பாவங்களின்வகைகள்

Types of sins

இந்த கட்டுரையைப் புரிந்துகொள்ள, பின்வரும் கட்டுரையை நீங்கள் நன்கு படித்து அறிந்துகொள்ளும்படி நாங்கள் பரிந்துரைக்கிறோம்:

  • புண்ணியங்கள் மற்றும் பாவங்கள் என்றால் என்ன?

1. முன்னுரை

நாம் அனைவரும் நமது அன்றாட நடவடிக்கைகளின் போது உதாரணமாக, தரையைத் துடைக்கும் போது சில பூச்சிகளை கொல்வது, வேலை செய்யும் இடத்தில் மற்றவர்களிடம் கடுமையாகப் பேசுவது போன்ற பல்வேறு பாவச் செயல்களை நாள்தோறும் செய்கிறோம். பாவத்தின் எண்ணக்கருத்தை நன்கு புரிந்து கொள்ள, சில வகையான பாவங்களையும், அந்த பாவத்தின் விளைவு யாரை எதிர்கொள்கிறது என்பதையும் பார்ப்போம்.

2. பாவங்களின்வகைகள்

2.1 பாதிக்கப்பட்டவர்களைஅடிப்படையாகக்கொண்டபாவங்களின்வகைகள்

பாவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்பதைப் பொறுத்து, பின்வரும் அட்டவணையில் தனக்கும் பிறருக்கும் தீங்கு விளைவிக்கும் பாவங்கள் காட்டப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்டவர்களை அடிப்படையாகக் கொண்ட பாவங்களின் வகைகள்
தனக்குத்தானே தீங்கிழைத்துக்  கொள்வது  ஆன்மீகப்பயிற்சியில் தினசரி நடைமுறைகளை சரிவர செய்யாமல் இருப்பது.
ஞானேந்த்ரியங்கள் மற்றும் கர்மேந்த்ரியங்களைகட்டுக்குள்வைத்திருக்காமல் இருப்பது, அதாவது பல்வேறு ஆசைகள், காமம், கோபம் போன்றவற்றை கட்டுப்படுத்தாமல் இருப்பது.
மற்றவர்களுக்கு தீங்கு விளைவிப்பது அறியாமல் தீங்கு விளைவிப்பது, உதாரணமாக நீரை கொதிக்க வைக்கும் போதும், வீதியில் நடக்கும்போதும் நாம் அறியாமல் பல பூச்சிகளை அல்லது நுண்ணுயிர்களை கொன்றுவிடுகிறோம். (இது போன்ற தவிர்க்கமுடியாத பாவங்கள் மிகக்குறைவு, மேலும் தினசரி மேற்கொள்ளும் ஆன்மீகப்பயிற்சியின் மூலம் அதன் விளைவு ரத்துச்செய்யப்படுகிறது).
 அறிந்தே அல்லது வேண்டுமென்றே பிறருக்கு தீங்கு விளைவிப்பது

2.2 உடல், பேச்சுமற்றும்மனதைசார்ந்தபாவங்களின்வகைகள்

தனிமனிதன்  ஒருவன் தன் மனதில் பாவம் செய்ய முடிவெடுத்த பின், அதை வாய்மொழியாகவோ அல்லது உடல் ரீதியாக செயல்படுத்தலாம்.  பின்வரும் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளபடி மூன்று வழிகளில் ஒரு பாவச் செயலைச் செய்யலாம்.

உடல், பேச்சு மற்றும் மனதை சார்ந்த பாவங்களின் வகைகள்

உடல்ரீதியான பாவம் உடல்ரீதியாக செய்யும்  பாவங்கள், உதாரணமாக திருடுதல், ஒருவரைக் கொல்வது அல்லது விபச்சாரம் செய்தல்
வாய்மொழியால் செய்யக்கூடிய  பாவம் வாய்மொழியால் செய்யப்படும் பாவங்கள், உதாரணமாக பிறரை அவமதிக்கும் வகையில் பேசுதல், பொய் பேசுதல், அர்த்தமற்ற பேச்சு, தீங்கிழைக்கும் வகையில்(புண்படும் படி)பேசுதல்
மனோரீதியான பாவம் மனதளவில் செய்யக் கூடிய  பாவம், உதாரணமாக, செல்வந்தர்கள் மீது பொறாமை கொள்வது மற்றும் அவர்களின் செல்வத்தை அபகரிக்க நினைப்பதும் , பிறரைப் பற்றி தவறாக நினைப்பது, ( நமது கெட்ட  சிந்தனை அல்லது எண்ணம்  கஷ்டம் தரும் அதிர்வலைகளை உருவாக்கி அதன்மூலம் பிறருக்கு பாவம் செய்யத் தூண்டுகிறது. இது கண் திருஷ்டி செயல் முறையைப் போன்றது)

 

கண் திருஷ்டி செயல்முறைப் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, கண் திருஷ்டி பற்றிய எங்கள் கட்டுரையைப் பார்க்கவும்.

3. எண்ணங்களின்மூலம்நாம்பாவம்செய்யமுடியுமா?

கர்மா சித்தாந்தத்தின் வழி ஒரு நல்ல(புண்ணிய) செயலின் எண்ணத்தினால் புண்ணியங்கள் கூடுகின்றன.  அதே வேளையில், ஒரு பாவ எண்ணம் பாவத்தை விளைவிப்பதில்லை. உதாரணமாக, ஒரு வங்கியைக் கொள்ளையடிக்கும் எண்ணம் பாவத்தை விளைவிக்காது, ஆனால் அந்த எண்ணத்தை செயலாக்கம்  செய்வதனால் பாவம் விளைகிறது.  முந்தைய மனோரீதியான பாவத்தின் உதாரணத்தைப் போலல்லாமல், ஒரு எண்ணம்  மற்றவர்களுக்கு எந்த விதமான  தீய விளைவை ஏற்படுத்தவில்லை என்றால்,அது பாவம் ஆகாது.

இருப்பினும், ஒரு ஸாதகர் தனது கெட்ட எண்ணங்களாலும் பாவத்தைச் செய்கிறார். ஒரு ஸாதகரின் நோக்கம் தெய்வீக குணங்களை தன்னுள் வளர்த்துக் கொள்வதாகும் , அதற்குத் தேவையான அறிவையும் ஆற்றலையும் கடவுள் அருளுவதால், அவருக்குள் எழும் கெட்ட எண்ணங்கள்  கடவுளின் அருளை வீணாக்கிவிடும். இதற்கு ஒரு விதிவிலக்கு, ஒரு ஸாதகருக்குக் கட்டுப்பாடற்ற எண்ணங்கள் ஏற்பட்டால்  அவர் தீய சக்தியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கலாம் அல்லது பீடிக்கப்பட்டிருக்கலாம்.

4. ஒருபாவத்தின்விளைவைஎதிர்கொள்பவர்யார்?

4.1 பாவத்திற்குஉடந்தையாகஇருத்தல்

நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, உடல் ரீதியாகவோ, வாய்மொழியாகவோ அல்லது மனரீதியாகவோ பாவத்தைத் தூண்டும் தனிநபர் அந்த பாவத்திற்கு உண்டான பங்கைப் பெறுகிறார். தாங்கள் செய்த பாவத்திற்கு பங்குதாரர் ஆகிறார்கள் . இன்றைய சட்டத்திலும் இதே போன்ற விதிகள் உள்ளன – ஒரு கொலைக்கு உதவிய நபரும் குற்றவாளியாகும்.

உண்மையில், கொடிய பாவியுடனான ஒரு உரையாடல், அவனது ஸ்பரிசம், சகவாசம், உணவு மற்றும் படுக்கையைபப் பகிர்ந்துகொள்வது மற்றும் அவனுடன் பயணம் மேற்கொள்வது போன்ற செயல்களின் மூலம் பாவத்தின் பங்கை அவனுடன் பயணிப்பவர்களும் பெறுகிறார்கள்.

சத்சங்கம் என்பது பூரண சத்தியமான இறைவனின் சங்கம் ஆகும். குசங்கம் என்பது வாய்மையல்லாத சங்கம் ஆகும். குசாங்க சூழல் நமக்குள் தவறான எண்ணங்களை உருவாக்குகிறது அல்லது அதிகரிக்கிறது மற்றும் நமது ஆன்மீக வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கலாம். அதனால் தான் என்னவோ  நமக்கு நெருக்கமானவர்களை  ‘கெட்ட சகவாசத்திலிருந்து விலகி இரு’ என்று நாம் எச்சரிப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

4.2 பாவத்தின்விரிவாக்கம்

மத்ஸ்யபுராணம் என்ற புனித நூல், பாவம் ஒரு தொற்று அல்லது பரம்பரை நோய் போன்றது என்று கூறுகிறது. ஒரு பரம்பரை நோய் வெளிப்படையாகத் தெரிவதில்லை, அதுபோல பாவம் அதை செய்தவனை மெதுவாகத் தாக்கத் தொடங்கி, அவனுடைய வேர்வரை சென்று அழிக்கிறது. பாவம் செய்தவர்கள், அதற்குண்டான பிராயச்சித்தம் மேற்கொள்ளவில்லை என்றால், அவர்களுடைய மகனோ அல்லது பேரனோ தாக்கத்திற்கு உள்ளாவார்கள்.  இதன்  வழியில் பாவம் மூன்று தலைமுறைகள் வரை அதன் விளைவைக் காட்டுகிறது. ஆகவே ஒருவர் தன் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும், சந்ததியினருக்கும் தனது பாவத்தால் எந்த தீயவிளைவும் ஏற்படாமல் இருக்க பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.

பாவத்தின் விளைவுகளை கூட்டாக எதிர்கொள்ளும் பல நிகழ்வுகளும் உள்ளன, உதாரணமாக  ஒரு கணவன் மற்றும் மனைவி, ஒரு நிறுவன இயக்குனர் மற்றும் நிறுவன ஊழியர்கள் போன்றவை ஆகும்.

4.3 கூட்டுப்பாவம்

விதியை வெல்வதற்கும், தங்களுடன் சேர்ந்து முழு படைப்பையும், மகிழ்விக்கும் திறன் மனிதர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், தனிப்பட்ட சுயநல நோக்கங்களை நிறைவேற்றுதல், அப்பாவி மக்களுக்கு அநீதி இழைத்தல், மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துதல் போன்ற காரணங்களுக்காக, இந்த திறனைப் பயன்படுத்துகின்றனர். இதன் விளைவாக, சமூகம் கூட்டு விதியால் மாசுபடுகிறது.

இது முழு படைப்பையும் பாதிக்கிறது மற்றும் இயற்கை சுழற்சியின் சமநிலையை சீர்குலைக்கிறது. இதன் விளைவாக, வெள்ளம், வறட்சி, பூகம்பம், போர் போன்ற பேரழிவுகள் மனித இனத்திற்கு ஏற்படுகின்றன. இந்தப் பேரழிவுகள் கண்ணுக்குத் தெரிந்தாலும், உண்மையான அடிப்படைக் காரணங்கள் கண்களுக்குத் தெரிவதில்லை. இத்தகைய கூட்டு விதி பூமிக்கு வரும்போது, தீயவர்களுடன் சேர்ந்து, நல்லொழுக்கமுள்ள மக்களும், பேரழிவுகளின் விளைவுகளை அனுபவிக்க வேண்டியுள்ளது.

5. சுருக்கம்- பாவத்தின்வகைகள்

பாவத்தின் விளைவுகள் நம்மைப் பாதித்து மற்றவர்களுக்கும் தீங்கு விளைவிக்கலாம் என்பதால் பாவம் செய்வதைத் தவிர்ப்பது முக்கியம். நாம் நெருக்கமாக இருப்பவர்களின் இயல்பு மற்றும் செயல்களைப் புரிந்துகொண்டு சமநிலையுடன் இருத்தல் மிகவும் முக்கியமானது, ஏனெனில் அவர்கள் செய்யும் மோசமான பாவத்தை கண்டும் காணாமல் இருந்தால்,அந்த பாவத்தில் நாமும் பங்கு பெறுகிறோம்.

வாழ்க்கையில் இன்பத்தை விட துன்பம் தான் நமக்கு அதிகம் கற்றுத்தரும் என்ற வாக்கியத்திற்கு ஒப்ப, எப்போதெல்லாம் விதியினால் பாதிப்புக்கு உள்ளாகிறோமோ அப்போதெல்லாம் செய்த  பாவத்தின் விளைவு தான் இது என்ற கண்ணோட்டத்தை நாம் வைத்திருக்க முயற்சி செய்யலாம். விதியை எதிர்கொள்வதே ஆன்மீகப்பயிற்சி என்ற மனப்பான்மையை நாம் வளர்த்துக் கொண்டால், விரைவான ஆன்மீக முன்னேற்றம் சாத்தியமாகும்.

ஆன்மீகப்பயிற்சி நமது விதியை மாற்றவல்லது மற்றும் அதை எதிர்கொள்ளும் வலிமையை நமக்கு அளிக்கிறது.