அட்டவணை

1. நாமஜபத்தின் ஆன்மீக ரீதியான நன்மைகள்

1.1. நாமஜபம் ஆன்மீக நிவாரணமாக செயல்டுபடுதல்

குறிப்பிட்ட சில நாமஜபங்கள் குறிப்பிட்ட சில உடல் உறுப்புகளுடன் தொடர்புபட்டுள்ளது. உறுப்புகளின் கோளாறிற்கான காரணம் ஆன்மீக பரிமாணத்தை சார்ந்ததாயின் நாமஜபத்தினால் அதனை குணமாக்க கூடியதாக உள்ளது. நோயுற்ற உறுப்பினால் உண்டாக்கப்பட்டுள்ள, அசாதாரண இயற்கைக்கு மாறான மற்றும் சமமற்ற அதிர்வலைகள், நாமஜபத்தின் பலனாக உருவாக்கப்படும் குறிப்பிட்ட அதிர்வலைகளால் செம்மையாக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு ஆரோக்கியத்திற்கான நாமஜபங்கள் எனும் பகுதியை பார்க்கவும்.

1.2. நாமஜபத்தினால் விதியினை வெல்ல முடியும்

இறைவனுடைய நாமத்தை சதா சர்வகாலமும் நாம் உச்சரிப்போமானால் விதியின் தீவிரம் குறைவடைந்து அதனை பொறுக்கக்கூடியதாக ஆகிறது. அத்துடன் சஞ்சித கர்மா எனப்படும் இத்தனை காலமும் பல ஜென்மங்களாக நாம் சேர்த்து வைத்த கர்மாவினையும் வெல்ல முடியும்.

நம் விதியின் விளைவை குறைப்பதற்கும் வேகமான ஆன்மீக முன்னேற்றத்திற்கும், நாம் பிறந்துள்ள மதத்தின் இறைவனுடைய நாமத்தை உச்சரிப்பதற்கு பரிந்துரை செய்யப்படுகிறது.

1.3. மூதாதையர்களின் ஆவிகளால் ஏற்படும் ஆன்மீக பிரச்சனைகளை தீர்க்க முடியும்

தற்காலத்தில் காலம் சென்ற மூதாதையருக்கு செய்யவேண்டிய சடங்குகளை யாரும் மேற்கொள்ளாததால், திருப்தி அடையாத அவர்களுடைய மூதாதையர்களின் சூட்சும தேகங்களால் அவர்கள் கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள். திருமணமாகாது இருத்தல், கணவன் மனைவியிடையே முரண்பாடு, கருத்தரிக்க முடியாமல் இருத்தல், கருச்சிதைவு ஏற்படுதல், கற்பதில் குறைபாடுகள் போன்றன, மூதாதையர்களால் ஏற்படும் பிரச்சனைகளின் அறிகுறிகளாகும்.

காலம் சென்ற மூதாதையர்களால் ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து பாதுகாப்பினை பெறுவதற்கு, பாதுகாப்பளிக்கும் நாமஜபமான ‘ஸ்ரீ குருதேவ் தத்த’ எனும் நாமஜபத்தை உச்சரிப்பதற்கு பரிந்துரை செய்கின்றோம். மேலும் விரிவான விவரங்கள், “நான் எவ்வாறு மூதாதையர் பிரச்சனைகளிலிருந்து என்னை பாதுகாக்க முடியும்?” எனும் கட்டுரையில் வழங்கப்பட்டுள்ளது.

‘ஸ்ரீ குருதேவ் தத்த’ நாமஜபத்தை உச்சரிக்க தொடங்கி, புகை மற்றும் மது பழக்கத்திலிருந்து மீண்ட சிரியாக் என்பவரின் ஆய்வு அறிக்கையை படிக்கவும்.

1.4. வளாகத்தை தூய்மைப்படுத்தும் நாமஜபம்

நாமஜபத்தின் மூலம் உருவாக்கப்படுகின்ற ஆன்மீக சக்தியினால் நாம் வாழும் இடமும் (வாஸ்து) பரிசுத்தமாக்கப்படுகிறது. துன்புறுத்தும் அதிர்வலைகளை நம்முடைய வீட்டில் நாம் உணர்வோமானால், அதி நுட்ப  ஆறாவது அறிவு அல்லது சூட்சும பரிமாணத்தை உணரும் ஆற்றல் கொண்ட ஒருவரை ஆலோசிக்க வேண்டும். இதற்காக எந்த நாமஜபத்தை உச்சரிப்பது என அவர்களால் அறிவுரை வழங்க முடியும். இது சாத்தியம் இல்லாவிடில் நாம் பிறந்த மதத்திற்குரிய நாமஜபத்தை கஷ்டத்தின் தீவிரத்தை பொறுத்து 20-60 நிமிடங்கள் வரை உச்சரிக்கலாம்.

1.5. நாமஜபம் ஆன்மீக கஷ்டத்தை நீக்குகிறது

தீய சக்திகளின் காரணமாக நாம் உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ சில தடைகளை வாழ்வில் தொடர்ச்சியாக எதிர்நோக்க வேண்டியுள்ளது. வெளித்தோற்றத்தில் இது பௌதீக, உளவியல் அல்லது உலக ரீதியான காரணங்கள் போல நமக்கு தோன்றினாலும் உண்மையான காரணம் தீய சக்திகளால் ஏற்படுத்தப்படும் தொந்தரவுகள் ஆகும். இவ்வாறான துயரங்கள் ஏற்படும்போது எப்பேற்பட்ட நிவாரணங்களை பௌதீக ரீதியில் மேற்கொண்டாலும் துன்பங்கள் முழுமையாக நீங்காது. இது மலேரியா வியாதிக்கு ஒப்பானது. மலேரியாவை, காய்ச்சலுக்கு உட்கொள்ளும் மருந்துகளால் குணப்படுத்தமுடியாது. மலேரியாவை எதிர்க்கும் குறித்த சில மருந்துகளால் மட்டுமே மலேரியா கிருமிகளை அழித்து நோயினை குணப்படுத்த முடியும். சாதகர்களின் ஆன்மீக பயிற்சிக்கு தீய சக்திகளால் தடைகள் ஏற்படுத்தப்படுவதால் ஆன்மீகப்பயிற்சியில் எதிர்பார்த்த பலன்களை அவர்களால் அடையமுடியாமல் உள்ளது. நாம் இறைவனுடைய நாமத்தை உச்சரிக்கும்போது அதிலுள்ள குறித்த தெய்வ தத்துவம் நம்மை நோக்கி ஈர்க்கப்பட்டு நமக்கு தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பினை அளிக்கிறது.

தற்போதைய காலகட்டத்தில் 2025 வரையில். ஸ்ரீ கிருஷ்ணருடைய தத்துவம் மிகவும் அதிக அளவில் செயல்பாட்டிலே உள்ளதால் ‘ஓம் நமோ பகவதே வாசுதேவாய’ எனும் நாமஜபத்தை தினமும் இரண்டு மணிநேரம் உச்சரிக்கலாம்.

1.6 நாமஜபத்தின் மூலம் துயரங்கள் தவிர்க்கப்படுகின்றன

அ. நமது துயரங்களின் மூல காரணம் பல்வேறு பொருட்களின் மீது நமக்குள்ள பற்று ஆகும். நாமஜபத்தின் மூலம் இறைவன் மீது அன்பு ஏற்பட்டு உலக பொருட்கள் மீது நமக்குள்ள பற்று குறைவடைந்து, துன்பங்கள் நீங்குவதால் நம்மால் ஆனந்தத்தை அனுபவிக்க முடிகிறது.

ஆ. இறைவனானவன் நிரந்தர ஆனந்தத்தின் பிறப்பிடம் என்பதால் அவருடைய நாமத்தை உச்சரிக்கும் போது கண்டிப்பாக நம்மால் ஆனந்தத்தை அனுபவிக்க முடிகிறது.

1.7 நாமஜபத்தின் மூலம் சித்திகள் எனப்படும் ஆன்மீக ஆற்றல்களை பெற முடியும்

சித்திகள் எனப்படுபவை இயற்கைக்கு அப்பாற்பட்ட தெய்வீகத்தன்மை வாய்ந்த சக்திகளாகும். நாமஜப ஆன்மீக பயிற்சி மூலம் குறித்த ஒரு தெய்வ தத்துவத்தை கட்டுப்படுத்த முடிவதால் அதற்கு ஏற்றாற்போல் குறித்த சித்திகளை அடையமுடியும். உதாரணமாக, சூரிய தேவனின் நாமத்தை உச்சரிப்பதால் தேஜ அல்லது அக்கினி தத்துவத்தின் மீது கட்டுப்பாட்டை ஏற்படுத்தமுடிவதால் வெப்பத்தினால் நாம் பாதிக்கப்படுவதில்லை. சித்திகள் ஆன்மீகப்பயிற்சியால் ஏற்படும் விளைவுகளே தவிர, அதுவே இறுதி இலக்கு அல்ல.

1.8 இறந்தபின்பு கூட நாமஜபம் ஆன்மீக ரீதியில் நன்மை பயக்கும்

தொடர்ச்சியான நாமஜபத்தால் ஆழ்மனத்தினில் பக்தி மையம் உருவாக்கப்படுகிறது. இறக்கும்போது இது சூட்சும தேகத்தோடு பயணிக்கிறது. ஆகவே இறந்த பின்பு கூட நாமஜபம் தொடர்கிறது. இது மறுமையில் நமக்கு பாதுகாப்பு அளிப்பதோடு மேல்நோக்கிய பயணத்திற்கு தூண்டுகோலாக செயல்படுகிறது.

2. ஆன்மீகப்பயிற்சி தொடர்பான நாமஜபத்தின் நன்மைகள்

2.1. நினைவில் வைத்துக்கொள்வதும் தியானமும் நாமஜபத்தின் போது ஏற்படுகிறது

நாம் இறைவனை நினைப்பதால் நாமஜபம் செய்கின்றோம். நாமஜபம் செய்யும்போது இயற்கையாகவே இறைவனுடைய நினைவு (தியானம்) ஏற்படுகிறது.

2.2. நாமஜபத்தினால் உள்முக மனப்பான்மை விருத்தியடைகிறது

நமது உள்முக மனப்பான்மை நாமஜபத்தினால் முன்னேறுகிறதாயின் நாம் ஆன்மீக ரீதியில் முன்னேறுகிறோம் என்பது அர்த்தம். பௌதீக உலகு தொடர்பான விஷயங்களில் விருப்பு குறைவடைந்து நம்முள்ளே நம்மை ஆய்ந்தறிய தொடங்குவோம். இது ஆன்மீகப்பயிற்சிக்கு மிகவும் உறுதுணையாக அமையும் உள்முக மனப்பான்மை விருத்தியடைய உதவுகிறது.

2.3. நாமஜபம் ஒரு பூரணமான ஆன்மீக பயிற்சி ஆகும்

பூரணமான ஆன்மீகப்பயிற்சி என்பது மனம் மற்றும் புத்தியின் செயல்பாட்டுக்கு இணங்கி இருப்பதாகும். நாமஜபம் அவ்வாறான ஒரு பூரணமான ஆன்மீகப்பயிற்சி ஆகும். இதை யார் வேண்டுமானாலும் எங்கும் எப்பொழுதும் செய்ய முடியும். ஆகையால் இயற்கையாகவே இறைவனின் எண்ணங்களில் நிலைத்திருக்க சிறந்த ஒரு வழிமுறையாகும். இந்நிலையானது, ஆழ்மனதில் நாமஜபம் மிகவும் ஆழமாக நடைபெற்று கொண்டிருக்கும் சிலருக்கு ஏற்படுகிறது. இதன்மூலம் அவர்கள் இறைதத்துவத்துடன் தொடர்ச்சியாக ஒன்றுபட்டிருப்பார்கள்.

2.4. நாமஜபத்தின் மூலம் நம்பிக்கையும் ஆன்மீக உணர்வும் அதிகரித்தல்

இறைவனின் நாமத்தை திரும்ப திரும்ப உச்சரிக்கும் போது அதனுடன் இறைநாமத்தின் மீது நம்பிக்கையும் இருப்பதால் ஆன்மீக அனுபவம் ஏற்படுகிறது. நாமஜபத்தினால் ஏற்படும் ஆன்மீக அனுபவங்கள் ஒருவரின் நம்பிக்கையையும் பக்தியையும் வலுப்படுத்துகிறது. இறைவனின் நாமம் நமக்கு எல்லாவற்றையும் தரும் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையை கொண்டோமானால், இறைவனை சேர வேண்டுமென்ற தீவிர ஏக்கத்தோடு நாமஜபம் நடைபெற்று ஆன்மீக உணர்வையும் விரைவாக விருத்தியடைய உதவுகிறது. ‘எங்கு ஆன்மீக உணர்வு உள்ளதோ அங்கு இறைவன் பிரசன்னமாகிறான்’ என்று ஒரு பழமொழி உள்ளது, ஆகையால் ஆன்மீகத்தில் இந்த ஆன்மீக உணர்வை விருத்தி செய்தல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இறைவன் மீதுள்ள நம்பிக்கை வலுப்படுதல்: தினமும் வேலை முடிந்து வீட்டிற்கு வரும் வழியில் பேருந்து நிலையத்திலிருந்து 10 நிமிடங்கள் வீடு வரை நடந்து செல்வேன். வேலை தாமதமாகி முடியும்பொழுது இருட்டில் தனித்தே வீட்டிற்கு நடந்து வரும் சூழ்நிலை ஏற்படும்பொழுது மிகவும் பயப்படுவேன். என்னை யாரும் தொடர்ந்து வருவார்களோ அல்லது தாக்குவார்களோ எனும் பயத்தில் வேகமாக நடந்து செல்வேன். இறைநாமத்தை உச்சரிப்பது பற்றி அறிந்தபின் வீட்டிற்கு வரும்பொழுது நாமஜபம் செய்துகொண்டு, இறைவனிடம் பாதுகாப்பு வேண்டி பிரார்த்திப்பேன். அதன்பின் ஏதேனும் நடந்துவிடுமோ எனும் பயம் நீங்கி இறைவனே என்னுடன் நடப்பது போல் இருக்கும். இதன்மூலம் என்னிடமிருந்த அந்த பதட்ட மனநிலை பெரிதும் நீங்கி இறைவன் மீதுள்ள நம்பிக்கை வலுப்பட்டது. – திருமதி ராதா மாலிக், வான்கூவர், கனடா

2.5. எதிர்பார்ப்பில்லாத நாமஜபம் புண்ணியத்தையும் கரைகின்றது

உலக ஆதாயங்கள் மீது எதிர்பார்ப்பு இல்லாது நாமஜபம் செய்வோமானால் ஆன்மீக உணர்வு விருத்தியடைந்து இறைவன் மீதுள்ள அன்பு காரணமாக இறுதியில் அவரையே அடைகின்றோம். இறைவனை உணர்ந்த பின் ஏற்படும் அளவில்லாத ஆனந்தத்தால் நம்முடைய எல்லா புண்ணியங்களும் கரைந்து போகின்றன. அந்த நிலையில் புண்ணியங்கள் கூட மோக்ஷம் அடைய தடையாக இருக்கின்றன. இந்நிலையில் அனுபவிக்கப்படும் பக்தியின் சாரமானது நமக்கும் நம்மை சுற்றி இருப்பவருக்கும் பயனளிக்கின்றது.

2.6. நாமஜபம் பாவத்தை நீக்குகிறது

பல ஜென்மங்களின் பாவங்களை நீக்கும் எளிமையான கருவி நாமஜபமாகும். – மகான் துக்காராம் மஹராஜ்

இறைவனின் நாமம் எண்ணற்ற பாவங்களை எரிக்கும் மகத்தான வலிமையை கொண்டது. இறைவனின் நாமத்தால் செயலிழக்கப்பட முடியாத பாவங்களை மனிதனால் செய்யமுடியாது என கூறப்படுகிறது.

நாராயன்காவ், மஹாராஷ்டிராவை சேர்ந்த மகானான பூஜ்ய காணே மஹராஜ் அவர்கள் நாமஜபத்தின் மூலம் பாவங்கள் நீக்கப்படும் இயலுமையை பற்றி பின்வருமாறு கூறுகிறார், ‘நாம் நாமஜபம் செய்ய தொடங்கும் முன் புரிந்த பாவங்கள் நீங்குகின்றன. நாமஜபம் செய்ய தொடங்கியபின் பாவங்கள் செய்யப்பட்டால் மறுபடியும் நாமஜபம் செய்யும்வரை பாவங்கள் நிலைத்திருக்கும். திரும்ப நாமஜபம் செய்ய தவறுவோமாயின் அந்த பாவங்களின் விளைவுகளை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

தெரியாமல் செய்த பாவங்களை நாமஜபத்தினால் நடுநிலைப்படுத்த முடியும். ஆனால், வேண்டுமென்றே அறிந்து செய்த பாவங்களை நாமஜபத்தால் நீக்க முடியாது.

பாவங்களை போக்குவதில் பிராயச்சித்தங்களை விட நாமஜபம் மேன்மையானது. காரணம், பிராயச்சித்தம் செய்வதால் செய்த பாவம் நீங்குமே தவிர பாவம் செய்யும் மனப்பான்மை நீங்காது. மோக்ஷமடைவதற்கு தீவிரமான உந்துதலை நம்முள் உருவாக்குவோமானால் பாவம் செய்யும் விருப்பம் நிறுத்தப்பட்டு பாவங்கள் நீக்கப்படுகின்றன.

2.7. நாமஜபம் ஒரு கர்மாவை அகர்ம கர்மாவாக மாற்றுகிறது.

எந்த ஒரு உலகியல் பரிவர்த்தனைகளிலும், கொடுக்கல் வாங்கல்கள் விளைவுகளை குறைப்பதற்கு உன்னிப்பாக முயற்சிகள் இருந்த போதிலும், துல்லியமான பரிமாற்றம் ஒன்றை செய்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. சுருக்கமாக சொல்வதாயின் கொடுக்கல் வாங்கல்கள் விளைவு என்றுமே நிலைத்திருக்கும். இதனை தவிர்க்க செயலற்ற தன்மை எனப்படும் அகர்ம கர்மா நடைபெற வேண்டும்.

எந்தவொரு செயலும் இறைவனின் நாமத்தை உச்சரித்துக்கொண்டே நடத்தப்பட்டால் அது அகர்ம கர்மாவாக மாறுகிறது. இந்த செயலற்ற நிலையால் ஒருவர் செயலை செய்தாலும் பாவத்தையோ புண்ணியத்தையோ அடைவதில்லை. இதன் விளைவாக ஒருவர் தனது விதியினை அனுபவித்து முடிப்பதோடு பிறப்பு இறப்பு சுழற்சியிலிருந்து விடுதலை பெறுவதும் துரிதப்படுத்தப்படுகிறது.

2.8. நாமஜபம் ஆழ்மனத்தை தூய்மையாக்கி ஆன்மீக ஞானத்தை பெறுவதற்கு சாதகமாக மாற்றுகிறது

எவ்வாறு நல்ல அறுவடையை பெறவேண்டுமாயின் ஒருவர் நிலத்தை உழுது பண்படுத்த வேண்டுமோ அவ்வாறே, ஞானம் என்பது தூய்மைப்படுத்தப்படாத சூட்சும தேகத்தை ஊடுறுவாது.

2.9. நாமஜபத்தினால் ஆன்மீக முன்னேற்றம் துரிதப்படுத்தப்படுகிறது

பல நிறங்களை காண்பது, ஒளியினை காண்பது அல்லது வேறுபட்ட ஒலிகளை கேட்பது போன்ற ஆன்மீக அனுபவங்களை பெற்றபின் பலரும் தமது ஆன்மீக பயிற்சியில் தேக்க நிலை அடைகின்றனர். அத்துடன் இறைவனின் பாதுகாப்பு குறைவாக காணப்படுவதால், தீய சக்திகளால் தவறாக வழிநடத்தப்படவும் வாய்ப்புள்ளது. இறைவனின் நாமத்தை உச்சரிப்பது அவ்வாறான அனுபவங்கள் அனைத்தையும் கடந்து நம்மை இறைவனிடமே நேரடியாக கொண்டு சேர்க்கிறது.

2.10. நாமஜபத்தின் மூலம் ஆணவம் நீங்குதல்

நெருப்பிற்கு அருகில் வைக்கப்பட்ட நெய் எவ்வாறு உருகிப்போகிறதோ நாமஜபம் எனும் தீயினால் ஆணவம் இல்லாமல் போகிறது.

நாம் தத்தெடுக்கப்படும் பொழுது வளர்ப்பு பெற்றோர்களின் சொத்துக்களில் உரிமை பெறும் பொருட்டு பழைய பெயரை விடுத்து புதிய பெயரை ஏற்கின்றோம். அதுபோலத்தான் இறைவனின் கருணையை பெறவேண்டுமாயின் நமது ஆணவத்தை தியாகம் செய்து, நமது பெயரினை மறந்து அதற்கு பதிலாக அவருடைய பெயரை நினைவில் கொள்ளவேண்டும் (அதாவது இறைவனின் பெயரை நாமஜபம் செய்தல்). இவ்வாறாக இறைவனின் நாமத்தை உச்சரிப்பதில் ஊன்றிப்போய் நம்மைப்பற்றிய நினைவுகள் அற்றுப்போய் இறுதியில் அவருடைய நாமத்துடனேயே கலந்து போகின்றோம். – பரம்பூஜ்ய பக்தராஜ் மஹராஜ்

2.11. நாமஜபத்தின் மூலம் குருவின் அருளை பெறுதல்

எந்த நாமத்தை உச்சரிக்க வேண்டுமென்று குருவிடமிருந்து நேரடியாக பெறுவது மிகப்பெரிய அதிர்ஷ்டமாகும். குருவை காணமுடியாவிட்டால் கூட நாமஜபத்தை தொடர வேண்டும். இது ஏனென்றால் நாமஜபத்தின் மூலமே நாம் குருவினை கண்டு கொள்வோம்.

2.12. நாமஜபத்தின் மூலம் இறைவனுடன் ஒன்றாக முடியும்

நாமஜபம் செய்யுமொருவர் இறைவனின் நாமத்துடன் அல்லது அவர் உச்சரிக்கும் நாமத்திற்குரிய தெய்வத்துடன் ஒன்றாக முடியும். நாமம், இறைவன், நாமஜபம் செய்பவர் ஆகிய மூன்றும் ஒன்றாகிய பின் அத்வைதம் எனப்படும் இருமை அற்ற தன்மை அடையப்படுகிறது.

3. சுருக்கம்

நாமஜபமானது நம்முடைய ஆன்மீக ரீதியான பிரச்சனைகள் அனைத்தையும் நீக்கி நமது மறுவாழ்வினையும் கவனித்துக்கொள்கிறது.

தொடர்ச்சியாக செய்யக்கூடிய ஒரே ஒரு ஆன்மீகப்பயிற்சி நாமஜபம் ஆகும். உதாரணமாக, தியானம் செய்தல், யோகா பயிற்சி செய்தல், பக்திப்பாடல்களை இசைத்தல், யாத்திரைகளுக்கு செல்லுதல் போன்றவற்றை 24 மணிநேரம் செய்ய முடியாது. ஆனால் வீட்டினை கவனித்துக்கொள்ளுதல், பிள்ளைகளை பராமரித்தல், வேலைக்கு செல்லுதல் போன்ற நமது உலகியல் பொறுப்புக்களை நிறைவேற்றிக்கொண்டே நாமஜபத்தினை செய்யக்கூடியதாக உள்ளது. இறைவனுடன் இணைய வேண்டுமாயின் நாம் தொடர்ச்சியான அளவற்ற ஆன்மீக பயிற்சியினை மேற்கொள்ளவேண்டும். இது நாமஜபத்தினால் மட்டுமே சாத்தியமாகும்.

அத்துடன் நாமஜபம் ஆழ்மனதையும் தூய்மைப்படுத்தி நம்முடைய கடந்த ஜென்ம மற்றும் நிகழும் ஜென்மத்தின் பாவ புண்ணியங்களை எரித்து பிறப்பு இறப்பு எனும் சுழற்சியிலிருந்து நமக்கு விடுதலை அளிக்கிறது. நாமஜபம் நமது ஆணவத்தை நீக்கி நம்பிக்கையையும் பக்தியையும் நம்மில் விருத்தி அடையச்செய்து நம்மை சுற்றி இருப்பவருக்கும் நன்மை அளிக்கிறது.