1-tamil_l_what-are-human-beings-made-of

1. மனிதர்கள் எவற்றால் ஆக்கப்பட்டுள்ளார்கள் என்பது பற்றிய ஒரு அறிமுகம்

இந்த கட்டுரையில் மனித உடலின் அமைப்பு மற்றும் சூட்சும தேஹங்கள் பற்றிய விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன. மனித உடலைப் பற்றி நவீன விஞ்ஞானம் ஆழ்ந்து ஆய்வு செய்துள்ளது. இருந்தாலும் மனித இருப்பின் மற்ற அம்சங்களைப் பற்றிய ஞானம் விஞ்ஞானத்தில் மிகக் குறைவே. உதாரணத்திற்கு மனித மனம் மற்றும் புத்தியைப் பற்றிய ஞானம் மனித உடலளவில் நின்று போகிறது. ஆனால் ஆன்மீகம் பூரண மனித இருப்புப் பற்றி ஆழமாக ஆய்வு செய்துள்ளது.

2. ஆன்மீகத்தின்படி மனிதர்கள் எவற்றால் ஆக்கப்பட்டுள்ளார்கள்?

உயிருள்ள ஒரு மனிதனுக்கு கீழ்கண்ட தேஹங்கள் உள்ளன.

  1. ஸ்தூல தேஹம் அல்லது உடல்
  2. பிராண தேஹம் அல்லது உயிர்
  3. மனோ தேஹம் அல்லது மனம்
  4. காரண தேஹம் அல்லது புத்தி
  5. மஹாகாரண தேஹம் அல்லது சூட்சும அகம்பாவம்
  6. ஆத்மா அல்லது இறை தத்துவம்

வரக்கூடிய தலைப்புகளில் இந்த தேஹங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

3.  ஸ்தூல தேஹம் அல்லது உடல்

நவீன விஞ்ஞானத்திற்கு மிகப் பரிச்சயமான தேஹம் இதுவே. இது எலும்புக்கூடு, தசைகள், திசுக்கள்,  உறுப்புகள், ரத்தம், பஞ்சேந்த்ரியங்கள் போன்றவற்றை உள்ளடக்கியது.

4. பிராண தேஹம் அல்லது உயிர்

ஸ்தூல தேஹமும் மனோ தேஹமும் செயல்பட தேவையான பிராண சக்தியை வழங்குவது இதுவே. பிராண சக்தி ஐந்து வகையாக உள்ளன.

  • பிராண: சுவாசத்தை உள்ளிழுப்பதற்கு தேவையான சக்தி
  • உதான: சுவாசத்தை வெளியே விடுவதற்கும் பேச்சிற்கும் தேவையான சக்தி
  • சமான: வயிறும் குடலும் இயங்குவதற்கு தேவையான சக்தி
  • வியான: உடலின் தன்னிச்சையான மற்றும் தன்னிச்சையில்லாத செயல்களுக்கு தேவையான சக்தி
  • அபான: மல, மூத்திரங்களை வெளியேற்றுதல், விந்து வெளியேற்றுதல் மற்றும் குழந்தைப் பிறப்பிற்கு தேவையான சக்தி

இறப்பின்போது பிராண சக்தி மறுபடியும் பிரபஞ்சத்தில் விடுவிக்கப்படுகிறது; அத்துடன் சூட்சும தேஹத்திற்கு, அதன் முன்னிருக்கும் பயணத்திற்கு தேவையான உந்து சக்தியைத் தருகிறது.

5. மனோ தேஹம் அல்லது மனம்

மனோ தேஹம் என்பது நமது உணர்வுகள், எண்ணங்கள் மற்றும் ஆசைகளின் இருப்பிடமாக திகழ்கிறது. இந்தப் பிறப்பிலும் முந்தைய பிறப்புகளிலும் சேர்த்து வைத்துள்ள எண்ணற்ற எண்ணப்பதிவுகளைக் கொண்டது இது.  இதை மூன்று பாகங்களாகப் பிரிக்கலாம்.

  • வெளிமனம்: நாம் அறியக்கூடிய எண்ணங்களையும் உணர்வுகளையும் கொண்ட பகுதி  இது.
  • ஆழ்மனம்: இந்தப் பிறப்பில் நம் விதியை முடிக்கத் தேவையான எல்லா எண்ணப்பதிவுகளையும் கொண்டது. வெளிப்புற உந்துதலாலேயோ அல்லது அது இல்லாமலேயோ அவ்வப்பொழுது ஆழ்மனதிலிருந்து எண்ணங்கள் வெளிமனத்திற்கு எழும்புகின்றன. உதாரணத்திற்கு ஒரு நாளின் போக்கில், குழந்தைப் பருவத்தில் நடந்த ஏதோ ஒரு சம்பவம் சம்பந்தமில்லாமல் மனதில் எழுவது.
  • அறியப்படாத ஆழ்மனம்: மனதின் இந்த அம்சம் நாம் முற்றிலும் அறியாதது ஆகும். நமது சஞ்சித கர்மாவுடன்  (நாம் சேர்த்து வைத்துள்ள ஒட்டுமொத்த கணக்கு) தொடர்புடைய எல்லா எண்ணப்பதிவுகளையும் இது கொண்டுள்ளது.ஆழ்மனமும் அறியப்படாத ஆழ்மனமும் சேர்ந்ததே ‘சித்தம்’ ஆகும்.

சில சமயம் மனோ தேஹத்தின் ஒரு அம்சத்தை நாம் ஆசைகளின் தேஹம் அல்லது ’வாஸனா தேஹம்’ என்றும் கூறுகிறோம். மனதின் இந்த அம்சத்தில் எல்லாஆசைகளின் எண்ணப்பதிவுகளும் அடங்கி உள்ளன.

மனதின் செயல்பாடு விஷயங்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ள ‘நாம் செய்யும் செயல்களை ஏன் செய்கிறோம்?’ என்ற கட்டுரையையும் அதே பெயரில் உள்ள மின்னஞ்சல் பாடமுறையை    படிக்கவும். மனோ தேஹத்துடன் சம்பந்தப்பட்ட உடல் உறுப்பு, மூளை ஆகும்.

6. காரண தேஹம் அல்லது புத்தி

முடிவெடுக்கும் செயல்பாடு மற்றும் பகுத்தறியும் திறனுடன் சம்பந்தப்பட்ட தேஹமே காரண தேஹம் அல்லது புத்தி ஆகும். காரண தேஹத்துடன் சம்பந்தப்பட்ட உடல் உறுப்பு, மூளை ஆகும்.

7. மஹாகாரண தேஹம் அல்லது சூட்சும அகம்பாவம்

மஹாகாரண தேஹம் அல்லது சூட்சும அகம்பாவம் என்பது அஞ்ஞானத்தின் இறுதி அடிச்சுவடு ஆகும். இது, நாம் கடவுளிடமிருந்து வேறுபட்டவர்கள் என்ற உணர்வே ஆகும்.

8. ஆத்மா அல்லது இறை தத்துவம்

நம்முள் இருக்கும் இறை தத்துவமே ஆத்மாவாகும். இதுவே நம் உண்மையான இயல்பு. சூட்சும தேஹங்களின் முக்கிய பாகம் இதுவே ஆகும். ‘சத்-சித்-ஆனந்த’ ஸ்வரூபமான இறைவனின் ஒரு துளியே இது.  ஆத்மா, வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளால் பாதிக்கப்படாமல் எப்பொழுதும் ஆனந்த நிலையிலேயே இருக்கும். மாயையான வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளை சாக்ஷி உணர்வோடு ஆத்மா பார்க்கிறது. மூன்று அடிப்படை தத்துவங்களுக்கு அப்பாற்பட்டது ஆத்மா. ஆனால் நம் ஸ்தூல மற்றும் சூட்சும தேஹங்கள் இந்த மூன்று அடிப்படை தத்துவங்களால் உருவாக்கப்பட்டுள்ளன.

9. சூட்சும தேஹம்

மரணத் தறுவாயில் நம் உடலை விட்டு வெளியேறும் உயிரின் கூறுகளே சூட்சும தேஹமாகும். இதில் மனோ தேஹம், காரண தேஹம், மஹாகாரண தேஹம் மற்றும் ஆத்மா உள்ளடக்கம். மரணத் தறுவாயில் மிச்சமிருப்பது நம் ஸ்தூல தேஹம் மட்டும்தான். உடலின் பிராண சக்தி பிரம்மாண்டத்தில் சேர்ந்து விடுகிறது.

சூட்சும தேஹத்தின் மற்ற சில அம்சங்கள்:

  • சூட்சும ஞானேந்த்ரியங்கள் : சூட்சும ஞானேந்த்ரியங்கள் என்பது சூட்சும தன்மையை உணரும் திறன் கொண்ட பஞ்ச இந்த்ரியங்களின் சூட்சும அம்சங்களை குறிக்கிறது. உதாரணத்திற்கு ஒரு அறையில் எந்த மலர்களும் இல்லாமலேயே மல்லிகை மலரின் வாசனையை நுகரும் சூட்சும திறன் ஒருவருக்கு இருக்கலாம்.  அதோடு அந்த வாசனையை மற்றவர்கள் நுகர முடியாமல் அந்த ஒருவருக்கு மட்டும் அந்தத் திறன் இருக்கலாம். இது இன்னும் விவரமாக விளக்கப்பட்டுள்ளது – ஆறாவது அறிவு என்றால் என்ன?  என்ற கட்டுரையை படித்துப் பார்க்கவும்.
  • சூட்சும கர்மேந்த்ரியங்கள் : சூட்சும கர்மேந்த்ரியங்கள் என்பது கைகள், நாக்கு போன்ற நம் ஸ்தூல இந்த்ரியங்களின் சூட்சும அம்சமாகும். எல்லா செயல்களுமே முதலில் நம் சூட்சும கர்மேந்த்ரியங்களால் ஆரம்பிக்கப்பட்டு பின் ஸ்தூல பரிமாணத்தில், ஸ்தூல கர்மேந்த்ரியங்கள் மூலமாக செய்யப்படுகின்றன.

10. அஞ்ஞானம்

ஆத்மாவை தவிர நம்முடைய மற்ற எல்லா தேஹங்களும் மாயையின் ஒரு அங்கமாகும். அதுவே அஞ்ஞானம் அல்லது அவித்யா. ஞானம் இல்லாத நிலையை இது குறிக்கிறது.  நாம் என்பது நம் ஸ்தூல உடல், மனம், புத்தி என நம்புகிறோம். சத்தியப் பொருளான ஆத்மாவே நாம் என்பதை மறக்கிறோம். இதுவே அஞ்ஞானமாகும்.

அஞ்ஞானமே நம் துக்கங்களுக்கெல்லாம் மூல காரணம். மனிதன், தன் செல்வம், வீடு, குடும்பம், நகரம், நாடு ஆகியவற்றில் பற்றுதல் வைக்கிறான். எந்த அளவிற்கு ஒருவர் மீது அல்லது ஒரு பொருளின் மீது பற்று உள்ளதோ அந்த அளவு நமக்கு துக்கம் வந்து சேரும்.  ஒரு நல்ல சமூக சேவகர் அல்லது மகானும் கூட முறையே சமூகத்தின் மீது அல்லது தன் சிஷ்யர்களிடம் பற்றுதல் வைக்கக் கூடும். நாம் ஒவ்வொருவரும் மிகப்பெரிய பற்றுதலை நம் உடல் மற்றும் மனதின் மீது வைக்கிறோம். ஒரு சிறிய அசௌகரியமோ அல்லது ஜுரமோ நம்மை வருத்தத்தில் ஆழ்த்துகிறது. அதனால் ஒவ்வொருவரும் தன் மீதுள்ள பற்றுதலை சிறிது சிறிதாக களைந்து, நோயையும் வாழ்க்கையின் ஓட்டத்தோடு ஏற்றுக் கொள்ள வேண்டும். நமக்கு ஏற்படும் மகிழ்ச்சியையும் துக்கத்தையும் முக்கியமாக விதியின்படி நாம்  அனுபவிக்கிறோம் என்பதை புரிந்து கொண்டால் இது சாத்தியப்படும். ஆத்மாவுடன் நம்மை அடையாளம் காணும்போதே நிரந்தர நீடித்த ஆனந்தத்தை நாம் அனுபவிக்க முடியும்.

ஆத்மாவும் அஞ்ஞானமும் இணைந்ததே ஜீவன். ஒரு உயிருள்ள மனிதனிடம் அஞ்ஞானம், இருபது கூறுகளாக வியாபித்துள்ளது – ஸ்தூல தேஹம், பஞ்ச சூட்சும ஞானேந்த்ரியங்கள், பஞ்ச சூட்சும கர்மேந்த்ரியங்கள், பஞ்ச பிராணன், வெளிமனம், ஆழ்மனம், புத்தி மற்றும் அகம்பாவம். சூட்சும தேஹங்களின் கூறுகளின் செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெறுவதால் ஜீவன் ஆத்மாவை நோக்கி ஈர்க்கப்படாமல் இவற்றை நோக்கி ஈர்க்கப்படுகின்றது. அதாவது ஞானத்திலிருந்து அஞ்ஞானத்தை நோக்கி செல்கிறது.