1. முன்னுரை

ஒருவர் தன்னுடைய ஆளுமையை மேம்படுத்த மற்றும் தன் ஸ்வபாவ தோஷங்களை வெற்றிகொள்ள விரும்பினால், முதலில் ஆளுமையின் இயல்பைப்பற்றி புரிந்து கொள்ள வேண்டும். மேலும் எப்படி ஒவ்வொரு மனிதனின் ஆளுமையில் மற்றும் மனதில் ஆன்மீக பரிமாணத்தால் தாக்கம் ஏற்படுகிறது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். பிறரால் விரும்பப்படுவதற்கு முக்கியத்துவம் கொடுத்து, அதனை வலியுறுத்தும் நம் கலாசாரத்தில் ஆளுமையைத் தவிர வேறு எதுவும் முக்கியம் கிடையாது. பொதுவான நோக்கில் ஆளுமை என்பது ஒரு தனி நபரின் வசீகரிக்கும் தன்மையாக கருதப்படுகிறது.

2. ஒரு தனி நபரின் ஆளுமையை வரையறை செய்வது எது?

ஆளுமை என்றால் என்ன மற்றும் அதனுள் அடங்கியிருப்பது என்னென்ன?

மனிதர்களுக்கு செயல்படக்கூடிய உடல் மற்றும் மனம் உள்ளது. சிந்தனை, உணர்ச்சிகள் போன்றவை மனதின் சில பண்புகள் ஆகும். அதேபோல் உடல் அசைவுகள், சுரப்புகள், உஷ்ணநிலை போன்றவை உடலின் சில பண்புகள் ஆகும். மனதின் அல்லது உடலின் நடத்தைகள் மூன்று வகைப்படும் – அவ்வப்பொழுது வெளிப்படுவது, குறுகிய காலம் வெளிப்படுவது அல்லது தொடர்ந்து வெளிப்படுவது.

  • அவ்வப்பொழுது வெளிப்படும் நடத்தை: அவ்வப்பொழுது வெளிப்படும் நடத்தைகள் தற்காலிகமாகும். உதாரணமாக, தேர்வுக்கு செல்லும் ஒரு மாணவன் அனுபவிக்கும் பதற்றம் அவனுடைய மனதின் அவ்வப்பொழுது வெளிப்படும் நடத்தையாகும். அரிப்பது, நடப்பது ஆகியவை உடலின் அவ்வப்பொழுது வெளிப்படும் நடத்தைகள் ஆகும்.
  • குறுகிய கால நடத்தை: குறுகிய கால நடத்தை என்பது சில வாரங்களுக்கு மேற்பட்ட ஆனால் ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடத்திற்கு குறைவான காலத்திற்கு கவனிக்கப்பட்ட நடத்தை ஆகும். உதாரணமாக, அன்புக்குரிய ஒருவரின் மரணத்தால் சில மாதங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் ஒருவரின் நடத்தை குறுகிய கால நடத்தை ஆகும்.
  • தொடர்ந்து வெளிப்படும் நடத்தை: ஒரே வகையான நடத்தை பல வருடங்களாக விடாப்பிடியாக நீடித்தால் அது தொடர்ந்து வெளிப்படும் நடத்தை அல்லது நாள்பட்ட நடத்தை என்று குறிக்கப்படும்.

அவ்வப்பொழுது வெளிப்படும் நடத்தை மற்றும் குறுகிய கால நடத்தை ஒருவரின் வாழ்க்கையை பெரிதும் பாதிப்பதில்லை. ஆனால், ஒருவரின் ஆளுமையின் அங்கமான தொடர்ந்து வெளிப்படும் நடத்தை அல்லது நாள்பட்ட நடத்தை வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

3. ஆளுமையை புரிந்து கொள்ள சில தகவல்கள்

ஒருவரிடம் ஒரு பண்பு நீண்ட காலமாக கவனிக்கப்படவில்லை என்றால் நாம் அதை அவரின் ஆளுமையின் ஒரு அங்கமாக கருதுவதில்லை. சில சமயங்களில் இது தவறாகலாம். உதாரணமாக, ஒரு மனிதன் அவன் குடும்பம் கொலை செய்யப்பட்ட பிறகு பழி வாங்கும் பண்புள்ளவனாக மாறலாம். இந்த மாற்றம் நடந்து சில நாட்களுக்குள் அல்லது சில வாரத்திற்குள் அவன் ஒரு மனோதத்துவ நிபுணரிடம் சென்றால் அவனது ஆளுமையை விவரிக்க பழி வாங்குதல் என்னும் பண்பு உபயோகிக்கப்படாது. ஏனென்றால், இந்த பழி வாங்கும் எண்ணம் அவனிடம் நீண்ட காலமாக இல்லை. சில வருடத்திற்கு பிறகு அவனை காணும்போது பழி வாங்கும் பண்பு நீடித்திருந்தால், அப்போது பழி வாங்குதல் என்னும் பண்பு அவன் ஆளுமையின் ஒரு அங்கமாக உறுதி செய்யப்படும். ஆகவே கெட்ட பண்புகளை முளையிலேயே கிள்ளி எறிந்து விட வேண்டும். இல்லை என்றால் அவை ஒழுக்கமற்ற நடத்தையில் கொண்டுவிடக்கூடும். சில தீவிரமான சந்தர்ப்பங்களில் சமுதாயத்திற்கு தீங்கு விளைவிற்கும் அபாயமும் உண்டு.

ஆளுமையிற்கு பல வரையறைகளை இந்த துறையில் உள்ள பல்வேறு உளவியல் நிபுணர்கள் மற்றும் வல்லுனர்கள் கொடுத்துள்ளார்கள்.

எனினும் இவ்வரையறைகளின் சாரம் என்னவென்றால், ஆளுமை என்பது ஒரு நபரின் தொடர்ந்து வெளிப்படும் அல்லது நீண்ட காலமாக வெளிப்படும் நடத்தைகளை தீர்மானிக்கும் பண்புகளின் தனிப்பட்ட கலவையாகும். இதனுள் அனைத்து விதமான உடலின் மற்றும் மனதின் நடத்தைகள் அடங்கும். இவை கீழ்காணுமாறு ஐந்து தலைப்புகளில் பிரிக்கப்பட்டுள்ளது:

அ. உடலமைப்பு, உயரம், எடை போன்ற அம்சங்கள், ஆரோக்கியம், பிராணசக்தி மற்றும் இவைகளை பற்றி ஒருவரின் சுய மதிப்பீடு.

ஆ. மனதின் தன்மைகள் (அதாவது ஒருவரின் இயல்பு) – முன்கோபம், மறதி, சுத்தமின்மை, கூச்சம், சந்தேகப்படுவது, பிடிவாதம், தாராளம், நம்பகத்தன்மை, பகல் கனவு காண்பது போன்றவை

இ. விருப்பு வெறுப்புகள்

ஈ. உள்ளுணர்வுகள், ஆசைகள், உந்துதல்கள், ஏக்கங்கள், லட்சியங்கள், அவா போன்றவை

உ. புத்தி, அறிவு, நம்பிக்கைகள், அவநம்பிக்கைகள், உறுதியான கருத்துக்கள், மனப்பான்மை, அபிப்ராயங்கள், எண்ணங்கள், கொள்கைகள் போன்றவை

4. ஆளுமையை மதிப்பிடுவதில் ஒரு நடைமுறை கண்ணோட்டம்

ஆளுமை என்பது வெறுமனே மேலே கூறப்பட்டுள்ள பண்புகளின் கூட்டு அல்ல. மாறாக, ஒருவரின் தனிப்பட்ட மற்றும் தொடர்ந்து வெளிப்படும் நடத்தையை நிர்ணயிக்கும் பண்புகளின் அமைப்பாகும். ஒரு குணம் ஒருவரிடம் குறைந்தபட்சம் ஆறு மாதங்களிலிருந்து ஒரு வருடம் வரை காணப்பட்டு அவரின் தினசரி செயல்பாட்டை பாதிக்குமானால் அதனை நாம் அவரின் தன்மை, குணம் அல்லது சுபாவம் என்கிறோம். இதில் சிறிது காலம் மட்டுமே இருக்கும் அவ்வப்பொழுது வெளிப்படும் நடத்தை மற்றும் குறுகிய கால நடத்தை சேர்க்கையில்லை.

ஒருவரிடம் நூற்றுக்கணக்கான பண்புகள் இருக்கலாம். ஆயினும் அனுபவத்தில் நாம் கண்டது என்னவென்றால் பெரும்பாலும் ஒருவரின் ஆளுமையை தீர்மானிப்பது இருபதிலிருந்து ¬¬முப்பது பண்புகளே ஆகும். அவருடைய மற்ற பண்புகள் ஒரு சராசரி நபருடையதை போலவே இருப்பதால் அவற்றை கணக்கில் எடுக்க தேவையில்லை.

5. ஆளுமை என்பது பன்முகம் கொண்டது மற்றும் சத்சங்கத்தில் இருப்பதன் முக்கியத்துவம்

ஒருவரின் ஆளுமை சிசு பருவம், ஆரம்பகால குழந்தை பருவம், விளையாடும் வயது, பள்ளி வயது, பூப்பு பருவம், விடலை பருவம், இளமை, நடுவயது மற்றும் முதிர்ச்சி என்னும் எட்டு நிலைகளிலும் தொடர்ந்து உருவாக்கப்படுகிறது. எனவே, ஆளுமை என்பது ஒரு நிலையான நிகழ்வு இல்லை. மாறாக, இது கருவுற்ற நொடியில் ஆரம்பித்து ஒருவரின் கடைசி மூச்சு வரை தொடரும் ஒரு பன்முக தொடர் செயல்பாடு ஆகும். இதன் அர்த்தம் என்னவென்றால், காலம் செல்ல செல்ல ஒருவரின் ஆளுமையில் சில பண்புகளின் ஆதிக்கம் குறையலாம், சில பண்புகளின் ஆதிக்கம் வலுவடையலாம், சில பண்புகள் மறையலாம், சில பண்புகளுக்கு பதிலாக வேறு பண்புகள் தோன்றலாம் அல்லது முற்றிலும் புதிதான பண்புகள் தோன்றலாம்.

குழந்தை பருவத்திலிருந்து விடலை பருவத்திற்கு செல்லும்போது, ஒரு இளைஞன் காதலில் விழும்போது, திருமணத்தின் ஊடாக, குழந்தைகளை பெற்றெடுப்பதின் ஊடாக, மதத்தின் மேல் நம்பிக்கை உண்டாவதால் அல்லது இழப்பதால், அல்லது மாறும் அரசியல் சார்புகளால் ஒருவரின் ஆளுமையில் மாற்றம் வரலாம்.

நாம் பல பண்புகளை மற்றவர்களை பின்பற்றி பெறுகிறோம். தந்தை முன்கோபியாக இருந்தால் மகனும் அவரை போலவே கோபம் காட்டலாம். ஒரு விடலை பையனுக்கு திருடும் மற்றும் புகைப்பிடிக்கும் மற்ற விடலைகளிடம் தொடர்பு இருக்குமானால், அப்பையனும் அவர்களின் நடத்தையை முன்மாதிரியாக கொண்டு அதனை பின்பற்றலாம். அலுவலகத்தில் ஊழல் செய்யும் மற்றவர்களை எடுத்துக்காட்டாக கொண்டு நேர்மையான ஒரு நபரும் ஊழல் செய்ய பழகலாம். இவ்வாறு, ஒரு நபரின் சகவாசம் அவரின் ஆளுமையின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, சத்சங்கத்தில் இருப்பது (நிலையான சத்தியத்தை கோருவோருடன் இருப்பது) ஆரோக்கியமான ஆளுமையின் வளர்ச்சியில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.