தனிப்பட்ட மற்றும் கூட்டு ஆன்மீக பயிற்சி

1. அறிமுகம்

பொதுவாக ஆன்மீக பயிற்சி இரு வகைப்படும் :

  1. தனிப்பட்ட ஆன்மீக பயிற்சி (வ்யஷ்டி): ‘தனிப்பட்ட ஆன்மீக பயிற்சி’ எனும் பதத்தை பிரயோகிக்கும் போது நாம் குறிப்பிடுவது ஒருவரின் தனிப்பட்ட ஆன்மீக வளர்ச்சியினை அதிகரிப்பதற்கு மேற்கொள்ளப்படுவதாகும். இறைவனுடைய நாமத்தை ஜபித்தல் அல்லது ஆன்மீக நூல்களை படித்தல் போன்றவை தனிநபரின் ஆன்மீக வளர்ச்சிக்காக செய்யப்படும் வழக்கமான ஆன்மீக பயிற்சியாகும். இங்கு தனிநபர் ஒருவரே பயிற்சியின் மூலம் பயனை பெறுகிறார்.
  2. கூட்டு ஆன்மீக பயிற்சி (ஸமஷ்டி): ‘கூட்டு ஆன்மீக பயிற்சி’ எனும் பதத்தை பிரயோகிக்கும் போது நாம் குறிப்பிடுவது மற்றவரின் ஆன்மீக முன்னேற்றத்திற்காக செய்யப்படும் ஆன்மீக பயிற்சி ஆகும். உதாரணத்திற்கு, ஆன்மீக விரிவுரைகளை நடத்துவதற்கு ஸாதகர்கள் தமது நேரத்தையும் முயற்சியையும் தந்து தன்னார்வத்துடன் செயற்படுவதனை குறிப்பிடலாம்.

2. தனிப்பட்ட மற்றும் கூட்டு ஆன்மீக பயிற்சியின் முக்கியத்துவம்

தற்காலத்தில் நமது ஆன்மீக முன்னேற்றத்திற்கு 70% முக்கியத்துவம் கூட்டு ஆன்மீக பயிற்சிக்கும் 30% முக்கியத்துவம் தனிப்பட்ட ஆன்மீக பயிற்சிக்கும் உள்ளது. ஆகையினால் ஆன்மீக முன்னேற்றம் அடைவதற்கு நாம் முடிந்தவரை சமூகத்திலுள்ள பல மக்களை ஆன்மீக பயிற்சி செய்ய ஊக்குவிக்க வேண்டும். உண்மையில் இதுவே சத்தியத்திற்கு செய்யப்படும் சேவை (ஸத்சேவை) ஆகும். எனினும் இதற்கு ஒருவர் தனிப்பட்ட ஆன்மீக பயிற்சியில் கவனம் செலுத்தி தன்னுடைய சொந்த ஆன்மீக நிலையினை அதிகரிக்க வேண்டும்.

இறைவனுடைய ஸாதகர்களான நாம் தனிப்பட்ட ஆன்மீக பயிற்சிக்கும் கூட்டு ஆன்மீக பயிற்சிக்கும் இடையே நடுநிலையுடன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த நடுநிலைத்தன்மையினை மேலும் விரிவாக விளக்குவதற்கு எரியும் விளக்கு ஒன்றினை உவமானமாக  கொள்ளலாம்.

தனிப்பட்ட மற்றும் கூட்டு ஆன்மீக பயிற்சி

விளக்கிலுள்ள எண்ணெய் தனிப்பட்ட ஆன்மீக பயிற்சியினை குறிக்கும். விளக்கிலுள்ள சுடரானது கூட்டு ஆன்மீக பயிற்சியினை குறிக்கும். எண்ணெய் குறைவாக இருந்தால் விளக்கு அதிக வெளிச்சத்தை தராது. ஆகவே நமது ஆன்மீக பயிற்சியின் அடித்தளம் உறுதியாக இருக்க வேண்டும். ஏனெனில் அதுவே கூட்டு ஆன்மீக பயிற்சி செய்வதற்கு வேண்டிய சக்தியினை அளிக்கிறது. (விளக்கினை பொருத்தவரையில் எண்ணெயினை பிரயோகித்து சுடர் விடுகிறது. ஆனால் கூட்டு ஆன்மீக பயிற்சியோ தனிப்பட்ட ஆன்மீக பயிற்சியை குறைப்பதில்லை, அதற்கு மாறாக இன்னும் அதிகரிக்கிறது.)