1. அறிமுகம்

‘சத்சங்கம் என்றால் என்ன’ என்கின்ற கட்டுரையில் விளக்கியது போல், சத்சங்கம் என்பது சத்தியத்தின் சங்கமாகும். சத்தியத்தின் சங்கத்தில் இருக்க பல வழிகள் உண்டு. அவ்வாறான பல்வேறு சத்சங்கங்களின் வகைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

2. இறைவனுடன் சத்சங்கம்

எந்தவொரு ஆன்மீக பயிற்சியும் செய்யாத ஒருவர் கஷ்டமான தருணங்களில் இறைவனை நினைப்பதோடு அவருடன் உரையாடவும் செய்கிறார். ஆன்மீக பாதையில் இருக்கும் ஒருவர் கஷ்டமான நேரங்களில் மட்டுமல்ல, தன்னுடைய வாழ்க்கையில் நடைபெறும் ஒவ்வொரு சிறிய விஷயங்களை கூட இறைவனுடன் பகிர்ந்து கொள்கிறார். தன்னுடைய தவறுகளையும் ஆழமாக பதிந்திருக்கும் எண்ணங்களையும் கூட இறைவனுடன் பகிர்ந்து கொள்கிறார். சிறிது காலத்தில் சாதகர் தன்னுள்ளிருந்து பதில்கள் கிடைப்பதை உணர்கிறார். இவ்வாறு அவர் தனது ஆன்மீக பயிற்சியில் முன்னோக்கி செல்ல இறைவனுடன் இந்த உரையாடலை சதாசர்வ காலமும் தக்க வைத்துக்கொள்ள முயற்சி செய்வதனால் அவரால் இறைவனுடன் எப்பொழுதும் ஒன்றி இருப்பதற்கு முடிகிறது. இறைவனுடன் உரையாடுவது அவருடன் சத்சங்கத்தில் இருப்பதற்கு ஈடாகும். இதுவே உயர்ந்த வகையான சத்சங்கம் ஆகும்.

3. மகான், குரு மற்றும் ஆன்மீக பயிற்சியில் முன்னேற்றம் அடைந்தவர்களுடனான சத்சங்கம்

வேகமான ஆன்மீக முன்னேற்றத்திற்கு ஆன்மீக பயிற்சியில் முன்னேற்றம் அடைந்தவர்களுடன் அல்லது ஆன்மீக வழிகாட்டியுடன் நாம் தொடர்ச்சியாக சத்சங்கம் வைத்துக்கொள்ள வேண்டும். இது சத்சங்கத்தின் நன்மையினை தருவதோடு நமது நடவடிக்கைகளை திருத்தி கொள்வதற்கும், ஆன்மீக பயிற்சியை மேம்படுத்தவும், தடைகளை விலக்குவதற்கு வழிகாட்டலை பெறவும் சந்தர்ப்பத்தை வழங்குகிறது.

நாம் சத்சங்கத்திற்காக முன்கூட்டியே திட்டமிடுவது அவசியமாகும். இதனால் ஆன்மீக பயிற்சியில் முன்னேற்றமடைந்தவருடன் செலவழிக்கும் நேரம் குறிப்பிட்ட இலக்குகளை அடைவதற்காக சரியாக பயன்படுத்தப்படும். உதாரணமாக, ஆன்மீக பயிற்சியில் முன்னேற்றமடைந்தவரை சந்திக்கும் முன் அல்லது தொலைபேசி அழைப்பினை மேற்கொள்ளும் முன், என்றைக்கு எந்த நேரம் தொடர்பு கொள்ள வேண்டும் அல்லது சந்திக்க வேண்டும் என திட்டமிட வேண்டும். நமது ஆன்மீக அனுபவங்களையும், நமக்கு ஏற்பட்டுள்ள தடைகளையும், நம்முடைய கேள்விகளையும், ஆன்மீக பயிற்சியில் ஏற்பட்ட முன்னேற்றங்களையும் குறிப்பெடுத்து வைத்துக்கொண்டு அவை பற்றி விவாதிக்க வேண்டும்.

ஆன்மீக பயிற்சியில் முன்னேறியவருடன் மேற்கொண்ட உரையாடல்களின் மூலமோ அவர்களை கவனித்ததின் மூலமோ கற்றுக்கொண்டவைகளையும், அதன் பின்னணியில் உள்ள ஆன்மீக தத்துவத்தையும் குறிப்பெடுத்துக்கொண்டு அவற்றை நடைமுறையில் பயிற்சி செய்ய வேண்டும்.  குறிப்பிட்ட சம்பவம் அல்லது உரையாடலினால் ஆன்மீக தத்துவம் ஒன்று விளக்கப்படுகிறது எனில், அந்த ஆன்மீக தத்துவத்தை புரிந்து கொள்வதிலேயே கவனம் இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, ஆன்மீக பயிற்சியில் முன்னேறியவர் தொலைபேசியினை சுத்தமாகவும் சரியான நிலையில் வைக்கப்பட வேண்டும் என்று உதாரணம் ஒன்று வழங்கினால், நாம் அதற்கு பின்னணியில் உள்ள தத்துவமான தூய்மையாக இருப்பதனையும் செய்வனவற்றை சரியாக செய்வது எனும் கருத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். இதனை ஆன்மீக பயிற்சியின் பகுதியாக நடைமுறை படுத்தவேண்டும். இத்தத்துவம் தொலைபேசியிற்கு மட்டுமல்ல, எல்லாவற்றுக்கும் பொருந்தும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதன் பின் நாம் கற்று கொண்டவைகளையும் வழிகாட்டுதல்களையும் நடைமுறைப்படுத்த வேண்டும். ஏனெனில் நடைமுறையில் பயிற்சி செய்யப்படாத ஞானம் வீணானதே.

ஆன்மீக பயிற்சியில் முன்னேறியவருடன் ஒவ்வொரு தடவையும் சத்சங்கத்தில் கலந்து கொள்ளும் போது ஏற்படும் அனுபவங்களை குறித்து கொள்ளவேண்டும். உதாரணமாக, நாமஜபம்  எண்ணிக்கையில் அல்லது தரத்தில் மேம்பட்டுள்ளதா, வெளிப்படையாக கலந்துரையாடும் முன்பே சந்தேகங்கள் தெளிவுபடுத்தப்பட்டதா, முதுகுவலி போன்ற உடல் உபாதைகள் சிகிச்சை இல்லாமலே குறைந்து அல்லது மறைந்து போனதா, கலந்துரையாடலின் பின் ஒருவர் எவ்வாறு உணர்ந்தார், நல்ல உணர்வா, விரும்பத்தகாத உணர்வா அல்லது எந்த உணர்வும் இல்லையா? ஆன்மீக பயிற்சியின் நோக்கம் ஆனந்தம் அடைவது என்பதால் நாம் படிப்படியாக அதிகமான ஆனந்தத்தை சத்சங்கத்தில் அனுபவிக்க வேண்டும். இது நடைபெறாவிட்டால் ஒருவர் தான் எதனை சரிவர செய்யவில்லை என்று ஆய்ந்தறிந்து மீண்டும் இவ்வாறு ஏற்படாது தடுக்க அதற்கேற்ப நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதேபோல் ஒருவர் ஆனந்தத்தை அனுபவித்தால் என்ன முயற்சிகள் இதற்கு உதவியது என ஆராய்ந்து எதிர்காலத்திலும் அவற்றில் கவனத்தை செலுத்த வேண்டும்.

4. சக ஸாதகருடனான சத்சங்கம்

இது நேருக்கு நேர், தொலைபேசி மூலம் அல்லது இணையம் மூலமோ நடைபெறலாம். SSRF தொடர்ச்சியான சத்சங்கங்களை ஆங்கிலத்திலும் பிற ஐரோப்பிய மொழிகளிலும் உலகம் முழுவதும் இருக்கும் ஸாதகர்களுக்காக நடத்தி வருகிறது. உலகின் வெவ்வேறு பாகத்தில் இருந்தும் ஸாதகர்கள்  தொடர்பு கொள்வதால் ஸ்கைப் (Skype) போன்ற தொடர்பு சாதனம் மூலம் சத்சங்கம் நடத்தப்படுகிறது. இந்த சத்சங்கங்களில் ஆன்மீக விஷயமொன்று கலந்துரையாடப்படுவதுடன் ஆன்மீக பயிற்சியில் உள்ள சந்தேகங்களும் தெளிவு படுத்தப்படுகின்றன.

ஆன்மீகத்தை பற்றி சக சாதகருடன் உரையாடுவது கூட ஒருவகை சத்சங்கமே.

இவ்வாறான சத்சங்கங்களை கலந்துரையாடும் தலைப்பிற்கு ஏற்ப மேலும் வகைப்படுத்தலாம்.

  • தகவல் தரும் சத்சங்கம் – ஆன்மீகத்தை பற்றிய விஷயங்கள் கற்று தரப்படுவதுடன் கலந்துரையாடப்படுகிறது.
  • வழிநடத்தல் சத்சங்கம் – தனிப்பட்ட ஆன்மீக பயிற்சி தொடர்பானதும் ஆன்மீக பிரச்சாரம் செய்வது தொடர்பாகவும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது.
  • ஆன்மீக உணர்வு சத்சங்கம் – கலந்து கொள்வோரின் ஆன்மீக உணர்வை அதிகரிக்க நடத்தப்படுகிறது

5. மகான்களால் எழுதப்பட்ட புனித நூல்களை படித்தல்

இவ்வகையான சத்சங்கத்தில் புத்தகத்தில் உள்ள வார்த்தைகளில் இருந்து வெளிப்படும் தெய்வீக உணர்வினை (சைதன்யம்) படிப்பவர் பெறுகிறார். இது ஏனெனில் எழுதியவர் ஒரு மகானாகவோ அல்லது ஆன்மீகத்தில் முதிர்ச்சியடைந்த ஒரு ஆத்மாவாகவோ இருப்பதால் அவர்களின் சங்கல்பம் அவர்கள் எழுதிய வார்த்தைகளின் வழியாக செயற்படுகிறது. SSRF இல் ஆன்மீக பயிற்சி செய்பவர்கள் சிலர் தமக்கு ஏற்பட்ட ஆன்மீக அனுபவம் பற்றி கூறுவது யாதெனில் தமக்கு அருகாமையில் மகானால் எழுதப்பட்ட நூல் ஒன்று வெறுமனே காணப்படும் போதே அவர்களுக்கு ஆன்மீக நிவாரணம் ஏற்படுகின்றது என்பதாகும்.

6. மற்றைய வகை சத்சங்கங்கள்

  • ஆன்மீக சொற்பொழிவுகளுக்கு செல்லுதல்
  • தேவாலயம், கோவில் மற்றும் மகான்களின் சமாதி போன்ற புனித ஸ்தலங்களுக்கு செல்லுதல்
  • யாத்திரை ஸ்தலத்தில் தங்குதல்
  • பக்தி பாடல்கள் மற்றும் ஸ்தோத்திரங்களை பாடுவதும் கேட்பதும்

7. முடிவுரை

இப்பொழுது நமக்கு எவ்வாறெல்லாம் சத்தியத்தின் சங்கத்தில் நிலைத்திருப்பது என்பது பற்றியும், அது நமது ஆன்மீக முன்னேற்றத்தில் வகிக்கும் முக்கியத்துவத்தை பற்றியும் தெரிந்து கொண்டோம். ஆகையினால் நாள் முழுவதும் சத்சங்கத்தில் எவ்வாறு இருப்பது என முயற்சி செய்து அதன் பலனை பெற வேண்டும்.