்பது மட்டுமல்லாமல் அவர்கள் விதி மற்றும் சஞ்சித கர்மா (ஏற்கனவே சேர்த்து வைத்துள்ள கொடுக்கல்-வாங்கல் கணக்கு) இவற்றிலிருந்து முழுமையாக விடுபட்டு விடுகிறார்கள். எனவே அவர்கள் பிறப்பு-இறப்பு சக்கர சுழற்சியிலிருந்தும் விடுபட்டு விடுகிறார்கள்.

3. கர்மயோகத்தின் பொருள் விளக்கம்

இவ்வகை ஆன்மீக பயிற்சியானது கீழே குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதலை வழங்குகிறது:

மாயை என்பது இந்த படைக்கப்பட்ட பிரபஞ்சத்தைக் குறிக்கிறது. மாயை என்பதை பிரம்மாண்டமான பிரபஞ்சத்தின் ஸ்தூல நிலையிலுள்ள த்வைதமாகவும் ஸத்ய அத்வைத பிரம்மத்தின் அஸத்ய வெளிப்பாடாகவும் புரிந்து கொள்ளலாம்.
 • நாம் ஏன் செயல்களை செய்கிறோம்?
 • ஏன் நமது செயல்கள் நம்மை கர்ம தளையில் சிக்க வைக்கின்றன?
 • கர்ம பலன்களில் கட்டுப்படாமல் நாம் எவ்வாறு செயல்களை செய்வது?
 • மாயை ஆகிற தளையிலிருந்து எந்த செயல்கள் நம்மை விடுவிக்கின்றன? அதாவது பிறப்பு-இறப்பு சக்கர சுழற்சியிலிருந்து எவ்வாறு நாம் விடுதலை அடைய முடியும்?
 • ஜீவன்-முக்தி நிலையை அடைந்த பின்பும் செயல்களில் ஈடுபடுவதன் முக்கியத்துவம் யாது?

4. கர்மயோகத்தைப் பற்றிய மற்றும் சில விளக்கங்கள்

 • எந்த செயல்களின் மூலம் நாம் ஆன்மீக வளர்ச்சி அல்லது விடுதலை அல்லது கடவுளை உணர்தல் என்ற நிலையை அடைகிறோமோ அதுவே கர்மயோகம்.
 • உலகரீதியான செயல்களை செய்தாலும் அவற்றின் வாசனை (சம்ஸ்காரம்) நமது மனதில் பதியாத அளவில் செய்வதன் மூலம் அவற்றின் தளைகளிலிருந்து விடுபடுவது.
 • பற்றுதல் இல்லாமல் எந்தவிதமான பலனையும் எதிர்பார்க்காமல் நேர்மையான முறையில் எல்லா செயல்களையும் செய்வதும் கர்மயோகமாகும்.
 • நான் என்னும் அகம்பாவம் இல்லாமல் ‘நான் எதுவும் செய்யவில்லை, இறைவனின் கைக்கருவியே நான், உலகம் முழுவதையும் இயக்கும் இறைவனே என் மூலம் செயல்படுகிறான்’ என்னும் உணர்வுடன் எல்லா செயல்களையும் செய்வதும் கர்மயோகமே. இறைவன் இல்லை, நானே எல்லா செயல்களையும் செய்கிறேன் என நினைப்பது ‘தானே கர்த்தா’ என நினைப்பதற்கு ஒப்பாகும்.

(நான் செய்கிறேன் என்ற எண்ணத்தை விடுவது பொறுப்பற்ற தன்மைக்கும் முயற்சியில் குறைவு ஏற்படுவதற்கும் வழி வகுக்கும் என்று நாம் நினைக்கலாம். ஆனால் செயலில் ஈடுபடும்போது எல்லாம் நம் முயற்சியில் தான் உள்ளது என்ற உணர்வுடனும் பலனை பற்றிய சிந்தனை வரும்போது நம் கையில் இல்லை எல்லாம் ஈசன் அருள் என்ற நினைப்பும் எழ வேண்டும் என்பதே கர்மயோகம் நமக்கு அறிவுறுத்தும் படிப்பினையாகும்.)

5. மற்ற வழிமுறைகளை அனுசரிக்கும் ஸாதகர்களுக்கு கிட்டும் பயன்

தியான யோகம், பக்தி யோகம் போன்ற ஏனைய ஆன்மீக பயிற்சி முறைகளை கடைபிடிக்கும் ஸாதகர்கள், அதோடு கூட கர்ம-யோகத்தையும் கடைபிடிக்கும்போது அதிக நன்மைகளை அடைகின்றனர்.