ஸாதகர் என்பவர் யார்?

1. முன்னுரை

ஆன்மீக ஆராய்ச்சி மூலம் நாம் ஏன் பிறந்தோம் என்பதற்கான இரு காரணங்களை தெரிந்து கொண்டுள்ளோம்:

  1. விதியை அனுபவிப்பதற்கு
  2. ஆன்மீக முன்னேற்றம் அடைவதற்கு

விதியை அனுபவிப்பது என்பது பெரும்பாலும் நம் கட்டுப்பாட்டிற்கு மீறிய ஒன்று; ஆனால் ஆன்மீக முன்னேற்றம் ஏற்பட நாம் சுய சிந்தனையோடு முயற்சிக்க முடியும். வாழ்வில் ஒரு ஆன்மீக லட்சியம் மற்றும் சில குறிப்பிட்ட குணங்களை கொண்டிருக்கும்போது இம்முயற்சியை நம்மால் செய்ய முடிகிறது. இக்கட்டுரையில் ஸாதகர் என்பவர் யார், ஒரு ஸாதகரின் ஆன்மீக பயணத்தில் எந்த குணங்கள் உபயோகமாக உள்ளன மற்றும் இக்குணங்களை எவ்வாறு வளர்ப்பது போன்ற விஷயங்கள் விளக்கப்பட்டுள்ளன.

2. ஸாதகர் என்பவர் யார்?

ஸாதகர் என்பவர் :

  • ஆன்மீக முன்னேற்றத்திற்காக தினமும் உண்மையாக நேர்மையாக முயற்சிப்பவர்
  • ஆன்மீக வளர்ச்சியடைய வேண்டும் என்ற தீராத தாகம் கொண்டவர்
  • தொடர்ந்து ஆன்மீக பயிற்சியை தரத்திலும் அளவிலும் உயர்த்த முயற்சிப்பவர்

ஆன்மீக முன்னேற்றம் அடைய விரும்பும் ஸாதகரின் முயற்சிகள் ஆன்மீக பயிற்சியின் ஆறு அடிப்படை தத்துவங்களுடன்  ஒத்துப் போவது மிகவும் முக்கியம்.

3. ஸாதகர் அல்லாதவருக்கும் ஸாதகருக்கும் உள்ள வித்தியாசம்

மனதை உள்முகப்படுத்துவதும் இறைவனின் மீது கவனத்தை வைப்பதும் ஒரு உண்மையான ஸாதகருக்கு தேவையான குணங்கள் ஆகும். மனதை உள்முகப்படுத்துவதால் படிப்படியாக ஐம்புலன்கள், மனம் மற்றும்  புத்தியுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வது  குறைகிறது. ஸாதகர் அல்லாதவர், தங்களை ஐம்புலன்கள், மனம் மற்றும் புத்தியுடன் அடையாளப்படுத்திக் கொள்ள அதிகம் முயற்சிப்பர். கீழ்க்கண்ட அட்டவணையில் ஸாதகருக்கும் ஸாதகர் அல்லாதவருக்கும் உள்ள வித்தியாசங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஸாதகர் அல்லாதவர் ஸாதகர்
உலக முன்னேற்றம் அடைவதே முக்கிய லட்சியம் ஆன்மீக முன்னேற்றம் அடைவதே முக்கிய லட்சியம்
உடல், மனம் மற்றும் புத்தியை மேம்படுத்த முயலுதல் உடல், மனம் மற்றும் புத்தியை இல்லாமல் போக முயற்சித்தல்
வெளிமுக பயணம் உள்முக பயணம்
பற்று, கர்வம், கோவம் போன்ற கெட்ட குணங்களை வளர்த்துக் கொள்ளுதல் ஆன்மீக அன்பு, மனதை உள்முகப்படுத்துதல், ஆன்மீக உணர்வு போன்ற தெய்வீக குணங்களை வளர்த்துக் கொள்ளுதல்
‘நான் செய்கிறேன்’ என்ற உணர்வு ‘கடவுள் செய்கிறார்’ என்ற உணர்வு

4. ஒரு ஸாதகரின் குணங்கள்

ஒரு ஸாதகரிடம் சில அடிப்படை குணங்கள் உள்ளன. இக்குணங்கள் அவரின் ஆன்மீக பயிற்சிக்கு பின்வருமாறு உதவுகிறது.

ஸாதகர் என்பவர் யார்?

இதோடு கூட ஒரு நல்ல ஸாதகரிடம் மேலும் சில குணங்கள் உள்ளன. அவைகளில் சிலவற்றை கீழே கொடுத்துள்ளோம்.

  • பிறப்பு இறப்பு சக்கர சுழற்சியிலிருந்து விடுபட்டு மோக்ஷம் அடைவதில் தீவிர ஆர்வம்
  • ஆளுமை குறைகளைக் களைந்து தெய்வீக குணங்களை வளர்த்துக் கொள்வதற்காக தன்னை மாற்றிக் கொள்வதில் ஆர்வம்
  • ஆன்மீக கண்ணோட்டத்தில் எல்லாவற்றையும் பார்வையிடுதல்
  • சத்சேவையில் ஈடுபடும்போது இறைவனை அல்லது குருவை நினைப்பதில் கவனம் செலுத்துதல்
  • ஒவ்வொரு செயலையும் இறைவனே என் மூலமாக செய்கிறார் என்ற உணர்வுடன் இறைவனிடம் சமர்ப்பித்தல்
  • ஒவ்வொரு காரியத்தையும் பரிபூரணமாக செய்ய முயற்சித்தல்
  • ஒவ்வொரு செயலையும் ஆன்மீக பயிற்சியாக செய்வதுடன் மற்றவரையும் இவ்வாறு செய்யும்படி ஊக்குவித்தல்
  • இறைவனின் படைப்புகள் அனைத்தின் மீதும் அன்பு செலுத்துதல்

ஸாதகர் ஆன்மீக முன்னேற்றம் அடையும்போது இந்த தெய்வீக குணங்களை மென்மேலும் தமக்குள் கொண்டு வருகின்றனர். ஒரு சிஷ்யன் இத்தகைய பல குணங்களை தன் ஒவ்வொரு செயலிலும் வெளிப்படுத்துகிறான். 

5. ஸாதகருக்குரிய குணங்களை எவ்வாறு வளர்த்துக் கொள்வது?

ஒரு மேம்பட்ட ஆன்மீக ஸாதகராக, மனிதராக மாற வேண்டும் என்ற உள்ளார்ந்த ஆர்வம் இருக்கும்போது எல்லா முயற்சிகளும் எளிதாக நடக்கின்றன. ஆன்மீகத்தில், ஆன்மீக முன்னேற்றம் அடைய வேண்டும் என்கின்ற ஆர்வம் 80% முக்கியத்துவம் வாய்ந்தது.

தினசரி வாழ்வில், அலுவலகத்தில் மற்றும் வீட்டில் ஸாதகருக்குரிய குணங்களைப் பெற எவ்வாறு முயற்சிப்பது என்பது பற்றிய படிப்படியான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • தற்போது பயின்று வரும் ஆன்மீக பயிற்சியை தரத்திலும் அளவிலும் உயர்த்த தொடர்ந்து முயல்வது. உதாரணத்திற்கு, நாம் ஒரு நாளில் நம் அன்றாட வேலைகளுடன் கூட 2 மணி நேரம் நாமஜபம் செய்கிறோம் என்றால், அடுத்த மாதம் 3 மணி நேரம் செய்ய முயற்சிப்பது, அதற்கடுத்த மாதத்தில் 4 மணி நேரம் செய்ய முயற்சிப்பது போன்றவை.
  • மற்றவரிடம் உள்ள குணங்களை கூர்ந்து கவனித்து அவற்றை நமக்குள் கொண்டு வர முயற்சித்தல். அதாவது ஒழுங்கு, நேரம் தவறாமை போன்ற குணங்கள். உதாரணத்திற்கு நம் நண்பர், எப்பொழுதும் நம்மை சந்திக்கும்போது நேரத்தை கடைபிடிக்கிறார் என்றால் நாம் நம்மையே கேள்வி கேட்டுக் கொள்ளலாம், நாம் சரியான நேரத்திற்கு கூட்டங்களில் பங்கெடுத்து கொள்கிறோமா, நேரத்தை கடைபிடிக்க முயல்கிறோமா என்று.
  • சந்தர்ப்ப சூழ்நிலைகளிலிருந்து கற்றுக் கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுதல். உதாரணத்திற்கு, ஒரு சக ஊழியர் நம் மீது எப்பொழுதும் கோவம் கொள்கிறார் என்றால், அவரிடம் பதிலுக்கு கோவமாக பேசுவதை விடுத்து அமைதியாக இருக்க முயற்சிப்பது, அவருக்கு எவ்வாறு உதவலாம் என யோசிப்பது, அந்த சம்பவத்தின் மூலம் எதிர்பார்ப்பில்லாத ஆன்மீக அன்பை மற்றவர் மீது செலுத்துவதே தெய்வீக குணம் என்ற ஆன்மீக கண்ணோட்டத்தை கொள்வது போன்றவை.

மேற்கூறிய குறிப்புகளை பயிற்சி செய்வதன் மூலம் நமக்குள் ஸாதகருக்குரிய குணங்களை வளர்த்துக் கொள்ள முடியும். ஒன்றை நாம் கவனத்தில் இருத்த வேண்டும், ஸாதகராக இருப்பது என்பது ஒரு அந்தஸ்து அன்று, மாறாக நம் அன்றாட வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய மனப்பான்மை. 

6. முடிவுரை

ஸாதகருக்குரிய குணங்களை வளர்த்துக் கொள்ளும்போது ஆன்மீக முன்னேற்றம் விரைவில் ஏற்படுகிறது. நம் ஆன்மீக பயணமும் சுமுகமாக  நடக்கிறது, ஆனந்தத்தை அனுபவிக்க முடிகிறது.

ஏதாவது ஒரு ஆன்மீக வழியை 20, 30 வருடங்களாக உண்மையாக பின்பற்றியும் போதிய ஆன்மீக முன்னேற்றமடையாத  பலரை நாம் சந்திக்கிறோம். இதைத் தவிர்ப்பதற்கு ஸாதகருக்குரிய குணங்களை வளர்த்துக் கொள்வதோடு கூட ஆன்மீகத்தின் ஆறு அடிப்படை தத்துவங்களுக்கேற்ப ஆன்மீக பயிற்சியை செய்வதற்கு நாம் பரிந்துரைக்கிறோம்.

ஸாதகர்களே, விரைவாக செயல்படுங்கள், உங்களின் மோக்ஷம் உங்களின் கைகளில்.பராத்பர குரு டாக்டர் ஆடவலே