ஆன்மீக நிலை என்றால் என்ன?

அட்டவணை

1. ஆன்மீக நிலை பற்றி

ஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளை (எஸ்.எஸ்.ஆர்.எஃப்), ‘ஆன்மீக நிலை’ என்ற பதத்தை ஒருவரின் ஆன்மீக முதிர்ச்சி அல்லது ஆன்மீக ஆற்றலை விளக்க உபயோகப்படுத்துகிறது. இது ஆன்மீக முன்னேற்றத்தை கணிக்க உதவும் அளவுகோலாக பயன்படுகிறது. அத்துடன் ஆன்மீக பயணத்தில் நாம் எங்கு உள்ளோம் என்பதையும் காட்ட உதவுகிறது. ஒருவரின் ஆன்மீக நிலை எந்த அளவு உயர்வாக உள்ளதோ அந்த அளவிற்கு இறை தத்துவம் அவரிடம் வெளிப்படுகிறது.

2. ஆன்மீக நிலையின் அளவுகோல்

எஸ்.எஸ்.ஆர்.எஃப், ஆன்மீக நிலையை விளக்க ஒன்றிலிருந்து நூறு சதவிகிதம் உள்ள அளவுகோலை பயன்படுத்துகிறது. 1% என்பது உயிரற்ற பொருளின் ஆன்மீக நிலையை குறிக்கிறது என்றால் 100% என்பது ஒருவரின் ஆன்மீக உச்ச நிலையை, அதாவது இறைவனோடு ஒன்றிய நிலையை குறிக்கிறது.

கலவர யுகமான கலியுகத்தில் பெரும்பான்மை மக்களின் ஆன்மீக நிலை 20 சதவிகிதமே உள்ளது. ஆன்மீக அறிவியலின்படி 70% ஆன்மீக நிலைக்கு மேலே உள்ளவரே மகான் என கருதப்படுகிறார். எவ்வாறு உலக வாழ்வில் பல துறைகளில் உச்சத்தைத் தொட்ட மனிதர்கள் உள்ளனரோ அவ்வாறே ஆன்மீகத்திலும் இவ்வுலகில் வாழும் மகான்களே ஆன்மீகத் துறையின் நிபுணர்கள். அவர்கள் அறிஞர்கள் மட்டுமல்ல, ஆன்மீகத்தை அன்றாட வாழ்வில் கடைபிடிப்பவர்கள் மற்றும் இறைவனை உணர்ந்த ஆத்மாக்களும் ஆவார்கள்.

எந்த மகான்கள் ஆன்மீகத்தைக் கற்றுத் தந்து சாதகர்களை ஆன்மீகப் பாதையில் வழிநடத்தி செல்கிறார்களோ அவர்களே ‘குரு’ எனப்படுவார்கள். உலகில் வாழும் மகான்களில் 10% மகான்களே குருமார்கள் ஆவார்கள். இறைவனின் கற்றுத் தரும் தன்மையின் சகுண ரூபமே குரு ஆவார். உலக விஷயங்களில் மூழ்கிக் கிடக்கும் இந்த பூமியில் ஆன்மீக ஞானத்தின் கலங்கரை விளக்கமாக திகழ்பவர்கள் இவர்களே.

3. ஆன்மீக நிலை மற்றும் ஆன்மீக பயிற்சி

4. ஆன்மீக நிலையை எவ்வாறு மதிப்பிடுவது?

ஆன்மீக நிலையை நவீன விஞ்ஞான உபகரணங்களாலோ அல்லது புத்தியை உபயோகித்தோ நிர்ணயிக்க முடியாது. ஒரு குரு அல்லது மகானே, தன் ஆறாவது அறிவைக் கொண்டு அல்லது சூட்சும ஆற்றலைக் கொண்டு ஒருவரின் ஆன்மீக நிலையை மதிப்பிட முடியும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்வி, ‘ஒரு மகானால் எவ்வாறு துல்லியமாக ஒருவரின் ஆன்மீக நிலையை மதிப்பிட முடிகிறது?’

எவ்வாறு ஒரு கண்ணால், தன்னியல்பாக அமைந்த ஆற்றலைக் கொண்டு நீல நிறம், சிவப்பு நிறம் என 100% துல்லியமாக வேறுபடுத்த முடிகிறதோ, அவ்வாறே ஒரு மகானால் தன் ஆறாவது அறிவைக் கொண்டு ஒருவரின் ஆன்மீக நிலையை துல்லியமாக மதிப்பிட முடியும். கண்ணுக்குத் தெரியாத உலகத்தை நுண்ணியதாக உணர்வதற்கும் துல்லியமாக மதிப்பிடுவதற்கும் ஆறாவது அறிவு பயன்படுகிறது.

கட்டைவிரல் விதிப்படி புத்தி அளவில் ஒருவரின் ஆன்மீக நிலையைப் பற்றி புரிந்து கொள்வதற்கு கீழே ஒரு அளவுகோல் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒருவரின் ஆன்மீக நிலை உயர உயர, அவரின் மனோபாவம் மற்றும் வாழ்க்கை பற்றிய கண்ணோட்டங்கள் முற்றிலும் மாறுகின்றது. உதாரணத்திற்கு, 30% ஆன்மீக நிலை உள்ள ஒருவருக்கு அவரின் பரபரப்பான வாழ்வின் இடையில் சத்சங்கத்தில் பங்குபெற நேரம் கிடைப்பது கடினமாக உள்ளது.  அதே உலக கடமைகள் உடைய அதே நபர், 40% ஆன்மீக நிலை அடைந்த பின்னர் சுலபமாக தொடர்ந்து சத்சங்கங்களில் அவரால் பங்கு பெற முடிகிறது மற்றும் தொடர்ந்து ஆன்மீக புத்தகங்களைப் படிக்க முடிகிறது.

ஒரு குறிப்பிட்ட ஆன்மீக நிலையிலிருப்பவர், உதாரணத்திற்கு 30% ஆன்மீக நிலையிலிருப்பவர், அவருக்கு சில சதவிகித புள்ளிகள் அருகாமையில் இருப்பவரோடு தான் நெருக்கத்தை உணர்வார். உதாரணத்திற்கு 30% ஆன்மீக நிலையில் இருப்பவரால் 40% ஆன்மீக நிலையில் இருப்பவரோடு நெருக்க உணர்வை கொள்ள முடியாது. அதேபோல் இவராலும் அவரிடம் கொள்ள முடியாது.

புத்தியால் ஓரளவிற்கு இன்னொருவர் நம்மை விட ஆன்மீகத்தில் முன்னேறியவர் என்பதை உணர முடியும். இருந்தாலும் இந்த கணக்கீடு தோராயமானதே.

புத்தியால் ஒரு மகானை அடையாளம் காண முடியாது.

ஆன்மீக நிலை என்பது பல விஷயங்களைப் பொருத்தது. கீழே கொடுக்கப்பட்ட குறிப்புகள் மூலம் ஒருவரின் ஆன்மீக நிலையை நிர்ணயிக்கும் சில முக்கிய விஷயங்களைப் பற்றிய விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் அவை ஆன்மீக முன்னேற்றம் அடையும்போது எவ்வாறு மாறுபடுகிறது என்பதும் விளக்கப்பட்டுள்ளது.

4.1 அகம்பாவம் மற்றும் ஆன்மீக நிலை .

  • ஒருவனின் ஆன்மீக நிலையின் முக்கிய அளவுகோல் என்னவென்றால் அவரின் ஆத்மாவை சுற்றி கருமையாக படர்ந்துள்ள அகம்பாவம் எந்த அளவு நீக்கப்பட்டுள்ளது என்பதும் அவர் ஆத்மாவுடன் எந்த அளவு தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார் என்பதும்தான்.
  • ஆத்மாவை சுற்றியுள்ள கருவட்டம் என்பது ஒருவர் தன்னை ஐம்புலன்கள், மனம் மற்றும் புத்தியுடன் அடையாளப்படுத்திக் கொள்வதை குறிக்கிறது. இந்த அகம்பாவம் என்பது நம் உண்மை நிலையை உணராத அறியாமை என்றும் அழைக்கப்படுகிறது. நம் நவீன கல்விமுறை நம் உண்மையான இருப்பான ஆத்மாவை மறந்து, நம்மை நம் ஐம்புலன்கள், மனம் மற்றும் புத்தியுடன் அடையாளப்படுத்த மட்டுமே கற்றுத் தருகிறது.
  • ஆன்மீக அறிவியலைக் கற்ற பின்பு புத்திபூர்வமாக நம்முள் ஆத்மா உறைகிறது என்று உணர்ந்தாலும் நம்மால் அதை அனுபவபூர்வமாக உணர முடிவதில்லை. நாம் ஆன்மீக பயிற்சி செய்து வரும்போது அகம்பாவமேனும் இருள் அகன்று இறுதியாக உச்ச ஆன்மீக நிலையில் நம்முள் ஒளிரும் ஆத்மாவை உணர முடிகிறது.
  • ஆன்மீக பயிற்சி செய்து வரும்போது ஆன்மீக நிலை உயர உயர, அகம்பாவம் குறைய ஆரம்பிக்கிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை மூலம் அதிகரிக்கும் ஆன்மீக நிலையில் எவ்வாறு அகம்பாவம் குறைகிறது என்பது தெளிவாகிறது.

ஆன்மீக நிலை என்றால் என்ன?

20% ஆன்மீக நிலையில் ஒருவர் சுயநலம் மிக்கவராக தன்னைப் பற்றி மட்டும் சிந்திப்பவராக இருப்பர். ஆன்மீக பயிற்சி செய்ய ஆரம்பிக்கும்போது நம்முடைய உடல் உணர்வு குறைய ஆரம்பிக்கிறது. நம்மால் அசௌகரியங்களையும் கஷ்டங்களையும் தாங்கிக் கொள்ள முடிகிறது; அதோடு கூட புகழ்ச்சியும் நம் தலைக்கு ஏறாமல் சமநிலையில் அதை ஏற்றுக் கொள்ள முடிகிறது.

உதாரணத்திற்கு, அதிக அகம்பாவத்தின் ஒரு அறிகுறி என்னவென்றால் ஒரு பெண்ணிடம் அவள் எடை கூடி விட்டாள் அல்லது வயதானவளாக தெரிகிறாள் என்று சொல்லும் போது அவள் நீண்ட காலத்திற்கு மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாவது. அகம்பாவத்தின் இன்னொரு வெளிப்பாடு என்னவென்றால் ஆன்மீக பயிற்சி செய்யும் ஒருவர், தன் சக ஊழியர்கள் என்ன நினைப்பார்களோ எனக் கருதி தான் செய்யும் சாதனையை வெளியே காட்டிக் கொள்ளாமல் இருத்தல். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பிறர் நம் குறைகளை சுட்டிக் காட்டும்போது நமக்குள் எதிர்மறையான எண்ணங்கள் எழுகின்றன. குறைகளை ஏற்றுக் கொள்ளாததும் அகம்பாவத்தின் வெளிப்பாடுதான்.

4.2 சுய மகிழ்ச்சியின் மீதுள்ள கவனமும் ஆன்மீக நிலையும்

சராசரி மனிதனோடு ஒப்பிடும்போது ஒரு உயர் ஆன்மீக நிலையிலுள்ளவரின் ஒரு முக்கிய லட்சணம் அவர் தன் சுய மகிழ்ச்சிக்கு குறைந்த அளவு முக்கியத்துவம் தருவது ஆகும். கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணைப்படி, ஒரு மகானின் நிலையை அடைந்தவர் தன் சுய மகிழ்ச்சிக்காக 10 சதவிகிதமே கவனம் செலுத்துகிறார். இதன் காரணம் என்னவென்றால் ஆன்மீக நிலை உயர உயர ஒருவர் தன்னை தன் உடல், மனம் மற்றும் புத்தியுடன் அடையாளப்படுத்திக் கொள்வது குறைகிறது.

ஆன்மீக நிலை என்றால் என்ன?

சுய மகிழ்ச்சியின் மீது கவனம் செலுத்துவது பற்றிய உதாரணங்கள் ஒரு சராசரி மனிதனின் வாழ்வில் நிரம்பியுள்ளது. அவற்றில் சில:

  1. நோய்வாய்ப்பட்ட குடும்பத்தினரை பார்த்துக் கொள்ளும்போது ஏற்படும் எரிச்சல்.
  2. சத்சங்கம் நடக்கும் இடம் அருகே இருந்தால் மட்டுமே பங்கேற்க சம்மதிப்பது.
  3. அநீதியை எதிர்த்து நடக்கும் போராட்டத்திற்கு பண உதவி செய்ய தயாராயிருந்தாலும் தன் நேரத்தையும் முயற்சியையும் அதற்காக செலவிட தயங்குவது.

சுய மகிழ்ச்சியின் மீது குறைந்த கவனம் செலுத்துவதால் ஏற்படும் ஒரு நேர்மறையான பலன் அதன் மூலம் மனம் விசாலமாகிறது. முழு மனதுடன் மற்றவரின் மகிழ்ச்சிக்கும் சமூகத்தின் நன்மைக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்க முடிகிறது.

ஆன்மீகத்தில் வளர வளர, சுய மகிழ்ச்சியின் மீது குறைந்த கவனம் செலுத்தினாலும் ஆச்சரியம் தரும் விஷயம் என்னவென்றால், ஆன்மீக நிலை உயரும்போது அதிக அளவு மகிழ்ச்சியை அனுபவிக்க முடிகிறது. ஆன்மீக முதிர்ச்சி அதிகரிக்கும்போது நம் வாழ்வில் அனுபவிக்கும் மகிழ்ச்சி  தரத்திலும், அளவிலும் எவ்வாறு அதிகரிக்கிறது என்பதை விளக்கும் அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு மகான் அனுபவிக்கும் உச்ச நிலையான ஆனந்தம், இந்த மகிழ்ச்சிக்கும் அப்பாற்பட்டது, உயர்தரமானது.

ஆன்மீக நிலை என்றால் என்ன?

4.3 ஆன்மீக பயிற்சியும் ஆன்மீக நிலையும்

நம் ஆன்மீக நிலை உயரும்போது நம்முடைய ஆன்மீக பயிற்சியும் தரத்திலும் அளவிலும் உயர்கிறது. மேலும் ஆன்மீக பயிற்சி செய்யும் ஆற்றல் என்பது ‘ஆன்மீக தசைகளை’ வளர்த்துக் கொள்வது போன்றது. எந்த அளவு ஆன்மீக பயிற்சியை நீட்டிக்கிறோமோ அந்த அளவு ‘ஆன்மீக தசைகளும்’ வளர்கின்றன.

35% ஆன்மீக நிலையிலேயே உண்மையில் ஆன்மீக பயிற்சி ஆரம்பமாகிறது. அதாவது ஒருவர் ஆன்மீகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளின்படி ஆன்மீக முன்னேற்றம் அடைய தினமும் ஆன்மீக பயிற்சி செய்ய ஆரம்பிக்கிறார். ஆன்மீக பயிற்சியின் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால் சம்ப்ரதாய வட்டத்தைத் தாண்டி சென்று உயர்நிலை சூட்சும ஆன்மீக பயிற்சியை மேற்கொள்வது ஆகும். உதாரணத்திற்கு, ஸ்தூலமாக உடல் மூலமாக பூஜை செய்பவர் உயர் நிலையிலுள்ள சூட்சும மானச பூஜை செய்தல். இதன் ஒரு உதாரணம் ஆன்மீக பயிற்சியான இறைவனின் நாமஜபத்தை செய்தல்.

ஆன்மீக பயிற்சியின் மீதுள்ள கண்ணோட்டத்தில் உள்ள வித்தியாசங்களை விளக்கும்  சில உதாரணங்கள்

  • 20% ஆன்மீக நிலையில் சிறிதளவு அல்லது ஆன்மீக பயிற்சியே நடப்பதில்லை. இவர்கள் கோவில்களுக்கு செல்வது பழக்க தோஷத்தால் அல்லது பொழுதுபோக்கிற்காக.
  • 30% ஆன்மீக நிலையில் தீர்த்த க்ஷேத்திரங்களுக்கு செல்வதிலும் கடவுளை பூஜை வழிமுறைப்படி தொழவும் நாட்டம் இருக்கும்;
  • 40% ஆன்மீக நிலையில் ஆன்மீக ஞானத்தைப் பெறவும் ஆன்மீக சாதனை செய்யவும் ஆழ்ந்த தாபம் ஏற்படும். அவர்களின் பெரும்பாலான ஓய்வு நேரம் ஆன்மீக விஷயங்களில் செலவிடப்படும்.
  • 50% ஆன்மீக நிலையில் ஒருவர் தன் சம்ப்ரதாயத்திற்கு அப்பாற்பட்டு சென்று தூய ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவராக இருப்பர். ஒருவரின் வாழ்க்கை லட்சியம் உலக பற்றுதல்களில், சாதனைகளில் ஈடுபடுவதைக் காட்டிலும் ஆன்மீக முன்னேற்றம் அடைவதில் இருக்கும். அதற்கேற்றாற்போல் அவர்களின் பெரும்பாலான நேரம் அவர்கள் வியாபாரிகளாக இருந்தாலும் சரி, வீட்டுத் தலைவியாக இருந்தாலும் சரி எந்த சந்தர்ப்பத்திலும் ஆன்மீக பயிற்சியிலேயே செலவிடப்படும். அதனால் 50% ஆன்மீக நிலை அடைந்தவர் அனைவரும் தங்கள் உலக வாழ்க்கையை, உத்தியோக வாழ்க்கையை துறப்பர் என்பதல்ல; அவர்களின் முழு ஈடுபாடு உலக முன்னேற்றத்திலிருந்து தடம் மாறி ஆன்மீக முன்னேற்றத்தில் இருக்கும். அதனால் முன்பு தான் எவ்வளவு சம்பாதிக்கிறோம், பிறர் நம்மைப் பற்றி என்ன நினைக்கின்றனர் என்பதில் கவனம் செலுத்திய ஒருவர் தற்பொழுது கடவுள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார் என்று அறிந்து கொள்வதில் ஆர்வம் உள்ளவராக இருப்பர்.

ஆன்மீக நிலை என்றால் என்ன?

4.4 மனோரீதியான உணர்வு மற்றும் ஆன்மீக நிலை

இன்றைய சுயநலம் மிகுந்த, ஈவு இரக்கமற்ற உலகில் மற்றவர் மீது நல்லெண்ணம் கொள்வது உண்மையிலேயே பாராட்டத்தக்கது. ஒரு சராசரி, ஈவு இரக்கமற்ற உணர்வில்லாத மனிதனின் நிலையிலிருந்து உயர்ந்ததான இந்நிலையை அடைந்த பின் இதுவும்  இறுதியான நிலை இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இன்னும் சொல்லப் போனால் மேலே விவரிக்கப்பட்ட படத்தைப் போன்று மனோரீதியான உணர்வு என்பதும் ஆத்மாவை சுற்றி படர்ந்துள்ள கருப்பு ஆவரணமாகும். அதுவும் ஆத்ம ஸ்வரூபமான இறைவனை நம்முள் உணர முடியாமல் தடுக்கும் சுவர் ஆகும். கடவுள் என்பவர் மனோரீதியான உணர்வுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்; உன்னத நிலையான ஆனந்தத்தில் மூழ்கி இருப்பவர். ஒருவர் ஆன்மீகத்தில் வளர்ச்சி அடையும்போது உணர்வு ரீதியாக செயல்படுவது குறைகிறது. அப்பொழுது சமநிலையான மனம் அமைகிறது; சுற்றுப்புறத்தில் நடக்கும் இன்ப, துன்ப நிகழ்ச்சிகள் அவரை பாதிப்பதில்லை.

ஆன்மீக நிலை என்றால் என்ன?

20% ஆன்மீக நிலையில் இருக்கும் ஒரு இளம் பெண் தன் முன்னுச்சி முடி ஒரு சென்டிமீட்டர் குறைவாக வெட்டி விட்டதற்காக பெரும் கலாட்டா செய்து பல நாட்கள் துன்பத்தில் ஆழ்ந்திருப்பாள். அதே இளம் பெண், 50% ஆன்மீக நிலையை எட்டிய பிறகு தனக்கு தீராத பெரும் வியாதியான கான்சர் அல்லது எய்ட்ஸ் இருக்கிறது என்று தெரிந்தும் கூட மனம் தளராது திடமாக இருப்பாள்.

4.5 ஆன்மீக உணர்வும் ஆன்மீக நிலையும்

இறைவன் மீதுள்ள ஆன்மீக உணர்வு என்பது இறைவனை எங்கும் எல்லாவற்றிலும் உணர்தல் ஆகும்; தினசரி வாழ்க்கையின் ஒவ்வொரு செயலிலும் இறைவனின் இருப்பை உணர்ந்து அவ்வுணர்வுடனேயே வாழ்க்கையை அனுபவிப்பதாகும்.

ஒருவரின் ஆன்மீக உணர்வு அதிகரிக்கும்போது இறைவனின் குறுக்கீட்டை வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் உணர முடிகிறது; அதனால் இறைவனிடம் அதிக அளவு சரணாகதி செய்ய முடிகிறது. சரணாகதி நிலையை ஒருவர் அடையும்போது இறைவன் அவர் மூலமாக இயங்கத் துவங்குகிறான். இந்த இறை தத்துவம் அதிகரிக்கும் விகிதாசாரத்தில் அவரிடம் வெளிப்பட ஆரம்பிக்கிறது; அவரும் அவரை சுற்றி உள்ளோரும் இறைவனின் தெய்வீக சக்தி பிரவாஹத்தை அவருள் உணர ஆரம்பிக்கின்றனர்.

ஆன்மீக நிலை என்றால் என்ன?

20% ஆன்மீக நிலையில் உள்ள ஒருவர், ஒரு பெரிய வியாபார ஒப்பந்தம் வெற்றிகரமாக நிறைவேறிய பின் தன் மீதும் தன்னுடைய புத்திகூர்மையின் மீதும் பெரும் கர்வம் கொள்வர். 50% ஆன்மீக நிலையில் உள்ள ஒருவர், அதே சூழ்நிலையில் ஆன்மீக உணர்வு பொங்கிப் பெருக, இறைவனின் கருணையை நினைந்து நினைந்து நன்றியுணர்வால் நிறையப் பெறுவர்.

20% ஆன்மீக நிலையில் உள்ள ஒருவர் அந்த ஒப்பந்தம் நிறைவேறாவிட்டால் எரிச்சல், பொறாமை மற்றும் துக்கத்தில் மூழ்குவர். அதே சமயத்தில் 50% ஆன்மீக நிலையில் உள்ள ஒருவர், இறைவனின் குறுக்கீட்டை அந்த சூழ்நிலையிலும் உணர்ந்து மேலும் சிறந்தவரிடம் அந்த ஒப்பந்தம் சென்றிருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டு இத்தகைய நல்ல கண்ணோட்டத்தை தந்தருளிய இறைவனுக்கு நன்றி செலுத்துவர்.

5. ஆன்மீக நிலையின் சில அம்சங்கள்

நாம் எந்த ஆன்மீக நிலையில் இருக்கிறோமோ அதைப் பொருத்தே நாம் எவ்வாறு வாழ்கிறோம் என்பதும் வாழ்க்கையின் சந்தர்ப்ப சூழ்நிலைகளால், விதியால் எவ்வாறு பாதிக்கப்படுகிறோம் என்பதும் அமையும். ஆன்மீக நிலையின் சில அம்சங்களும் அவை நம் வாழ்வை எவ்வாறு பாதிக்கின்றன என்பதும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

5.1 ஆன்மீக நிலையும் பிறப்பும்

நாம் எல்லோரும் ஒரு குறிப்பிட்ட ஆன்மீக நிலையில் பிறக்கிறோம். இது முந்தைய பிறப்பில் நாம் அடைந்த ஆன்மீக நிலையைப் பொருத்தது. அதாவது ஒருவர் ஆன்மீக பயிற்சி செய்து 50% ஆன்மீக நிலையை இப்பிறவியில் எட்டியுள்ளார் என்றால் அடுத்த பிறப்பில் அவர் 50% ஆன்மீக நிலையுடனேயே பிறப்பார். ஆன்மீகத்தில் அடிப்படையாக நாம் முற்பிறவியில் விட்ட இடத்திலிருந்து இப்பிறவியில் தொடர்கிறோம். இது உலக விஷய ஞானத்திற்கு எடுபடாது. நாம் பிறந்தவுடன் மறுபடியும் துவக்கத்திலிருந்தே ஆரம்பிக்க வேண்டும்.

5.2 நாஸ்திகர்களிடம் உயர் ஆன்மீக நிலை இருக்குமா?

நிச்சயமாக, நாஸ்திகர்களிடமும் அவர்கள் கடவுளை நம்பவில்லை என்றால் கூட உயர் ஆன்மீக நிலை இருக்கலாம். சில சமயங்களில் அவர்கள் தங்களின் ஆன்மீக பயிற்சியை, வாழ்வில் தாமதமாக துவங்கலாம் – அது அவர்களின் விதியைப் பொருத்தது.

5.3 ஆன்மீக நிலையும் இணக்கத்தன்மையும்

நாம் முன்பே பார்த்தபடி ஆன்மீக நிலையில் உள்ள வித்தியாசம் வாழ்க்கையை நோக்கும் இருவரின் கண்ணோட்டத்தில் இருவேறு பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.  அதனால் இரு நபர்களின் ஆன்மீக நிலையில் உள்ள இடைவெளி அதிகமாகும்போது அவர்களுக்கிடையே உள்ள இணக்கத்தன்மையும் குறைகிறது. இருவரின் இணக்கத்தன்மையில் 5% இக்காரணத்தால் ஏற்படுகிறது.

இருவர் ஒரே ஆன்மீக நிலையில் இருந்தாலும் ஆன்மீக முன்னேற்றத்திலுள்ள ஆர்வம் மாறுபடும்போது அவர்களின் இணக்கத்தன்மை பாதிக்கப்படுகிறது.

இணக்கத்தன்மை குறைவதற்கான இன்னொரு காரணம் இரு சாதகர்களில் ஒருவர் வ்யஷ்டி சாதனையில் கவனம் செலுத்தி மற்றவர் சமஷ்டி சாதனையில் கவனம் செலுத்தும்போது ஏற்படுவதுதான். இது இரு சாதகர்களுக்கிடையே இணக்கத்தன்மை இல்லாதிருப்பதன் காரணங்களில் 8% -ஐ வகிக்கிறது.

மேலும் விளக்கமான கட்டுரைக்கு பார்வையிடவும் ‘இணக்கத்தன்மையை பாதிக்கும் கூறுகள்’

5.4 ஆன்மீக நிலையும் பிரம்மாண்டத்தின் சக்தியை வசப்படுத்துவதும்

நாம் ஆன்மீகத்தில் வளர்ச்சி அடையும்போது நமக்கு பிரம்மாண்டத்தின் உயர் நிலை சக்திகள் வசப்படுகின்றன. ஆனால், கீழே கொடுக்கப்பட்டுள்ளவை, மிகத் தாழ் நிலையில் உள்ள சக்திகள், அதாவது ஸ்தூல சக்திகள். உலகின் பெரும்பான்மையோர் அவர்களின் முழு வாழ்க்கையையும் செலவழித்து இத்தகைய சக்தியின் ஒரு பகுதியை தங்கள் வசப்படுத்த முயல்கின்றனர்.

  • நோயைக் குணப்படுத்தும் மருந்துகள் – உதாரணத்திற்கு கிருமிகளைக் கொல்லும் கிருமிநாசினி
  • கொல்வதற்கு பயன்படும் ஸ்தூல ஆயுதங்கள்
  • பணபலம்
  • அரசியல் பலம்

உதாரணத்திற்கு அடோல்ப் ஹிட்லரின் அபரிமிதமான வளர்ச்சிக்கு காரணம் அவனுக்கு பின்னால் கீழ் உலகங்களை சார்ந்த மிக சக்தி வாய்ந்த மாந்த்ரீகன் இருந்து இயக்கிக் கொண்டிருந்ததால்தான். ஹிட்லரின் வாழ்நாள் முழுவதும் அவனை பீடித்த இந்த மாந்த்ரீகன் அவனை எந்த ஸ்தூல சக்தியும் வெற்றி கொள்ள முடியாதபடி சக்திமானாக வைத்திருந்தான்.

ஹிட்லரை பீடித்திருந்த இந்த சூட்சும மாந்த்ரீகனை தங்களின் ஆன்மீக பலத்தால் தடுத்து நிறுத்தியவர்கள் (ஆன்மீக பரிமாணத்தில்) இந்தியாவை சேர்ந்த இரு மகான்கள் – புனித மாதாஜி மற்றும் யோகி அரவிந்தர். இவ்விரு மகான்களும் சூட்சும மாந்த்ரீகனின் சூட்சும சக்தியை சூட்சுமமாக குறைத்தவுடன், ஹிட்லரை எதிர்த்த மற்ற நாடுகளின் ராணுவத்தினரால் யுத்தத்தின் போக்கையே மாற்றி வெற்றி காண முடிந்தது. (தகவல் : searchforlight.orglightendlesslight.orgaurobindo.ru)

முழு கட்டுரையைப் படிக்க இதை சொடுக்கவும் – ‘பிரபஞ்ச சக்திகளின் வரிசைக்கிரமம்’

5.5 ஆவிகளிடமிருந்து (பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள் போன்றவை) பாதுகாப்பு அளிக்கும் ஆன்மீக நிலை

ஆவிகளிடமிருந்து (பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள் போன்றவை) நம்மை பாதுகாத்துக் கொள்ளும் ஒரே உறுதியான நீடித்திருக்கும் வழி ஆன்மீக வளர்ச்சி தான். 20-30% ஆன்மீக நிலையில் எல்லா வித ஆவிகளும் (பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள் போன்றவை) தாக்கக் கூடிய பலவீனமான நிலையில் இருக்கிறோம். இந்நிலையில் இறைவனின் பாதுகாப்பு நமக்கு இல்லாததால் எந்த விதமான ஆவியும் நம்மை பீடிக்கக் கூடிய ஆபத்து உள்ளது.

முழு கட்டுரையையும் படிக்க இங்கு சொடுக்கவும் – ஆவிகளிடமிருந்து (பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள் போன்றவை)காத்துக் கொள்ள ஆன்மீக நிலை, எந்த அளவு பாதுகாப்பு கவசத்தை வழங்குகிறது?

5.6 மனநிலை குன்றியவரின் ஆன்மீக நிலை

சாராசரி மனிதனின் 20% ஆன்மீக நிலையுடன் ஒப்பிடும்போது மனநிலை குன்றியவரின் ஆன்மீக நிலை 19%–மே ஆகும். இதன் காரணம் மனநிலை குன்றியவர் புத்திவளம் இல்லாதவராக உள்ளார். புத்திவளம் என்பது நம் ஆன்மீக நிலையை உயர்த்த உதவும் சூட்சும ஸத்வ கூறாகும். அதனால் அவரின் ஆன்மீக நிலை சராசரி மனிதனின் நிலையை விட குறைவாக உள்ளது.

5.7 ஒரு தீயவனின் ஆன்மீக நிலை

ஊழல் அரசியல்வாதிகள், குண்டர்கள், தீவிரவாதிகள் போன்று சமூகத்தினருக்கு தீங்கு விளைவிக்கும் தீயவர்களின் ஆன்மீக நிலை பெரும்பாலும் 20%-திற்கு  கீழே இருக்கும்; சில சமயங்களில் 10% வரை கூட குறையலாம்.

6. இன்றைய உலக ஜனத்தொகையின் ஆன்மீக நிலையின் பாகுபாடு

2016 ஆண்டு கணக்கெடுப்பின்படி உலக ஜனத்தொகையான 7.3 பில்லியன் மக்களின் ஆன்மீக நிலையின் பாகுபாட்டை நாங்கள் ஆன்மீக ஆய்வு முறையை உபயோகித்து செய்துள்ளோம்.

2016-ல் உலக ஜனத்தொகையின் ஆன்மீக நிலை

ஆன்மீக நிலை உலக ஜனத்தொகையின் விகிதம் மக்களின் எண்ணிக்கை1
20-29% 63% 4.599 பில்லியன்
30-39% 33% 2.409 பில்லியன்
40-49% 4% 0.292 பில்லியன்
50-59% மிகக் குறைவு 15,000
60-69% மிகக் குறைவு 5,000
70-79%2 மிகக் குறைவு 1003
80-89% மிகக் குறைவு 203
90-100% மிகக் குறைவு 103

அடிக்குறிப்புகள் :

  1. பிப்ரவரி 2016 அன்று உலக ஜனத்தொகை 7.3 பில்லியன் என கணக்கெடுத்த census.gov–ன் கணக்கெடுப்பை ஆதாரமாகக் கொண்டது.
  2. ஒரு மகானின் ஆன்மீக நிலை 70%–க்கும் மேற்பட்டது.
  3. 70% முதல் 100% ஆன்மீக நிலை வரை ஏறத்தாழ 1000 மகான்கள் உள்ளனர். இருந்தாலும் ஆன்மீகத்தை பரப்புவதில் அதிக செயல்பாட்டுடன் ஈடுபடும் மகான்கள் மற்றும் குருமார்களின் எண்ணிக்கையையே இங்கு குறிப்பிட்டுள்ளோம்.

மேற்கூறப்பட்டுள்ள அட்டவணை மூலம் இன்றைய உலக ஜனத்தொகையின் பெரும்பாலோர் 20% முதல் 29% வரையுள்ள ஆன்மீக நிலையிலேயே உள்ளனர். இன்று உலகத்தை பல பிரச்சனைகள் பீடித்துள்ளன. இந்த பிரச்சனைகள் போதைப்பழக்கம், திருமண முறிவு போன்ற தனிப்பட்ட பிரச்சனையிலிருந்து சமூகமும் நாடுகளும் எதிர்கொள்ளும் மதக்கலவரம், யுத்தம், இயற்கை சீற்றங்கள் போன்ற பிரச்சனைகள் வரை பலதரப்பட்டவை. உலகத்தின் இந்த நிலைக்கான முக்கிய காரணம் – மக்கள் மற்றும் தலைவர்கள் ஆகிய இரு தரப்பினருமே பெரும்பாலும் குறைந்த ஆன்மீக நிலை கொண்டவர்களாக இருப்பதுதான். அதனால் உலகத்தின் இன்றைய நிலையை மாற்றியமைக்க மனித குலத்தின் சராசரி ஆன்மீக நிலையை உயர்த்த வேண்டும். இது நடப்பதற்கு மக்கள் தொடர்ந்து ஆன்மீக பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.