மகிழ்ச்சியைப் பற்றி

1.மகிழ்ச்சியை பற்றி

1.1 ஆரம்பதிலிருந்து துவங்குவோம்

ஒருவர் வாழ்வில் தன் தனிப்பட்ட குறிக்கோளை அடையாளம் காண்பதன் மூலம் தன் தேடல் பயணத்தை ஆரம்பிப்பது சுலபமாகிறது.

இன்று நாம் ஒரு துரிதமான வாழ்க்கை வாழ்கிறோம். நாம் கடந்த வாழ்க்கையை சற்று நிறுத்தி நிதானமாக ஒரு விரிவான பார்வையுடன் பார்ப்பது என்பது மிக அரிதாக உள்ளது.

வாழ்க்கையில் உங்கள் லட்சியம் என்ன?

உங்கள் லட்சியத்தை அடைவதற்கு குறுகிய கால மற்றும் நீண்டகால இலக்குகளை நீங்கள் வைத்திருக்கிறீர்களா?

இதுவரை நீங்கள் அமைத்த இலக்குகளை ஏதேனும் நிறைவேற்றினீர்களா?

அல்லது காலம் போக போக உங்கள் லட்சியம் மாறிவிட்டதா?

இந்த கட்டுரைகளை நீங்கள், உங்கள் வாழ்க்கையை  ஆழமாக ஆராய்வதற்கும் அதன் போக்கை பற்றி கேள்வி கேட்பதற்கும் பயன்படுத்தலாம்.

எந்த ஒரு மனிதனின் வாழ்க்கையின் முக்கிய நோக்கம் என்ன என்பதை ஆராய்வோம். நீங்கள் சுற்றும் முற்றும் பார்த்தால், நாம் எல்லோரும் வித்தியாசமாக இருப்பதை காணலாம், பல்வேறு பின்னணியில் இருந்து வருகிறோம், தனித்துவமான ஆளுமை இயல்புகள் நமக்கு உள்ளன, இருந்தாலும் நமக்குள் பொதுவான ஒரு அம்சமும் உள்ளது.

நம்பிக்கை, பாலினம், சமூக அல்லது நிதி நிலைப்பாடு இவற்றை எல்லாம் கடந்து ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கும் ஒரு பொதுவான எதிர்பார்ப்பு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதாகும். இந்த தேடலில் மனித இனம் மட்டும் தனியாக இல்லை. ஒவ்வொரு உயிரினமும், மிகச்சிறிய எறும்பிலிருந்து கம்பீரமான யானைவரை மகிழ்ச்சியைத் தேடுகிறது. உதாரணத்திற்கு ஒரு எறும்பை  எடுத்துக் கொள்வோம். அது ஒரு கஷ்டமான சூழ்நிலையிலிருந்து விலகிச் சென்று ஒரு மகிழ்வான பொருளை நோக்கி ஓடும். அதாவது நெருப்பிற்கு அருகில் வந்துவிட்டால் அது ஓடிவிடும், ஆனால் ஒரு சிறு சர்க்கரை குவியலை நோக்கி ஆவலுடன் நகரும்.

அதைப் பற்றி நாம் சிந்தித்தால், மகிழ்ச்சியான சூழல்களை நீடிப்பதற்காக நாம் எல்லோரும் எல்லா முயற்சிகளையும்  செய்கிறோம் அல்லவா? மகிழ்ச்சியை பெற கடினமாக உழைக்கவில்லை என்றாலும், குறைந்தபட்சம் விரும்பத்தகாத சூழ்நிலைகளைத் தவிர்க்க முயற்சிக்கிறோம். உதாரணத்திற்கு, நமக்கு விருப்பமான நிகழ்ச்சிகளைப் பார்த்து மகிழ்வதற்காக, காணொளி பழுதானால் சீக்கிரமாக அதை சரி செய்கிறோம்.