குழந்தை போன்ற ஆன்மீக உணர்வால் வெளிப்பட்டுள்ள பக்தி சித்திரங்கள்

1. ஆன்மீக உணர்வின் உந்துதலில் வரையப்பட்ட தெய்வீக சித்திரங்கள்

ஒருவரின் வாழ்வில் அன்றாட நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றிலும் இறைவனின் இருப்பை உணர்தல் என்பது ஆன்மீக உணர்வு என்று கூறப்படுகிறது. சாதாரணமாக, நம் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் நம்முடைய இருப்பையே நாம் உணர்கிறோம். நான் என்னும் உணர்வு நம் ஆழ்மனதில் நன்கு பதிந்திருப்பதால் நாம் அந்த ‘நான்’ என்ற உணர்வுடனேயே உலகரீதியான எல்லா சம்பவங்களையும் பார்க்கிறோம். இருந்தாலும் தொடர்ந்த ஆன்மீக பயிற்சியினால் ஒரு புது விழிப்புணர்வு நம் உள்ளத்தில் ஏற்படுகிறது. சிறிது சிறிதாக இறைவன் எங்கும் நிறைந்திருப்பது நமக்கு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் புரிய வருகிறது. நாம் நமது வாழ்க்கையில் ஒவ்வொரு செயலையும் எங்கும் நிறைந்த இறைவனின் சாந்நித்யத்தை எப்பொழுது உணர்ந்து செய்கிறோமோ அப்பொழுது நம்மிடம் ஆன்மீக உணர்வு நிறைந்துள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.

இக்கட்டுரை சக ஸாதகர்களால்  உமா அக்கா என்று அன்புடன் அழைக்கப்படும் திருமதி உமா ரவிசந்திரன் அவர்களின் ஒருவித பக்தி உணர்வை வெளிப்படுத்துகிறது. பாரத நாட்டை சேர்ந்த உமா அக்கா தனது தொடர்ந்த ஆன்மீக பயிற்சியினால் எப்பொழுதும் ஆன்மீக உணர்வு தன்னுள் நிரம்பப் பெற்றவராக விளங்குகிறார். அவருக்கு சித்திரம் வரைவதில் எந்த விதமான முறையான பயிற்சி இல்லாவிட்டாலும் தான் எப்பொழுதும் கிருஷ்ணனுடன் இருப்பது போன்ற ஆன்மீக பக்தி உணர்வை அவர் வரைந்த ஓவியங்களில் வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கு ஸ்ரீகிருஷ்ணனிடம் உள்ள ஆழ்ந்த பக்தி உணர்வால் அவர் வரைந்துள்ள சித்திரங்களினின்றும் தெய்வீக உயிரோட்டம் (அதாவது சைதன்யம்) வெளிப்படுகிறது. அதன் காரணமாக அந்த ஓவியங்களை பார்வையிடும் பார்வை யாளர்களுக்கு இறைபக்தியின் ஆனந்த உணர்வை நல்கும் ஒரு பொக்கிஷமாக இவை திகழ்கின்றன.

பல வகைப்பட்ட ஆன்மீக உணர்வுகளின் உதாரணங்கள் :

  • வாத்ஸல்யபாவம் – இது ஒரு தாயின் அன்பை ஒத்த ஆன்மீக உணர்வு . அதாவது இது யசோதை கிருஷ்ணனிடம் காட்டிய அன்பு.
  • தாஸ்யபாவம் – இது இறைவனுக்கு பணியாளாக இருந்து தொண்டு செய்வது .
  • சக்யபாவம் – இது இறைவனே எனது தோழன் என்ற ஆன்மீக உணர்வைக் கொள்வது.

இதில் உமா அக்காவினுடைய பக்தி உணர்வு ‘பாலக பக்தி’ என்ற வகையை சார்ந்தது. அதாவது ஒரு குழந்தையினுடைய பக்தி உணர்வு. இந்த வகையான ஆன்மீக உணர்வால் ஒரு ஸாதகர், ஒரு குழந்தை தனது பெற்றோரிடம் எவ்வாறு வெகுளியான தூய்மையான அன்பை செலுத்துமோ அந்த வகையில் இறைவனிடம் அன்பு கொள்கிறார். இந்த வகையில் மேலோங்கியிருக்கும் உணர்வு யாதெனில் ‘நான் இறைவனின் சிறு குழந்தை; இறைவன் மட்டுமே எனக்கு தாயும், தந்தையும், நண்பனும், பாதுகாப்பாளனும் ஆவான்’. தான் பகவான் ஸ்ரீகிருஷ்ணனின் குழந்தை என்ற ஆன்மீக உணர்வு உமா அக்காவின் மனதை நிறைத்துள்ளது. இந்த வகையான ஆன்மீக உணர்வில் அவர் தன்னை ஒரு மூன்று வயது சிறுமியாக நினைத்துக் கொண்டு ஆன்மீக உணர்வு செறிந்த பல வகையான சித்திரங்களை வரைந்துள்ளார்.

‘ஒரு ஓவியம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமானமானது’, என்ற தொடரின் பொருள் என்னவெனில் ஆயிரம் வார்த்தைகளை உபயோகித்து வெளியிடும் ஒரு கருத்தை ஒரே ஒரு ஓவியத்தின் மூலம் வெளிப்படுத்தலாம் என்பதே ஆகும். ஸ்ரீகிருஷ்ணனிடம் ‘பாலக பக்தி’ உணர்வு கொண்ட திருமதி உமா ரவிசந்திரன் வரைந்த ஓவியங்கள் மேலே குறிப்பிட்ட தொடருக்கு ஓரளவு பொருந்துவனவாகும். ‘நான் ஏன் ஓரளவு என்ற வார்த்தையை உபயோகித்தேன் என்றால் ஆயிரம் வார்த்தைகளை உபயோகித்தாலும் அவரின் ஓவியத்திலுள்ள ‘பாலக பக்தி’ உணர்வை வர்ணிக்க இயலாது. ஆன்மீகத்தில் வார்த்தைகளுக்கு 2% பங்கே உள்ளது. 98% முக்கியத்துவம் அனுபவத்திற்கே வழங்கப்பட்டுள்ளது.’

– பராத்பர குரு டாக்டர் ஆடவலே (14 செப்டம்பர் 2012)

2. பக்தி சித்திரங்களின் கண்காட்சி

சித்திரங்களை பார்வையிட வேண்டிய கண்ணோட்டத்திற்கான ஆலோசனைகள் :

  • ஒவ்வொரு ஓவியத்திற்கு அடியிலும் கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புக்களை படிக்கும் முன் உங்கள் மனதை அந்த ஓவியத்தில் லயிக்க விட்டு அதிலிருந்து வெளிப்படும் தெய்வீக அதிர்வலைகள் உங்களை நிறைத்து இறைவனின் தனிப்பட்ட செய்தியை உங்களுக்கு வழங்கும்படி செய்யுங்கள். ஒவ்வொரு ஓவியமும் நீங்கள் இறைவனிடம் நெருக்கமான நம்பிக்கைக்கு உகந்த உறவினை ஏற்படுத்திக் கொள்ள இறைவன் உங்களுக்கு விடுக்கும் அழைப்பாகும். அதன் மூலம் இறைவனிடம் நம்மை ஒப்புவித்து சரணடையும் சக்தி நம் மனதிற்கு கிடைக்கிறது.
  • ஒவ்வொரு சித்திரத்திலும் இருக்கும் மூன்று வயது சிறுமி, இறைவனிடம் ஒரு குழந்தைக்கு ஏற்படும் அன்பின் சின்னமாக விளங்குவதால் அச்சிறுமி ‘குட்டி உமா’ என்று அழைக்கப்பட்டுள்ளது.

3. இந்த தெய்வீக சித்திரங்களை வெளியிட்டிருப்பதன் பின்னுள்ள முக்கியமான செய்தி

இறைவனின் தெய்வீக மதுர பாவத்தினால் ஈர்க்கப்பட்டு அதிலேயே லயிக்கும் தன்மை ஏற்பட்டால் ஒழிய நமது பக்தி பரிபூரணம் அடையாது. ஒவ்வொரு ஓவியமும் ஸ்ரீகிருஷ்ணனின் பாதங்களில் சமர்ப்பிக்கப்படும் மென்மலரென நம்மால் உணர முடிகிறது. அதன் காரணமாக உன்னத தெய்வீக ஓவியங்களான இவைகளை காணும் சிலர் தாங்களும் கிருஷ்ண பக்தி பிரவாஹத்தில் நனைந்து அவனது புனித பாதங்களில் சரணடையும் ஆர்வத்தை அடைவார்கள் என எதிர்பார்க்கலாம். இத்தகைய ஓவியங்களுக்கு புத்திபூர்வமாக செயல்படும் சமூக மட்டத்திலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களது எண்ணங்களிலும் செயல்பாடுகளிலும் ஒரு மாற்றத்தை ஏறபடுத்தும் சக்தி இருக்கிறது. இந்த வலைதளத்தில் இந்த சித்திரங்களை வெளியிடுவதன் நோக்கம் இதைப் பார்க்கும் நேயர்கள் ஆன்மீக பயிற்சியை ஆரம்பிக்க வேண்டும் அல்லது மேலும் தொடர்ந்து  செய்ய ஊக்கம் பெற வேண்டும் என்பதே ஆகும்.